அதிகாலையில் அந்தப் பேருந்து வருகை தான் ஊரை விழிக்க வைக்கும். ஆமாம், அந்தப் பேருந்து வந்தவுடன் டீக்கடையில் ஒலிப் பெருக்கி உயிர் பெறும். அந்த ஒலிப்பெருக்கி ஊரை எழுப்பும்.
வழக்கமாக டீக்கடைகளில் சாமிப் பாட்டுகள் தான் ஒலிக்கும். அதுவும் சமயத்திற்கேற்ப விநாயகர் பாடல்கள், முருகன் பாடல்கள், அய்யப்பன் பாடல்கள், அம்மன் பாடல்கள் என இருக்கும்.
ஆனால் இந்த டீக்கடை வித்தியாசம். அங்கு காலையில் முதலில் ஒலிக்கும் பாடல்,"அவர் தாம் பெரியார்". திராவிடர் கழகத்தின் கொள்கை விளக்கப் பாடல்களே அந்த டீக்கடையில் ஒலிக்கும். ஊரை விழிக்க வைக்கும்.
அப்படி, அந்தப் பாடல் ஊரை மட்டும் விழிக்க வைக்கவில்லை. பக்கத்திலே ஒரு பள்ளி உண்டு. அது அரசுப் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளியின் மாணவர்கள் தங்கிப் படிக்க ஒரு அரசு மாணவர் விடுதி உண்டு.
சுற்றுவட்டாரத்தில் பத்துக் கிலோமீட்டர் அளவுக்கு வேறு உயர்நிலைப் பள்ளிகள் கிடையாது. அதனால் சுற்றிலும் உள்ள இருபதிற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு அது தான் கதி.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள். அதில் நூறு பேர் அந்த மாணவர் விடுதியில் தங்கிப் படித்தனர். அவர்களில் சிலர் தான் அதிகாலையில் விழிப்பர். அவர்களில் அந்த மாணவனும் உண்டு.
மற்ற மாணவர்கள் எழுந்து மற்ற வேலைகளை கவனிக்க, இந்த மாணவனுக்கு மாத்திரம் காலைப் பணிகளை துவங்க அந்தப் பாடலை கேட்க வேண்டும். அந்தப் பாடல் தான் அவருக்கு சுப்ரபாதமாகி விட்டது.
இதில் ஒரு வேடிக்கை, அந்த மாணவன் வீட்டில் யாரும் அந்தப் பாடலை காது கொடுத்தும் கேட்க மாட்டார்கள். காரணம், அந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அத்தனை ஆத்திகமானவர்கள். கடவுளை கும்பிடாமல் எந்த வேலையும் துவங்காது.
இந்த மாணவனின் பாடல் ஆர்வம் அத்தோடு நிற்கவில்லை. மெல்ல மெல்ல அந்தப் பாடலின் நாயகர் 'பெரியார்' மீதான ஆர்வம் ஆனது. சுற்றிலும் சூழ்ந்த ஆத்திக ஈரத்தைத் தாண்டி, பகுத்தறிவு நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது.
அந்த ஊர் பாடாலூர். அந்த மாணவர், பெரியாரின் மாணவர் ஆனார். இன்று பெரியாரின் கொள்கையை ஓங்கி முழங்குபவராக இருக்கிறார்.
அன்றைய மாணவர் தான் இன்றைய திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கைபரப்பு செயலாளர். அண்ணன் ஆ.ராசாவின் பிறந்தநாள் 26.10.2015.
# கொள்கை முழக்கமே ஓங்கி ஒலித்திடுக !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக