விடியல் மீட்பு வாகனம் தங்கியிருந்த இடத்தில் இருந்து கிளம்பும் போதே, நிர்வாகிகள் வாகனங்கள் பின் தொடரக் கூடாது என்பது தான் முதல் கட்டளை. ரோவர் ஆர்ச் கடக்கும் போது, நிறைய பைக்குகள் பின் தொடர்வதை பார்த்தார்.
மைக்கை கையில் எடுத்தார் தளபதி. "பைக்கில் வரும் கழகத் தோழர்கள் ஒதுங்கிக்குங்க. நான் மக்களை சந்திக்க வந்திருக்கிறேன். ஒத்துழைப்பு கொடுங்கள்", என்றார். மக்களுக்கான பயணம் துவங்கியது.
அம்பேத்கர் சிலை அருகே நடைபயணம் துவங்குவதாக திட்டம். தளபதியை எதிர்பார்த்து கழகத் தோழர்கள் திரண்டிருந்தனர். "நான் மக்களை சந்திக்க ஒத்துழைப்பு கொடுங்க. இல்லைன்னா நான் வேன்லயே போயிடுவேன்"என்று அன்பு எச்சரிக்கை கொடுத்து விட்டு தான் இறங்கினார்.
அம்பேத்கர் சிலை அருகே நடைபயணம் துவங்கியது. பழைய பேருந்து நிலையம் உள்ளே இருந்த பூக்கடையில் இருந்து கடைக்காரர் விருட்டென ஓடி வந்தார். வேகமாக ஓடி வந்ததை பார்த்த மற்றவர்கள் திகைத்து தடுக்க முயல, அவர் கையில் பூமாலை. தளபதி அழைத்து பெற்றுக் கொண்டார். எளிய மனிதரின் மரியாதை.
வேக நடை. அனைவரும் அவர் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினோம். காந்தி சிலையை கடந்து விட்டார். பின்னால் ஒரு பெரும் படை ஆராவரித்து அவரை தொடர்கிறது.
ஏற்கனவே நடைபயணத்தின் போது சில ஊர்களில் மக்களை சந்திக்க கழகத் தோழர்கள் இடையூறாக வந்தது தளபதிக்கு வருத்தம் அளித்தது என்ற செய்தியை கேள்விப்பட்டு அலர்ட்டில் இருந்தோம். நிர்வாகிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் வந்தோம்.
இது வரை தளபதி பயணம் என்றால், நிறைய பேர் வரவேண்டும் என்பீர்கள். இப்போது வரவேண்டாம் என்று சொன்னால் எப்படி என்று நிறைய சண்டைகள்.
அதனால் தளபதி பின்னால் நடப்போரை ஒதுக்க முயற்சித்தேன். முகம் அறிந்த சிலர் ஒதுங்கினார்கள். பலரை முகம் தெரியவில்லை. யார் என்று விசாரித்தால், கல்லூரி மாணவர்கள். 80 சதம் அவர்கள் தான். அவர்களை ஒதுங்கச் சொன்னால் என்னை ஒதுக்கி தள்ளி விடுவார்கள் என்பது மாத்திரம் புரிந்தது.
இதற்கிடையில் ஒரு அம்மா தன் கணவரோடு இணைந்து சால்வை அளித்து வாழ்த்து தெரிவித்தார்கள். ஒரு இஸ்லாமியர் சால்வை அளித்தார். பயணம் இப்போது பெரியார் சிலை தாண்டி ஆத்தூர் சாலையை நெருங்கி விட்டது. அது வரை தான் நடைபயணம் என்று திட்டம்.
ஆனால் அதைத் தாண்டி தளபதி நடந்து கொண்டிருந்தார். மக்களுடைய வரவேற்பு அவரது பயணத்தை நீட்டித்தது. ஆத்தூர் சாலையில் இருந்து, வடக்கு மாதவி சாலையில் திரும்பினார். நாங்கள் பின்னால் ஓடிக் கொண்டிருந்தோம்.
(பயணம் தொடரும்....)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக