பிரபலமான இடுகைகள்

புதன், 7 அக்டோபர், 2015

பார்க்கும் பார்வை நீ

வழக்கமாக கதாநாயகிகள் கதாநாயகர்களோடு ஆடும், பாடும் பாடல் ஹிட் ஆகும். இல்லை என்றால் குத்துப் பாடலுக்கு ஆடும் கவர்ச்சி நடிகைகள் பாட்டு ஹிட் ஆகும். கதாநாயகன் கவர்ச்சி நடிகையோடு ஆடும் பாடல் சில தான் ஹிட் ஆகும், நாயகனின் ' நிலா அது வானத்து மேலே' போல.

இதில் இன்னும் சிறப்புகள் பல. ஹீரோவும் டாப், உடன் ஆடிய நடிகையும் டாப். இசையமைப்பாளரும் டாப். ஒருங்கிணைத்த இயக்குனரும் டாப் என்றால் கேட்கவும் வேண்டுமோ, பாட்டும் செம ஹிட்.

1983ல் வந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் அது. அந்தத் திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களும் ஹிட் தான். அதில் இது தனித்துவம். இன்று கேட்டேன், அன்று கேட்ட அதே உணர்வு.

"பேசக் கூடாது, வெறும் பேச்சில் சுகம்
ஏதும் இல்லை, வேகம் இல்லை
லீலைகள் காண்போமே"

வழக்கமான ஸ்லிம் ரஜினி இல்லை, கொஞ்சம் பூசினாற் போல். உடன் ஆடும் நடிகை, அன்றையக் கனவுக் கன்னி 'சில்க் ஸ்மிதா' தான். ஆனால் பெரிய அளவில் கவர்ச்சியான நடனம் கிடையாது.  ஆனாலும் பாடல் ஹிட்.

காரணம் காம்பினேஷன். நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர், பாடகி என செம காம்பினேஷன் இந்தப் பாடல். எஸ்.பி.பியும் சுசீலாவும் இழைந்து இயல்பாகப் பாடி மனதில் இடம் பிடித்தப் பாடல்.

பெரிய அளவில் நடனம் கிடையாது, லேசான அசைவுகள் தான். ஆனால் அதிலேயே இயக்குனர் எஸ்.பி.எம் சமாளித்திருப்பார். ரஜினியின் நடனம் ஏற்கனவே பிரபலம், இதில் இன்னும் மேலே. நீச்சல் உடையில் வந்தாலும் சில்க் கண்ணியம், இன்றைய நடனங்களை ஒப்பிடுகையில்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மென்மையாக பாடுவது, நாமே பாடுவது போல பிரம்மை. சுசீலாவின் குரல் அதைவிட மென்மை.

"பார்க்கும் பார்வை நீ
என் வாழ்வும் நீ
என் கவிதை நீ
பாடும் ராகம் நீ
என் நாதம் நீ
என் உயிரும் நீ"

பஞ்சு அருணாச்சலத்தின் வரிகள் எளிமை, இனிமை. கிறங்கடிக்கிறது.

தொடர்ந்து தலைவன் ரஜினியின் அசைவுகளில் லயித்துப் போவோம். அப்புறம் சில்க். இதைத் தாண்டி ஒருவர் இருக்கிறார், அவர்....

அவர் தான் நமது இசைஞானி. ஆமாம், அந்த இசையை இசைத்த இசைராசா.

ரஜினிக்கேற்ற துள்ளல் இசை, சில்க்கிற்கேற்ற மயக்கும் இசை, இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் சுவைக்கேற்ற கமர்ஷியல் இசை, எஸ்.பி.பி மற்றும் சுசீலா ஆகியோரின் குரலுக்கு ஒத்திசைந்த இசை, என எல்லாம் கலந்து தந்தவர் நமது இசையரசர்.

இசை உலகை என்றும் ஆளும் அரசன் நீ தான்.

# பாடும் ராகம் நீ, என் நாதம் நீ, என் உயிரும் நீ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக