பாட்சா என்று சொன்னால் காலம் கடந்தும் பதறுகிறது அதிமுக.
மின் துறைக்கான மானியக் கோரிக்கையில் உரையாற்றினேன். அப்போது சூரிய ஒளி மின்சாரம் குறித்து குறிப்பிட்டேன்.
"மாநிலத்தின் மின்சாரத் தேவைக்கான மின்சாரத்தை வாங்கும் போது Renewable Energy Purchase Obligation என்ன சொல்கிறது ? 0.05 சதவீதம் சூரிய மின்சக்தியைத்தான் வாங்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதானி நிறுவனத்தோடு ஒப்பந்தம் எவ்வளவு போடப்படுகிறது ?
அதுவும் எவ்வளவு தொகைக்கு போட்டிருக்கிறார்கள்? 7 ரூபாய் 1 பைசாவிற்கு வாங்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதே மின்சாரம் மத்தியப் பிரதேசத்தில் எவ்வளவு? 5 ரூபாய். தெலுங்கானாவில் எவ்வளவு ? ரூபாய் 6-க்கும் குறைவு. இதை ஒப்பிட்டால் .... 7ரூபாய் 1பைசாவிற்குப் போட்ட ஒப்பந்தம், அதானி நிறுவனத்தோடு--- எந்த அதானி---- நம்முடைய பிரதமர் மோடி அவர்களுடைய மனம் கவர்ந்து அதானி..."
நான் பேசிக் கொண்டிருக்கும் போதே எழுந்து நின்று விட்டார் அமைச்சர் நத்தம். Renewable energy purchase obligation குறித்து நான் பேசியதை அவர் எதிர்பார்க்கவில்லை. அடுத்து மின்சாரம் வாங்கும் விலையை பட்டியலிட்டது, அவருக்கு கோபம் வந்துவிட்டது. பைலில் தேட ஆரம்பித்தவர், பேப்பர் கிடைத்தவுடன் எழுந்தார்.
சூரிய ஒளி மின்சாரத்தின் விலை மற்ற மாநிலங்களில் அதிகம் என ஒரு பட்டியல் வாசித்தார். அதில் விலைக் குறைவான மூன்று மாநிலங்களையும் சேர்த்து வாசித்தார், தன்னை அறியாமல்.
பிறகு அதானி குறித்து ஒரு லெக்சர் கொடுத்தார். அதானின்னா ஏன் எல்லாக் கட்சியும் இப்படி துள்ளிக் குதிக்கறீங்க? அவரும் ஒரு தொழிலதிபர், அவ்வளவு தான். அவரு யாருன்னு எனக்கு தெரியாது என்று மாற்றி, மாற்றி பேசிக் கொண்டிருந்தவர் என் மீது பாய்ந்தார்.
"அதானிய விடுங்க. நீங்க யார் எழுதிக் கொடுத்தத பேசறீங்க? என்ன தெரியும் ? Technical ஆ தெரியாம பேசாதீங்க?" என்றார் நத்தம்.
"சரி, அதானியை அதோடு விட்டுவிடுவோம். ஒரு விஷயம், technical ஆக எனக்குத் தெரியாது என்று அமைச்சர் சொன்னார்"என்ற நான் அடுத்து சொன்ன வார்த்தை அதிமுகவினரை பதறச் செய்தது.
"அப்புறம் பாட்சா பட வசனம் தான் பேசனும் போல", இதைத் தான் நான் சொன்னேன். அடுத்து நான் என்ன சொல்ல வருகிறேன் என கவனிக்கக் கூட அவர்களுக்கு பொறுமை இல்லை. ஒரே எதிர்ப்புக் குரல். பேரவையை நடத்திக் கொண்டிருந்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் "இதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குகிறேன்" எனக் கட்டளையிட்டார், நொடியும் தாமதிக்காமல்.
நான் சொல்ல வந்தது இது தான். "அப்புறம் பாட்சா பட வசனம் தான் பேசனும் போல. என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேரு உண்டு, அப்படின்னு. அமைச்சர், உங்களுக்கு தெரிஞ்ச சிவசங்கர் எம்.எல்.ஏ தான். ஆனா எனக்கு இன்னொரு பக்கம் உண்டு. நான் B.E படிச்சவன். Technical ஆ தெரியும்". ஆனால் இதைக் கேட்கும் பொறுமை கூட அவர்களுக்கு இல்லை.
பாட்சா-ன்னா இன்னும், இன்றும் உதறுது. ஆனால் பாட்சா தான், பழைய பாட்சா இல்லை என்பது வேறு விஷயம்.
"எனக்கு technical ஆகத் தெரியும் சார். நான் B.E electrical படித்தவன். என்னோடு படித்தவர்கள் E.B-ல் A.E ஆகவும், A.D ஆகவும், D.E ஆகவும் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், மத்திய அரசாங்கத்தினுடைய எரிசக்தித் துறையிலே வேலை பார்க்கிறார்கள். அவர்களிடத்தில் தகவல் திரட்டி தான் பேசுகிறேன்" என்றேன். தொடர்ந்து நான் பேசிய சிலக் கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கினார்கள்.
பாட்சா படத்தில், கம்பத்தில் கட்டி வைத்து ரத்தம் வழிய, வழிய ரஜினியை அடிப்பார்களே, அது போல தான் ஜனநாயகத்தின் நிலை சட்டமன்றத்தில். ஆனால் ஜனநாயகம் ஒரு கட்டம் வரை தான் கட்டுண்டு இருக்கும். மாணிக்கம் போல, கட்டறுத்து கிளம்பும்.
# ஒரு தடவை நீக்கினா, நூறு தடவ ஷேர் ஆகும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக