பிரபலமான இடுகைகள்

துபாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துபாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 டிசம்பர், 2015

கத்தார் நினைவலைகள் 1

கத்தார் வர்றன்னு சொன்ன உடனே ஆரூர் பாலா என்னை புக் பண்ணினார். ஆமாம் புக்கிங். "அண்ணே, கத்தார் வந்தவுடன் என் கார்ல தான் ஏறனும், வரனும். இது தம்பியோட அன்புக் கட்டளை". நானும் அந்த எண்ணத்தோடு தான் இருந்தேன்.

கத்தாரில் இறங்கிய போது விடியற்காலை 03.15. கார் பார்க்கிங் வந்து குமார் நிசானில் ஏறியதை ஏற்கனவே சொல்லி இருந்தேன். இடையில் பாலா தன் காரைக் கண்ணால் காட்டினார். சிரித்துக் கொண்டே கடந்தேன். சிரித்ததற்கு காரணம் அவரது புக்கிங் தான்.

அடுத்த நாளும் கங்கைகொண்ட சோழபுரம்  குமார் கார் தான். இடையில் கல்லூரி நண்பன் ராஜவிஜயன் கார். இப்படியே கார்கள் கடந்தன. மறுநாள் காலை பாலா காரில் செல்வதாக திட்டம். காலையில் காத்திருந்தோம்.

குமார் வந்தார். "அண்ணா, பாலா வர கொஞ்சம் லேட்டாகும். நாம போகலாம்", என்றார். லெபனிஸ் உணவகம் சென்றோம். சாப்பிடும் போது, பாலா வந்து பார்த்து சென்றார். அப்புறம் தான் மியூசியம் சென்றோம்.

இப்படியே பாலா காரில் ஏற முடியாமல் நேரம் கடந்தது. ஆனால் பாலா காத்திருந்தார், நானும். ஆனால் இரண்டாம் நாளும் பாலா காரில் ஏற வாய்க்கவில்லை.

மூன்றாம் நாள் காலை அறையில் வந்து கூப்பிட்டதே பாலா தான். உடன் மதன்குமார். காலை உணவிற்கு அழைத்து செல்ல சிறுவாச்சூர் ரமேஷ் வந்து விட்டார். அவர் சாய்ஸ், சரவணபவன் உணவகம்.

அப்போது தான் பாலா காரில் ஏறும் வாய்ப்பு. இதுவும் நிசான் கார். கார் முக்கியமல்ல. காரின் வெளி அமைப்பு, உள் அமைப்பு முக்கியமல்ல.  உள்ளே டேஷ்போர்டில் இருக்கும் பல்வேறு உபகரணங்கள் பிரத்யோகமல்ல.

அங்கே செருகப்பட்டிருந்த "பென் டிரைவ்" தான் மேட்டர். ஆமாம், அந்தப் பென் டிரைவ்காக தான், அவர் கார் பயணத்திற்கு அழைத்தார். ஆனால் அவர் காரில் ஏறி பேசி முடிக்கும் முன் ஹோட்டலை அடைந்து விட்டோம்.

பென் டிரைவ் ஓப்பன் செய்யப்பட வாய்ப்பில்லாமல் போனது. சரவணபவனில் பொங்கல், இட்லி, வடை என அவர்கள் அன்பிற்கு சாப்பிட்டு முடித்தோம். அங்கிருந்து அரசரின் மியூசியம் செல்லும் பயணம்.

அது லாங் டிரைவ். இதற்கு பாலா கார் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம், நானும் பாலாவும். ஆனால் கார் ஏறும் போது, அவரே மதன் காரில் ஏற சொன்னார். "உங்கக் கார்",என்றேன். "இல்லண்ணா. மதன் கார்ல போய்டுவோம். லாங் டிரைவ்க்கு இவரது லேண்ட் குரூஸர் தான் பெஸ்ட்", என்றார் பாலா.

கண்ணில் ஒரு 'கார்' காலம் !

(தொடரும்)

 

சனி, 7 நவம்பர், 2015

கத்தாரில் அண்ணாமலையன்கள்

கத்தாரில் எங்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பை, எனது  நண்பர் ராஜ விஜயன் ஏற்படுத்திக் கொடுத்தார்.  சீனியர் சாய்மணி அவர்கள் தனது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தார். அருமையான நிகழ்வாக அமைந்தது.

சீனியர், ஜூனியர் என பலரை சந்தித்தேன். சீனியர் என்றால் எங்களை விட இருபது ஆண்டுகளுக்கு முன்பு படித்தோரும் இருந்தனர். ஒரிரு ஆண்டுகள் சீனியரும் இருந்தனர்.

ஜூனியர்களில் ஓரிரு ஆண்டுகள் பின்னால் படித்தவர்களும் இருந்தனர். பதினைந்து ஆண்டுகள் பின்னால் படித்த ஒருவரும் இருந்தார். அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்பவர்கள். எனக்கு அது ஒரு வித்தியாசமான சந்திப்பு.

திருமேனி, சாய்மணி, அப்துல் கபூர், ரவீந்திரன், பரத், முரளிமுருகன், கிருஷ்ணகுமார், கார்த்திக் ராமையா, சுந்தர்ராமன், சுதர்ஷன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதில் திருமேனி மற்றும் சாய்மணி ஆகிய இருவரும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கத்தார் சென்று பணியில் சேர்ந்து, இன்று உயர்ந்த நிலையில் இருப்போர். நீண்ட பணி அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

அவர்களுக்கு சில வருடங்களுக்கு முன், அவர்களது நிறுவனத்தில் பணிபுரியத் தேவையான புதிய நபர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதே சமயத்தில் அவர்களோடு படித்த வகுப்பு நண்பர் இவர்களை தொடர்பு கொண்டிருக்கிறார். அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் பிரிவின் அலுவலர்.

பல்கலைக்கழகம் சென்றிருக்கிறார்கள். நண்பரை சந்தித்திருக்கிறார்கள். "வேலைவாய்ப்பு வழங்குகிறோம். சில நிபந்தனைகள்", என்றிருக்கிறார்கள். அதனை பட்டியலிட்டிருக்கிறார்கள்.

"அதிக மதிப்பெண் பெற்றவர்களாக இருக்கக் கூடாது. அரியர் வைத்து பாஸ் செய்தவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். முக்கியமாக, முதல் தலைமுறையாக வேலைக்கு வருபவர்களாக இருக்க வேண்டும்"

கேட்ட அவர்களது நண்பர் திகைத்திருக்கிறார். "ஏன் இப்படி?" எனக் கேட்டிருக்கிறார். "நிறைய மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு பல வாய்ப்புகள் காத்திருக்கும். இவர்கள் தான் வேலைக்கு சிரமப்படக் கூடியவர்கள். முதல் தலைமுறை, ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு உதவியதாகவும் இருக்கும்".

"நம் பல்கலைக்கழக மாணவர்கள் எந்த மதிப்பெண் எடுத்தவராக இருந்தாலும்,  எந்த சூழ்நிலையையும் கையாள்பவராக தேறி விடுவார்கள். பணியில் சேர்ந்து விட்டால் தங்களை தயார் படுத்திக் கொள்வார்கள். நாங்களும் படித்த பல்கலைக்கழகத்திற்கு நன்றிக்கடன் தீர்த்ததாகி விடும்".

சொன்னபடி தேர்ந்தெடுத்து கத்தாரில் பணியும் வழங்கி இருக்கிறார்கள். இப்போது அவர்களும் சிறப்பாக பணிபுரிந்து நல்ல நிலையில் இருப்பதை மகிழ்வோடு சொன்னார்கள்.

இப்படி ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்த அளவு உதவினாலே சிறப்பு தான்.

தங்கள் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், சட்டமன்ற உறுப்பினராக தங்களை சந்தித்ததில் மகிழ்ந்து நினைவுப் பரிசு அளித்தனர்.

ரவீந்திரன் ஒரு சிறந்த ஓவியர். தோகாவின் அடையாளமாகத் திகழும் ஷூக் எனப்படும் பழமையான மார்க்கெட் பகுதியை, அழகான ஓவியமாக வரைந்து பரிசாக வழங்கினார்.

# கத்தாரில் இருப்பினும், அடையாளம் மாறாத அண்ணாமலையன்கள் !

வெள்ளி, 6 நவம்பர், 2015

கத்தார் பாடம்

பார்வையை இழுத்தது அந்தப் பரந்த, விரிந்த பூங்கா. பெரும் புல்வெளி. கார் கடக்கும் போது உற்று நோக்கினேன். கத்தார் இஸ்லாமிய அருங்காட்சியகத்தில் இருந்து வெளியில் வரும் போது பார்த்தேன்.

நான் பார்ப்பதை கவனித்து விட்டு, "இதில் இன்னொரு விசேஷம் இருக்கிறது"என்றார் பாலா. என்ன என்றேன். "பூங்காவின் கீழே வாகன நிறுத்தம் இருக்கிறது",என்றார். "பூங்காவுக்கு வர்றவங்க நிறுத்த தானே?" என்று கேட்டேன்.

"பூங்காவுக்கு வர்றவங்க மட்டுமில்ல, பின்புறம் இருக்கும் நகரப் பகுதிக்கு வர்றவங்க நிறுத்தவும். 3000 கார் நிறுத்தலாம்" என்றார். இருக்கும் இடத்தை சரியாக உபயோகிக்கும் திட்டம்.

எனக்கு சென்னை நினைவு வந்தது. தியாகராய நகருக்கு இது போல ஒரு ஏற்பாடு செய்தால், பாண்டி பஜார், உஸ்மான் ரோடு ஆகியவை நிம்மதியாய் மூச்சு விடும். சென்னை மட்டுமல்ல, பெரு நகரங்களில் கையாள வேண்டிய உத்தி.

அந்த முக்கிய சாலையின் இன்னொரு பக்கம் செல்லும் போது ஒரு மண் முகட்டைக் காட்டினார் மதன். "அண்ணா இதப் பாருங்க". கட்டிடப் பணிக்கு குவிக்கப்பட்டுள்ளதோ என நினைத்தேன்.

"இந்த சாலைக்கு கீழே மெட்ரோ ரயில் வேலை நடக்குது. அங்கே அள்ளப்படுகிற மண் அத்தனையையும் கன்வேயர் பெல்ட் மூலம் இங்கே கொண்டு வந்து சேர்க்கிறார்கள். பிறகு வெளியேற்றுகிறார்கள்.

லாரிகள் மூலம் வெளிக் கொண்டு வந்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அது தவிர்க்கப்பட்டிருக்கிறது. அடுத்து மாசும் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது", என்றார்.

செலவு பிடிக்கும் காரியம் என்றாலும் அதன் பலன் கூடுதல். இயற்கை வாயு இருப்பதால் கத்தார் அரசு இப்படி செலவு செய்கிறது என்று கொண்டால் கூட, நம் நாட்டிற்கு ஏற்ற செலவு பிடிக்காத குறைந்தத் தொழில்நுட்பங்களை முயற்சிக்கலாம்.

நாட்டின் கட்டமைப்புத் துறையில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளை வளர்ந்த நாட்டின் பணிகளை பார்வையிட அனுப்ப வேண்டும். பழமை மனப்பான்மையில் இருந்து வெளிக் கொணர வேண்டும்.

அரசு பெரும் பொருட் செலவு செய்யும் அய்.அய்.டி போன்ற ஆராய்ச்சி சார்ந்த நிறுவனங்களை, அரசு துறைகளோடு இணைந்து செயல்பட வைத்து பயன்படுத்த வேண்டும்.

# முன்னேற்றத்திற்கு முயல்வோம் !

வியாழன், 5 நவம்பர், 2015

கத்தாரிடம் கற்போம்

மியூசியம் போகலாம், என அழைத்த உடன் நம்மூர் மியூசியம் நினைப்பில் போனேன். முன்புறத் தோற்றமே மிரட்டியது. கத்தாரில் இருக்கிறோம் என்பதை நினைவுப் படுத்தியது. பரந்தப் புல்வெளி. பெரிய, சிறப்பான வாகன நிறுத்த வசதி. அங்கிருந்து மேல் தளத்திற்கு, கண்ணாடிக் கூண்டு மின் தூக்கி.

அது Museum of Islamic Arts.

முன்புறம் செயற்கை நீர் ஊற்று, சாரலில் நனைக்கிறது.  தானியங்கி கண்ணாடிக் கதவு விலகியது. திரைப்படத்தில் வரும் அரபு ஷேக் உடையில் ஒருவர் நின்றார். கைக்காட்டினார். இரும்பு கண்டுபிடிப்பான், நுண் கூர்மைக் கருவி என பாதுகாப்பு சோதனைகள்.

முடிந்து நிமிர்ந்தால், அய்ந்து நட்சத்திர விடுதி தோற்றம். இரண்டு அடுக்கு மாடி அளவிற்கு உயர்ந்த கூரை. பிரம்மாண்டத் தோற்றம். மிகப் பெரிய கண்ணாடி சன்னல்களுக்கு பின்புறம் பரந்தக் கடல், வானுயர்ந்த கட்டிடங்கள். முன்புறம் வசதியான இருக்கைகள் போடப்பட்டு, சின்ன உணவு விடுதி. அருங்காட்சியகம் என்ற எண்ணமே ஏற்படவில்லை.

இரண்டு தளங்களில் தொன்மையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. முழுதும் குளிரூட்டப்பட்ட கட்டிடம் அது. உள்ளே இருக்கும் பொருட்களும் சேதம் இல்லாமல் இருக்கும். காண்போரும் சோர்வு இல்லாமல் காணக் கூடிய வாய்ப்பு.

மிக நேர்த்தியாக எல்லாப் பொருட்களையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு வாள் காட்சியில் இருந்தால், அதற்கு தனி வெளிச்ச வசதி, அது குறித்த வரலாறு என சிறப்பான ஏற்பாடு.

வரலாற்று ரீதியான வாள், கேடயம் போன்ற போர் கருவிகள், அரண்மனையில் பயன்படுத்தியப் பொருட்கள், அரசர் உடைகள், கம்பளங்கள், கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் பொருட்கள் என பழைய காலத்திற்கே கொண்டு செல்கின்றது.

கத்தார் கழகத் தோழர்களுடன், நாங்கள் பத்து பேர் சென்றிருந்தோம். ஒரு பள்ளியின் வரலாற்றுப் பிரிவு மாணவர்கள் குழு போல் ஒவ்வொரு பொருளாக பார்த்து மகிழ்ந்தோம். அது குறித்து விவாதித்தோம்.

ஒரு விஷயம் பெரும்பாலானோர் கவனத்தைக் கவர்ந்தது. ஒரு குதிரையும், அதன் மேலமர்ந்த வீரனும் தான். போர் வீரன் தரிக்கும் பாதுகாப்பு கவசம் இது வரை நாம் அறிந்தது. இங்கு வீரன் தரித்த கவசத்தை விட, குதிரைக்கு அணிவிக்கப்பட்டிருந்த கவசம் கவனம் கவர்ந்தது.

இடையில் ஒதுங்கிடம் சென்றோம். கை, முகம் கழுவி விட்டுப் பார்த்தால், அங்கு ஒரு கைக்கடிகாரம் இருந்தது. உடன் வந்த குமார் அவசரமாக வெளியேறினார். அருங்காட்சியகப் பாதுகாவலரை அழைத்து வந்து, அதனைக் காட்டி, அவரிடம் ஒப்படைத்தப் பிறகே நகர்ந்தார். கத்தார் கட்டுப்பாடு புரிந்தது.

காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் பத்து நூற்றாண்டு காலத்திற்கானவை. அவை பல நாட்டில் இருந்து வந்தவை. அதிலும் இந்தியாவில் இருந்து வந்தப் பொருட்கள் பல. ஆனால் கத்தார் வரலாறு என்று பார்த்தால் ஒரு இருநூறு ஆண்டுகளுக்கான தான்.

இது தான் மனதில் ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது. இருநூறு ஆண்டு வரலாறு இவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றால், நம் தமிழகத்தின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கான சாட்சிகள் கண் முன் நிற்பவற்றைப் பாதுகாக்க, காட்சிப்படுத்த எவ்வளவு தவறி இருக்கிறோம்.

#கத்தாரிடம் கற்போம் ! 

திங்கள், 26 அக்டோபர், 2015

பெட்டி வந்தாச்சி

வரவேற்க வந்த நண்பர்களோடு அளவளாவியபடி பார்க்கிங்கை அடைந்தோம். ஆயிரக்கணக்கில் கார்கள் நின்றன. எல்லாம் வெளிநாட்டு தயாரிப்பு கார்கள். கங்கை கொண்ட சோழபுரம் குமாரின் நிசானில் ஏறினோம்.

ஹோட்டலை அடைந்தோம். ஹோட்டல் "டூரிஸ்ட்". வந்த நண்பர்கள் பேசி விடை பெற எத்தனித்த போது, அண்ணன் பெரியண்ணன் அரசு தூக்கக் கலக்கத்தில் வந்தார். அறை தெரியாமல், அறந்தை ராஜூ முருகன் பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த அரசு அண்ணனை எழுப்பி விட்டார்.

அவரோடு சிறிது நேரம் பேசிவிட்டு படுக்கப் போன போது மணி 05.00. பெட்டி வராத வருத்தத்தில் இருந்த எனக்கு ஆறுதல் கூறிய அண்ணன் சதக் ஆப்ரேசனைத் துவங்கி இருக்கிறார். சதக், மினிஸ்டரி ஆப் இண்டிரியரில் வேலை பார்க்கிறவர். துபாய் ஏர்போர்ட்டில் வேலை பார்க்கும் நண்பரிடம் தகவல் பரிமாறி இருக்கிறார்.

அப்துல்லா கனி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் வேலை பார்ப்பவர். அவர் துபாயில் இருக்கும் சகாவிடம் தேட சொல்லி விட்டார். குமார் கத்தார் ஏர்வேஸில் வேலை பார்ப்பவர். அவர் நண்பரை தொடர்பு கொண்டிருக்கிறார். இப்படியாக ஜாயிண்ட் ஆப்ரேசனில் லக்கேஜ் தோகாவை காலை 10.30க்கு வந்து சேர்ந்தது. எனக்கு உயிரும் வந்தது. அதற்கு பிறகு குளித்து உடைமாற்றிக் கிளம்பினேன்.

நிகழ்ச்சி நடக்கும் ஹோட்டலுக்கு சென்றோம் அண்ணன் அரசு அவர்களும் நானும். அரங்கு நிறைந்திருந்தது. முகநூலில் இயங்கும் கழக நண்பர்கள், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கழகத் தோழர்கள், கட்சி சாராத முகநூல் நண்பர்கள் என கலந்து நிறைந்து இருந்தது அரங்கு.

இஸ்லாமிய பெண்கள் உட்பட பெண்களும் வந்திருந்தனர். சிலர் குழந்தைகளோடு. நிகழ்ச்சி துவங்கியது. அப்துல் ரஷீத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அண்ணன் சதக் தலைமை ஏற்று வரவேற்றார்.  முன்னிலை வகித்த அறந்தை ராஜுமுருகன் வாழ்த்திப் பேசினார். மதன் குமார் வாழ்த்துரை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் அண்ணன் பெரியண்ணன் அரசு அவர்கள் "மக்களோடு நான்" நூலை வெளியிட, கத்தார் கழகத் தோழர்கள் பெற்றுக் கொண்டனர் . அடுத்து வாழ்த்தி பேச வந்தார் ஆரூர் பாலா என்கிற பாலாஜி.

புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையாக சொல்லி, அதன் கதாப்பாத்திரங்களை விளக்கி, அதன் சிறப்புகளை எடுத்து கூறி ஒரு ஆய்வுரையே நிகழ்த்தினார் பாலா. அப்படியே அதிமுக ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி பேச ஆரம்பித்தவர், சூடாகி, பொதுக் கூட்ட பேச்சாளர் போல் வெளுத்து வாங்கினார்.

அடுத்த நிகழ்ச்சியாக, ஒரு அமைப்பு துவக்க விழா. வெளிநாடுகளில் பணிபுரியும் திமுக தோழர்களை கொண்ட அமைப்பு. International DMK welfare Association. இதன் மூலம் கழகத் தோழர்களுக்கு உதவுவது என அறிவித்தனர்.

#  கத்தார் கழக விழா !

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

கத்தார் வந்தாச்சி

விமானம் கிளம்பியது. மணி 09 45. முகம் துடைக்க நீராவியில் சூடு செய்யப்பட்ட சிறு டவல் கொடுத்தார்கள். முகம் துடைத்து பிரஃஷ் ஆனேன். முன்புற டீவி ஈர்த்தது. துழாவினேன்.

பல சேனல்களில் ஆங்கிலம்,  அரேபி, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களும், பாடல்களும் குவிந்திருந்தன. தமிழ் திரைப்படங்களை ஆராய்ந்தேன். ஒன்றும் ஈர்க்கவில்லை.

தெலுங்கு பட்டியலைப் பார்த்தேன். எல்லாம் ஆக்‌ஷன் மசாலாக்கள். 'டெம்பர்'. ஜூனியர் என்.டி.ஆர் நடித்த படம். கரம் மசாலா. பரபரவென படத்தை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் பூரி ஜெகநாத்.

நல்ல பிரியாணி கொடுத்தார்கள். சுவையான உணவு. உணவை விட அதற்கு முன்பாக கொடுத்த மெனு கார்டு 'டாப்'. வழவழ அட்டையில் ஒரு பக்கம் ஆங்கிலம், ஒரு பக்கம் அரபி, ஒரு பக்கம் தமிழ் என அச்சிட்டிருந்தார்கள். ஒவ்வொரு உணவுப் பதார்த்தம் குறித்தும் தனித்தனி தகவல்கள். அது சிறப்பு .

4.15 மணி நேரம் கடந்து துபாய் விமான நிலையத்தை அடைந்தது. நம் நேரம் அதிகாலை 02.00. துபாய் நேரம் 12.30.  துபாயில் இருந்து தோகா செல்லும் விமானத்திற்கு மாற வேண்டும். அது. 02.30க்கு கிளம்பும். டிரான்சிட்.

விமானத்தில் வந்து, அதே விமான நிலையத்தில் இன்னொரு விமானத்திற்கு மாறினாலும் பரிசோதனை நடந்தது. வரிசையில் முதல் ஆளாக சென்றவர் திருப்பி அனுப்பப்பட்டார். பெல்ட்டை கழற்றி விட்டு மீண்டும் பரிசோதனைக்கு சென்றார். இன்னொருவர் ஷூவை கழற்றி ஸ்கேனர் டிரேயில் வைத்தார். இதை பார்த்த நானும் அலைபேசி, ஷூ, பேனா என எல்லாவற்றையும் டிரேயில் கழற்றி வைத்தேன். இப்போது முதல் ஆள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார். அவர் இடுப்பில் இருந்து வெள்ளி அரைஞாண் கொடியை உருவிக் கொண்டிருந்தார். செக்யூரிட்டி செக் முடிந்து உள்ளே சென்றேன்.

துபாய் ஏர்போர்ட்டை தெரிந்து கொள்ள தனியாக நாள் ஒதுக்க வேண்டும். A1-A50, B1-B50, C1-C50 என என் கண்ணில் 150 வாயில்கள் தென்பட்டன. தோகா விமானத்திற்கான வாயிலை நோக்கி நடந்தேன். ஒரு கிலோமீட்டர் இருக்கும். வழி எங்கும் இருபுறமும் நாற்காலிகளில் பயணிகள் தூக்கத்தில்.

இந்தப்புறமும் அந்தப்புறமுமாக மக்கள் விமானம் பிடிக்க வேக நடையில். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொங்கல், தீபாவளிக்கு திமிரும் மக்கள் வெள்ளத்தை இங்கு பார்த்தேன். எந்தப் பக்கம் திரும்பினாலும் முகங்கள். வேறுவேறு நாட்டு முகம், வேறுவேறு நிற முகம் என திணற வைத்தது.

எழுத்தாளர் சுஜாதா அனுபவ நினைவு ஒன்று இப்போது வந்தது. ஒரு விமான நிலையப் பணியாளரை அழைத்து கேட்டேன்," சென்னையில் இருந்து தோகா செல்கிறேன். இங்கு டிரான்சிட். பெட்டிகள் பாதுகாப்பாக வந்துவிடுமா ?". அவர் என்னை வித்தியாசமாகப் பார்த்தார். "it will come", என்றார் அரேபிய ஆங்கிலத்தில் அலட்சியமாக.

02.30க்கு துபாயில் விமானம் ஏறி, 02.35க்கு தோகாவில் இறங்கினேன். குழப்புதா?. துபாய்க்கும் கத்தாருக்கும் ஒரு மணி நேர வித்தியாசம். ஒரு மணி நேரப் பயணம். இங்கு இமிக்ரேஷன். கண்ணை படம் எடுத்து, பாஸ்போர்ட்டில் சாப்பா குத்தி துரத்தி விட்டார்கள்

லக்கேஜ் எடுக்க கன்வேயர் பெல்ட் அருகில் சென்றேன். அங்கு நின்ற பணியாளர்கள் மூன்று பையை காட்டி "இதில் உங்களுடையது இருக்கிறதா?" என வினவினர். இல்லை என்றேன். "நேராக சென்று வலதுப் பக்கம் திரும்புங்கள். கம்ப்ளெயிண்ட் செக்‌ஷன். உங்கள் பெட்டி துபாயில் தங்கி விட்டது. புகார் கொடுத்து விடுங்கள்". மாற்றக் கூட கையில் உடை இல்லாத சோகத்தோடு ஒரு கிலோ மீட்டர் நடந்து கம்ப்ளெயிண்ட் பிரிவை அடைந்தேன்.

உள்ளே போனதும் மகிழ்ச்சி. விமானத்தில் பார்த்த 20 பேர், பெட்டி வரவில்லை என்று நின்றார்கள். பொறுமையாக விபரம் கேட்டு புகாரை கணினியில் பதிந்து ரசீது கொடுத்தார்கள். இடையில் ஃப்ரீ வை பையில் குமாருக்கு வாட்சப் செய்தேன். அவர், "நாங்கள் வாயிலில் நிற்கிறோம். கவலைப் படாதீர்கள். பெட்டியை வரவழைத்து விடலாம்"என செய்தி அனுப்பி, ஒரு விமான நிலைய செக்யூரிட்டியையும் அனுப்பி வைத்தார், என்னை வெளியில் அழைத்து வர.

ஒரு வழியாக தோகாவில் கால் வைத்தேன். கருப்பு சிகப்பு டீஷர்ட்டில் அப்துல் ரஷீத் கையசைத்தார். 15க்கு மேற்பட்ட கழகத் தோழர்கள் திரண்டிருந்தனர். சால்வை போட்டு வரவேற்க, மற்ற பயணிகள் வினோதமாக பார்த்தனர்.

# கத்தார் வந்தாச்சி !

விமான அறிவிப்பு வந்தாச்சி

எமிரேட்ஸ் விமானம் நோக்கி மனம் பறந்தது. ஆனாலும் கடமை இருக்கிறதே. செந்துறை திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு வாரியங்காவல் சென்றேன். அங்கும் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு ஜெயங்கொண்டம் கிளம்பினேன்.

அப்போது தான் மருதூரில் மூத்த கழகத் தோழர் இறந்த செய்தி. ஜெயங்கொண்டம் திருமணத்தில் மணமக்களை வாழ்த்திவிட்டு, மருதூர் கிளம்பினேன். கத்தாரில் இருந்து அழைப்பு. அண்ணன் சதக்கத்துல்லா பேசினார். "அண்ணா  கிளம்பிட்டீங்களா?".

"இதோ கிளம்பிடுவேன் அண்ணா". மருதூர் சென்று மறைந்த கழகத் தோழருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினோம். இது எதிர்பாராத நிகழ்ச்சி. அரியலூர் சென்று கிளம்பினால், விமானத்தை பிடிக்க சரியாக இருக்கும்.

திருமானூர் ஒன்றிய செயலாளர் அண்ணன் கென்னடி அழைத்தார்," காதணி நிகழ்ச்சிக்கு வந்துடுறீங்களா?". "அண்ணா லேட்டாயிடுச்சி. இப்போ கிளம்பினா தான் விமானத்த பிடிக்க முடியும்".

சென்னை கிளம்பினேன். செல்வம் போன் செய்தார்," கிளம்பிட்டீங்களா? இண்டர்நேஷனல் ப்ளைட். மூன்று மணி நேரம் முன்னாடி போயிடுங்க. இமிக்ரேஷன் இருக்கு". ஏற்கனவே டெல்லி போக விமானத்தை தவற விட்டு பெயர் பெற்றவன் நான், மூன்று முறை.

சென்னை சேர்ந்தேன். நேரத்தில் விமான நிலையம் சென்றேன். அதற்குள் கத்தாரில் இருந்து அய்ந்து அழைப்புகள், ரஷீத், குமார், அண்ணன் அரசு ஆகியோரிடம் இருந்து.

இமிக்ரேஷனில் இரண்டு முறை மேலும், கீழும் பார்த்தவர் கேட்டார்,"எதுக்கு கத்தார் போறீங்க?". "ஒரு பிஸினஸ் மீட்டிங்". விசாவை பார்த்தவர், மீண்டும் என்னை பார்த்தார், பிஸினஸ் முகமா தெரியல போல. விசா ஏற்பாடு செய்த அண்ணன் சதக் 'பிசினஸ் விசா' போட்டிருந்தார்.

விமானத்திற்கு ஒரு மணி நேரம் இருந்தது. பேஸ்புக்கில் ஒரு ஸ்டேடஸ், "கண்ணாடி விழுவதில் தொடர்ந்து சாதனை படைக்கும் சென்னை விமான நிலையம்". சிவகணேஷ் போட்டது இப்போ தானா கண்ணில் படனும். கண்ணாடி இல்லாத இடமா பார்த்து உட்கார்ந்தேன்.

ஒரு வழியா அழைப்பு வந்தது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ். அரபு ஸ்டைல் உடையில் இருந்த விமானப் பணிப்பெண் போர்டிங் பாஸை பார்த்தார். "பர்ஸ்ட் ரைட்" என்றார். சென்னையில் வழி சொல்வது போல் சொல்கிறாரே என நினைத்துக் கொண்டு விமானத்தின் உள் நுழைந்தேன். செகண்ட் ரைட் ஒன்றும் இருந்தது.

விமானத்தில் இருக்கை அமைப்பு  மூன்று வரிசையாய் பிரிக்கப்பட்டு, நடுவில் இரண்டு வழிகள். அதனால் தான் பர்ஸ்ட் ரைட், செகண்ட் ரைட்.  50 வரிசைகளில் 450 இருக்கைகள் இருக்கும்.  ஒரு கிராமத்தையே ஏற்றலாம்.

அறிவிப்பு வந்தது, "flight is going to take off. Please switch off your mobile". அலைப்பேசியை அணைத்தேன். கத்தார் பயணம். உறுதி, இனி ஏதும் அழைப்பு வராது. விமானம் கிளம்பியது.

# கத்தார் பயணம் !