பிரபலமான இடுகைகள்

சனி, 17 அக்டோபர், 2015

விடியல் மீட்பு பயணம் 3

வடக்கு மாதவி சாலை ஆரம்பத்தில் கொஞ்சம் குறுகலானது. ஒரு கார் வந்தால் எதிரில் செல்லும் கார் சற்று நிதானித்து தான் செல்ல வேண்டும். அந்த சாலையில் இப்போது தளபதி நுழைந்திருந்தார்.

எதிரில் ஒரு கார் வந்துக் கொண்டிருந்தது, சில இரு சக்கர வாகனங்களும் வந்துக் கொண்டிருந்தன. அவர் தன் பாட்டுக்கு மக்களுக்கு வணக்கம் வைத்தவாறு நடந்துக் கொண்டிருந்தார். இதே "அம்மா" வரும் போது எதிரில் வாகனம் வந்திருந்தால், 'கொல்ல சதி' என்று அறிக்கை விட்டு ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்.

திடீர் என பயணம் தேங்கியது. பார்த்தால் தளபதியை காணவில்லை. இடது புறத்தில் இருந்த ஒரு பள்ளிவாசல் நிர்வாகிகள் வரவேற்க, உள்ளே சென்று அவர்களிடம் பேசி விட்டு வெளியே வந்தார். இதுவும் திட்டத்தில் இல்லை.

சிறிது தூரத்தில் தான் 'உழவர் சந்தை'. தமிழகத்தில் சிறப்பாக நடைபெறும் மிகச்சில உழவர் சந்தைகளில் ஒன்று. நடைபயிற்சி இருந்தால் அங்கு காலை வேளையில் அழைத்து செல்ல வேண்டும் என்பது மாவட்ட செயலாளர் அண்ணன் குன்னம் ராஜேந்திரன் அவர்களது ஆசை.

காரணம் காலை வேளையில் கிராமத்தை நூற்றுக்கணக்கான விவசாயிகளும், நகரத்தை சேர்ந்தோர் ஆயிரக் கணக்கானோரும் அங்கு கூடுவார்கள். அந்த நேரத்தில் தளபதி சென்றால், எல்லோரையும் ஒருங்கே சந்திக்கும் வாய்ப்பு. ஆனால் முதல்நாள் இரவு நாமக்கல்லில் இருந்து தளபதி பெரம்பலூர் வந்து படுக்கும் போது இரவு மணி 01.00. அதனால் நடைபயிற்சி ரத்தானது.

அந்த உழவர் சந்தையை கடக்கும் போது பார்த்தார் தளபதி. உள்ளே நுழைந்து விட்டார். உள்ளே காய்கறி விற்றுக் கொண்டிருந்த விவசாயி இடம் அவர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்தார். ஒரு விவசாயி பப்பாளி பரிசளித்தார்.

நடைபயணம் மீண்டும் துவங்கியது. மகளிர் சுய உதவிக்குழு கூட்டம் நடைபெறும் திருமண மண்டபம் அடுத்து நூறு மீட்டரில் தான். இதற்கிடையில் ஒரு ரேஷன் கடையை தலைமை செயற்குழு என்.ராஜேந்திரன் காட்டினார். நேரே அங்கே சென்றார்.

அங்கு இருந்த பொதுமக்கள் தளபதியை பார்த்த அதிர்ச்சியில் திகைத்து விட்டனர். அவர்களுடன் சிறு உரையாடல். அங்கிருந்து மண்டபத்தை அடைந்தார்.

மண்டபத்தில் நுழைந்தவர் பெண்களை வரிசை, வரிசையாக அவர்கள் அமர்ந்திருந்த இடம்  சென்று வணங்கினார். ஒரு தலைவர் தேடி வந்து வணங்குகிறாரே என அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. சிலர் செல்போனை எடுத்து அவரை படம் எடுத்தனர். பாட்டி ஒருவர் திருஷ்டி முறித்தார்.

நிகழ்ச்சி குறித்து சிறு விளக்கம் அளித்து, பெண்களிடம் மைக்கைக் கொடுத்தார். நான்கு பேர் தான் பேச பெயர் கொடுத்திருந்தனர். ஆனால் மைக் கைமாறி, கைமாறி பத்துக்கும் மேற்பட்டோர் பேசிவிட்டனர்.

நாங்களோ பதட்டத்தில். அடுத்த நிகழ்ச்சி முடித்து, இலப்பைகுடிக்காடு செல்ல வேண்டும். அங்கே இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகளை சந்திக்க ஏற்பாடு. தொழுகை நேரத்திற்கு முன்பு செல்ல வேண்டும். அது தான் எங்கள் பதட்டம். திட்டமிட்ட நேரத்தைத் தாண்டி, மகளிர் உரையாடல் நீண்டு கொண்டிருந்தது.

(பயணம் தொடரும் 3....)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக