"தளபதி எங்க இருக்காங்க?". "அறந்தாங்கியில் இருந்து கிளம்பிட்டாங்க". புதுக்கோட்டையை நெருங்கும் போது கேட்டோம், "எந்த இடம்? ". "திருமயம் தொகுதி தாண்டுறாங்க".
சட்டமன்றக் கூட்டத் தொடர் இருந்ததால், தளபதி அவர்களின் "நமக்கு நாமே" பயணத்தில் பங்கேற்க முடியாத வருத்தம் இருந்தது. இன்று விடியற்காலை 2 மணிக்கு அரியலூரை அடைந்தேன் .
காலை 7.00க்கு எழுந்து, தளபதி அவர்களின் அரியலூர் பயண ஏற்பாடுகளை கவனித்து விட்டு கிளம்ப காலை 9.30 ஆகிவிட்டது. இப்படி தளபதி அவர்களின் பயணத்திற்கு சென்றோம்.
ஏற்கனவே சொல்லி இருந்தார்கள், தளபதி அவர்களின் பயணத்தில் ஆடம்பரமே கூடாது என. ஏற்கனவே என்றால் இந்தப் பயணத்திற்கு அல்ல, கடந்த முறை இளைஞர் அணி நிகழ்ச்சிக்கு வந்த போதே. அதையே இப்போதும் வலியுறுத்தினார்கள்.
அதே போலவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடிகள் மாத்திரம் கட்டி ஏற்பாடு செய்திருந்தார்கள். தேவையான இடங்களில் விளம்பரப் பலகைகள். தளபதி மனதிற்கேற்ப அடக்கி வாசித்திருந்தார்கள்.
திருமயம் டோல்கேட்டில் காத்திருந்தோம். கழகக் கொடியோடு சில வாகனங்கள் கடந்தன. பரபரவென காவல் வாகனங்கள். தொடர்ந்து பிரச்சார வாகனத்தில் தளபதி அவர்கள்.
வாகனம் புதுக்கோட்டை நகரை அடைந்தது. நாங்கள் பின் தொடர்ந்தோம். மகளிர் சுய உதவிக்குழுவினரோடு சந்திப்பு ஒரு ஹோட்டலில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. தளபதி அந்த இடத்தை அடைந்த போது மதியம் 02.00.
பெரம்பலூர், அரியலூர் மாவட்ட தளபதி சுற்றுப்பயணம் குறித்து மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சுபா.சந்திரசேகர் அவர்களிடம் ஆலோசித்தேன். அப்போது மணி 02.30. தளபதி மதிய உணவு அருந்தவில்லை அது வரையில்.
"என்ன அண்ணா இவ்வளவு நேரம் சாப்பிடாம இருந்தா உடம்பு என்ன ஆகுறது?" என்றேன். அண்ணன் சுபா சொன்னார்,"நீங்க வேற. நைட் அறந்தாங்கி வந்தப்ப இரவு மணி 12.15. அப்புறந்தான் சாப்பிட்டுட்டு படுத்தார். காலையில் 06.00 மணிக்கு எழுந்துட்டார். எப்படி உடம்பு தாங்குதுன்னு புரியல".
நமக்கு நாமே செப்டம்பர் 21-ந்தேதி துவங்கியது. இன்றோடு 11 நாட்கள் ஆகிவிட்டன. முழு நாளும் உழைப்பு, இரவில் தூக்கம் குறைவு, வீட்டு உணவு இல்லை, நீண்ட பயணங்கள், உரையாடல்கள், சொற்பொழிவுகள், அடுத்த திட்டமிடல்கள், அலைபேசி பேச்சுக்கள் என 24 மணி நேரமும் போதாது. நினைத்துப் பார்த்த எனக்கு தலை சுற்றியது.
இரவு பயணத்திற்கே தாமதமாக வந்த எனக்கு இவரது பயணம் உறுத்தியது. தலைவர் கலைஞர் சொன்னது போல, "தளபதி என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு".
03.10. தளபதி அவர்கள் மகளிர் ஆலோசனை கூட்டம் முடித்து கீழே வந்தார். இன்னும் உணவு அருந்தவில்லை.
# இவர் என்ன இரும்பால் செய்த மனிதரா !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக