நண்பர் செல்வக்கடுங்கோ தந்தை இறந்து விட்டார் எனத் தகவல் வந்தது. அஞ்சலி செலுத்த சென்றோம். மாலை வைக்கும் போது கவனித்தேன். உடல் மீது ஒரு புத்தகம் வைக்கப்பட்டிருந்தது.
இறந்தவர்கள் மீது அவர்கள் விரும்பியப் பொருட்களை வைப்பது ஒரு சிலரின் வழக்கம். படித்தவர்கள் என்பதைக் குறிக்கும் வகையில் அவர்கள் பயன்படுத்திய நோட்டுகளை வைப்பார்கள்.
புத்தகம் சற்றே பெரியதாக, கனத்ததாக இருந்தது. இறந்தவர் ஆசிரியர் என்பது தெரியும். அதனால் அவர் படித்த புத்தகமாக இருக்கும் என்று பார்த்தேன். அவர் படம் இடம் பெற்றிருந்தது.
மறைந்த பெரியசாமி அவர்கள் தமிழ் ஆசிரியர். முதலில் எட்டாம் வகுப்பு படித்திருந்தவர், படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் ஆசிரியர் பயிற்சி படித்து வேலைக்கு சென்றிருக்கிறார்.
பிறகு பணியில் இருந்து கொண்டே, M.A., M.Ed., படித்து தமிழ் ஆசிரியராக நீலகிரி மாவட்டத்தில் பணிக்கு சென்றவர் அங்கேயே பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார்.
ஓய்வு பெற்று அசாவீரன் குடிகாடு திரும்பியவர் உடையார்பாளையம் எம்.ஆர்.சி கல்லூரியில் பணி புரிந்திருக்கிறார். உடல்நலக் குறைவால் தளர்ந்திருக்கிறார். ஆனாலும் படிக்கும் பணியை நிறுத்தவில்லை.
ஆமாம் படிப்பில் தணியாத ஆர்வம். ஒரு குட்டி நூலகம் உண்டாம். தமிழ் மீது கொண்ட காதலால் பிள்ளைகள் பெயர் திருநாவுக்கரசு, மலர்கொடி, செல்வக்கடுங்கோ, மனுநீதி, மலையரசி, கலையரசி, இசையரசி, ரஞ்சித்குமார்.
இதுவரை சொன்ன செய்திகள் முக்கியமல்ல.
ஒரு கட்டத்தில் தொடர் படிப்பில், சோசியக் கலை குறித்து தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார். அதில் மூழ்கிப் போனார். அதுவும் இன்னும் ஒரு கனவும் அவரை இயக்கின.
செல்வக்கடுங்கோவிடம் அந்த கனத்த புத்தகம் குறித்துக் கேட்டேன். "அது தான் அவரது நிறைவேறாத கனவாகி விட்டது" என்றார்.
ஆம் 78 வயதில்,"இலக்கியங்களில் சோதிடவியல்" என்றத் தலைப்பில் தஞ்சை கரந்தை தமிழ்சங்கம் மூலம் "பி.எச்டி" செய்திருக்கிறார். ஆய்வு நூல் தயார். அது தான் அவர் மீது இருந்தது. நேர்முகத் தேர்வு மாத்திரம் பாக்கி. புற்றுநோய் விடவில்லை, அவர் முனைவராவதற்கு. கனவோடு கரைந்து விட்டார்.
# கற்கை நன்றே, கற்கை நன்றே, முதுமை துரத்தினும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக