பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 13 அக்டோபர், 2015

மனம் நிறைந்தாய்

இவர் சிவாஜிக்கு இணை. நகைச்சுவை நடிகையாகவே அறியப்பட்டு விட்டார். பின்னாட்களில் குணசித்திர வேடங்களில் நடித்து முத்திரை பதித்தாலும், இன்னும் முன்னமே பல பாத்திரங்கள் அளிக்கப் பட்டிருக்க வேண்டும்.

மனோரமா எந்தளவிற்கு நம்மை மகிழ்வித்தாரோ அந்த அளவிற்கு சொந்த வாழ்க்கை சோகமயமானது. சார்லி சாப்ளின், சந்திரபாபு, மனோரமா என அது என்னவோ தலைசிறந்த நகைச்சுவை நடிகர்கள் வாழ்க்கை இப்படியே அமைந்து விட்டது உச்ச சோகம்.

ஆனால் அது ஒரு போதும் அவர் திறமைக்கு குறுக்கே நிற்கவில்லை. கின்னஸ் சாதனை படைக்கிற அளவிற்கு அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 1500ஐ தாண்டியது. ஏற்ற பாத்திரங்களும் எண்ணிலடங்கா .

சிறு குழந்தையாக நாடகத்தில் நடிக்கத் துவங்கி, சிறந்த நாடக நடிகையாக மிளிர்ந்த பிறகே திரை உலகில் கால் பதித்திருக்கிறார். தில்லானா மோகனாம்பாள் திரைப்பட "ஜில்ஜில் ரமாமணி" கதாபாத்திரம் தான் மனோரமாவின் கிராஃபை உயர்த்தியது.

சொந்தக் குரலில் பாடி, பாடகியாகவும் அடையாளம் பெற்றார். ஒரு படத்தில் 9  வேடங்களில் நடித்த பெண் நடிகை. தமிழகத்தின் பல்வேறு வட்டார வழக்கு தமிழில் பேசுவதில் வல்லமை பெற்றவர் என தனிச் சிறப்புகளை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம்.

'பாட்டி சொல்லை தட்டாதே' படத்தில் பாட்டி வேடத்தில் நடித்து, அந்த படத்தின் வெற்றியை ஈட்டித் தந்து சாதனை படைத்தார். அம்மா வேடத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் 'சின்ன கவுண்டர்' படத்தில் வயதான அம்மாவாக சிறப்பாக அண்டர் பிளே செய்திருப்பார். கொங்கு வழக்கு பேச்சு, நகைச்சுவை, குணசித்திரம் என கலந்து அந்த ரோலை வாழ்ந்திருப்பார்.

'சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் விசுவிற்கு சரி போட்டி கொடுப்பார். 'கண்ணம்மா கம்முன்னு கிட"என்றால் அவர் நினைவு தான் வரும். பில்லா'வில் ரஜினியுடன் நடனம் மறக்க முடியாது. அதே ரஜினிக்கு 'அண்ணாமலை' அம்மாவும் சிறப்பு. 'அபூர்வ சகோதரர்கள்' போல, கமலோடு பல படங்களில் போட்டி தான் நடத்துவார்.

'நடிகன்' படத்தில் பேரிளம் பெண்ணாக சத்யராஜோடு அவர் காதல் வயப்படும் ரோல் வேறு யார் செய்தாலும் பிசகியிருக்கும், அபத்தமாகி இருக்கும். இப்படி அவரது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வியந்து கொண்டே போகலாம்.

அண்ணா, கலைஞர், எம்ஜிஆர்,என்டிஆர், ஜெயலலிதா என அய்ந்து முதல்வர்களோடு நடித்தவர்.

கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியில் கலைஞரின் நீண்ட சங்கத் தமிழ் கவிதையை வார்த்தை பிசகாமல் சொல்லி தமிழ் பற்றை வெளிப்படுத்தினார்.

# மனம் எல்லாம் நிறைந்த மனோரமா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக