பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 24 நவம்பர், 2013

ஏற்காடு குளுர என்ஜாய் பண்ணிட்டு வாங்க....

"ஹலோ, அண்ணே உங்கள பார்க்கனும், எங்க இருக்கிங்க ?"
" நான் ஏற்காடு இடைத்தேர்தல்ல இருக்கேன். வோட்டுப் பதிவு முடிஞ்சு தான் வருவேன். வந்து தான் பார்க்கனும்"
"அப்படியா, நல்லா ஜாலியா குளுர என்ஜாய் பண்ணிட்டு வாங்க"

இப்படி தான் நாடே நினைச்சிக்கிட்டு இருக்கு......நாங்க ஏற்காடு மலை மேல இருக்கோம்னு....
நானும் மலைப்பகுதியில் தான் இருக்கேன். எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிற பகுதியை சுற்றி மலை இருக்கிறது. என்ன, மலை சைஸ் தான் கம்மி. ஆமாம் முப்பதடி உயரத்திற்கு மலை.

ஏற்காடு தொகுதின்னா ஏற்காடு மலை மேலேயே இருக்குன்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்க. மலை மேலே 15,000 வோட்டு தான் இருக்கு. மீதி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள், மலைக்கு கீழே தான் இருக்கின்றன.

ஏற்காடு தொகுதியில் ஏற்காடு ஒன்றியம், அயோத்தியாபட்டினம் ஒன்றியம், வாழப்பாடி ஒன்றியம், பெத்தநாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் சில ஊராட்சிகள் என உள்ளடங்கியவை.

உளுந்தூர்பேட்டை - ஆத்தூர் - சென்னை சாலையில் தலைவாசல் தாண்டிய உடனேயே ஏற்காடு தொகுதி துவங்கிவிடும். சேலம் மாநகர எல்லை வரை செல்லும். சேலம் செல்லும் முன் அயோத்தியாப்பட்டிணம் உள்ளது. அதை ஒட்டி உள்ள அரூர் பாதையை ஒட்டி ஒரு மலைப் பாதை செல்லும். அதுவும் ஏற்காடு செல்லும் சாலையே.

சேலம் நகருள் சென்று செல்வதே ஏற்காட்டின் முதன்மைப் பாதை. ஏற்காட்டின் தட்பவெட்பம் வேறு, கீழே வேறு. ஆனாலும் அயோத்தியாப்பட்டிணத்தை ஒட்டியப் பகுதிகளில் சிறுசிறு குன்றுகள் இருப்பதால், அங்கு கொஞ்சம் குளிர்ச்சியான தட்பவெப்பம் தான்.

நாங்கள் இருப்பது அயோத்தியாப்பட்டிணத்தை ஒட்டி இருக்கும் பகுதி, எனவே கொஞ்சம் குளிர்ச்சியை நாங்களும் அனுபவிக்கிறோம். ஒரு வாரத்தில் பலருக்கும் முகம் கருத்து விட்டது. சிலருக்கு சளி கோர்த்து விட்டது.

இன்னும் பசுமையாய் இருக்கும் பகுதி இது. மரவள்ளிக் கிழங்கு என்னும் குச்சிக்கிழங்கு முதன்மை பயிர். குச்சியை முதன்மையாகக் கொண்ட சேகோ தொழில் ஆத்தூர் பகுதியில் முக்கியத் தொழில். பாயசத்தில் பயன்படுத்தும் "ஜவ்வரிசி" தான் சேகோவின் முதன்மை தயாரிப்பு.

தென்னை, பாக்கு, மஞ்சள், துவரை என பல பயிர்கள் இங்கு உண்டு. ஆனால் மக்கள் ஒரே ரகம் தான். சாதிகள் பல இருக்கலாம், மதங்கள் பல இருக்கலாம், ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். ஆனால் இந்தப் பகுதி மக்கள் ஒரே ரகம் தான், உழைப்பாளிகள்.
# ஏற்காடு, ஏற்றமிகு மக்களின் காடு, நாடு, வீடு !


                        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக