சட்டமன்றத்தில் உரையாற்றி முடித்தேன். அது 2008ம் ஆண்டு. அண்ணன் உபயதுல்லா ஒரு துண்டு சீட்டை நீட்டினார். சட்டசபையில் துண்டு சீட்டு நடமாட்டம் உண்டு. தகவல் பரிமாற்றங்கள் அந்த வகையில் இருக்கும். சட்டமன்ற உறுப்பினர்களுக்குள்ளும் இருக்கும், அமைச்சர்களுக்குள்ளும் இருக்கும்.
அன்றைய முதல்வர் கலைஞர் அமைச்சர்களுக்கு துண்டு சீட்டில் ஆலோசனைகள் வழங்குவார். எதிர்கட்சித் தலைவர்களிடம் கருத்துப் பரிமாறுவார். இப்போதும் அண்ணன் தங்கம்.தென்னரசும் நாங்களும் கருத்துப் பரிமாறிக் கொள்வோம், துண்டு சீட்டில்.
அண்ணன் உபயதுல்லா அப்போது வணிக வரித்துறை அமைச்சர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். அதிர்ந்து பேச மாட்டார். கண்ணியமான வார்த்தைகளை மிகப் பக்குவமாக பயன்படுத்தி பேசுவார். நான்கு முறை தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றிப் பெற்றவர்.
சட்டமன்றத்தில் அவர் உரையாற்றுகிறார் என்றால் தமிழ் ஆர்வம் மிக்க உறுப்பினர்கள், அவரது உரையை கூர்ந்து கேட்பார்கள். காரணம், சங்க இலக்கியம், தேவாரம், திருவாசகம் என்று தமிழ் மழை பொழியும்.
துறை சார்ந்த வணிக வரி விஷயங்கள் குறித்து பதிலளிக்கும் போது, மிக எளிமையாக கேட்போருக்கு புரியும் வகையில் பதிலளிப்பார். எல்லா விபரங்களையும் துல்லியமாக அளிப்பார்.
சட்டசபையில் காலையில் உள்ளே நுழைந்தார் என்றால், நான்கு மணி நேரமோ, அய்ந்து மணி நேரமோ, அன்றைய கூட்டம் முடிந்தது என்று சபாநாயகர் அறிவிக்கும் வரை நகர மாட்டார். அவர் சபை நேரத்தில் வெளியே சென்று பார்த்தது மிக அரிது. யார் பேசினாலும் கூர்ந்துக் கேட்பார்.
சட்டமன்றத்தில் அவருக்கு பின் வரிசையில் தான் எனக்கு இருக்கை. காலையில் வந்த உடன் ஒரு காகிதத்தை எடுத்து கட்டம் போட்டு வைத்துக் கொள்வார். ஆரம்பத்தில் எதற்கோ வைத்திருக்கிறார் என இருந்தேன்.
பிறகு எதற்கு அந்த காகிதம் என கவனிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு உறுப்பினரும் எத்தனை நிமிடங்கள் பேசினார்கள் என அவர்கள் பெயரை எழுதிக் குறித்துக் கொள்வார். பேச்சுக் குறித்து சிறுசிறு குறிப்புகளும் எழுதிக் கொள்வார்.
அவர்கள் கருத்துக்களையும் குறிப்பெடுப்பார். சிறப்பாக பேசினால், கூப்பிட்டு கைக் கொடுப்பார், பாராட்டுவார். சில சமயங்களில் துண்டு சீட்டில் பாராட்டும் வழங்குவார். அப்படி 2008ஆம் ஆண்டு, தொழில் துறை மானியத்தில், சட்டமன்றத்தில் என் உரைக்கு வழங்கிய பாராட்டுக் கடிதம் தான் இது. இன்று ஒரு பழைய பைலை தேடும் போது இந்தக் கடிதம் கிடைத்தது.
கழக ஆட்சியில், பெரும்பாலான அமைச்சர்கள் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளை கவனித்து, பாராட்டியது உண்டு. இப்போது அதிமுக ஆட்சியினர் பேசவே விடுவதில்லை, அப்புறம் எங்கு பாராட்டுவது.
# அது ஒரு காலம், சட்டசபையாக நடந்த காலம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக