பிரபலமான இடுகைகள்

புதன், 10 ஜூலை, 2013

தழுவும் குளிர் தென்றலும், உரசும் உப்புக் காற்றும்....


சிலு சிலுவென்று மெல்லியக் காற்று. 23 டிகிரி வெப்பநிலை. அவ்வப்போது லேசான தூறல். சில நேரங்களில் வலுத்த மழை. அந்த நேரங்களில் வெப்பநிலை குளிர்ந்து, குளிர் காற்று. எங்கு நோக்கினும் பசுமைக் காட்சி. மலையும் பள்ளத்தாக்குமாய் மனதை மயக்குகிறது. 

சரசரக்கும் உப்புக்காற்று. 33 டிகிரி வெப்பநிலை. காலையில் லேசான வெயில். நேரம் செல்ல செல்ல வெம்மை கூடுகிறது. சூரியனின் தகிப்பிற்க்கேற்ப அனல்காற்றாய் மாறுகிறது. சுற்றிலும் மணல் வெளியாய் கடற்கரை.

மலையில் தவழும் மேகப் பொதி மெல்ல தலையை வருடுகிறது. குளிர் சில்லென உடல் முழுதும் ஊடுருவிகிறது. சூரியன் அவ்வப்போது தலைக்காட்ட ஒத்தடம் கொடுக்கும் இளம் வெயில். தூறலால் நனைந்த பூமி. நெடிது வளர்ந்து மழை தாங்கி பின் பொழியும் மரங்கள்.

உச்சி வெயில் தலையை உருக்குகிறது. அனல் காற்று தாக்கி உடலை வாட்டுகிறது. பெய்ய வேண்டிய மழை பொய்த்து மரங்கள் எல்லாம் மொட்டைத் தலையாய். சூரியன் முழு சக்தியையும் காட்ட உப்பேறிய அனல் காற்று தோலை கீறுகிறது.

பசுமைப் பள்ளத்தாக்காய் தேயிலைத் தோட்டம். ஊடுறுவிச் செல்லும் மலைப்பாதை. சரிந்த மலைமுகட்டில் தனியாய் அரண்மனை. நூற்றுக்கும் மேல் அறைகள். எங்கும் வளைய வரும் பணிவானப் பணியாளர்கள். ராணுவ கட்டுப்பாட்டோடு திணிக்கப்பட்ட அமைதி.


கான்கிரீட் காடாய் நகரம். நகரத்தின் மத்தியில் அதுவும் ஒரு வீதி. வீதியில் இருக்கும் வீடுகளில் அதுவும் ஒன்று. மத்தியதரக் குடும்பத்தின் வழக்கமான வீடு. குவியும் பார்வையாளர்களை தாளாமல் திணறும் வீடு. சாலை இரைச்சலோடு இவர்கள் பேச்சும் சேர ஜனசந்தடி.

தேயிலைத் தோட்ட அரண்மனையில் ஒய்யாரமாய் தமிழ்நாட்டின் அரசி. ஓய்வில் இருக்கிறார். "உஷ் அமைதி".

தெருவோர வீட்டிலிருந்து கிளம்புகிறது வாகனம். போராட்டக் களம். மேடையேறுகிறார் மக்கள் தலைவர், மக்கள் பிரச்சினைக்காய். உச்சியில் தகிக்கும் சூரியன். மேடையில் உதயசூரியன். சேது கால்வாய் திட்டத்திற்கான முட்டுக்கட்டைகளை விலக்கி நடைமுறைப் படுத்த வலியுறுத்தி முழக்கம்.

# 90 வயதிலும் சுழலும் சூரியன் !

ஞாயிறு, 7 ஜூலை, 2013

நாடகக் காதலா ?

இளவரசா



காதலை நேசித்தாய்
சாதலை சுவாசித்தாய்

சாதலை தழுவினாய்
காதலை நிறுவினாய்

சா'தீ'யை தொட்டாய்
பாதியை பிரிந்தாய்

பாதியில் கருகினாய்
சாதி தீக்கிரையாக்கினாய்

கண்ணீரில் கரைந்தாய்
மண்ணில் நிலைப்பாய்...



ஒரு நாள் செத்தாய்
என்றும் வாழ்வாய்
சாதி மறுப்பின் சொத்தாய்...

ஞாயிறு, 30 ஜூன், 2013

மைக்செட் போடும் டாக்டர் அவர்களே !

மைக் பிடிக்கிறார் அண்ணன் பரிதி. "கூட்டத்திற்கு தலைமை ஏற்றிருக்கும் டாக்டர் குப்புசாமி அவர்களே" அப்படிங்கிறார். குப்புசாமி" அண்ணே, நான் டாக்டர் இல்லை" என்கிறார். "எனக்கு தெரியாதா, பேசாம இருங்க சார். வரவேற்புரையாற்றிய டாக்டர்.ராமசாமி அவர்களே, கூட்டம் கேட்க வந்த டாக்டர்.பொதுஜனங்களே, பாதுகாப்பு கொடுக்கும் டாக்டர்.போலீஸ்களே, குறிப்பு எடுக்கும் டாக்டர். நிருபர்களே, மைக்செட் போடும் டாக்டர் அவர்களே" என்று நிறுத்தினார்.

யாருக்கும் எதுவும் புரியல. "என்னா நான் பேசறது கேட்டு கோவம் வருதா, அப்போ ஜெயலலிதாவுக்கு டாக்டர் பட்டம் குடுத்து, டாக்டர்.ஜெயலலிதான்னா எனுக்கு எவ்ளோ கோவம் வரும். அவர் டாக்டர்னா, நீங்க எல்லாம் டாக்டர் தான்" அப்படின்னு அவர் முடிக்க எழுந்த சிரிப்பு அடங்க நீண்ட நேரம் ஆனது.

இன்னொரு கூட்டம். ஒரு அதிமுக எம்.எல்.ஏ பத்தி அவரு பேசினது இன்னும் நினைவிருக்கு. "கிராமத்தை சேர்ந்த எம்.எல்.ஏ மொத தடவையா சென்னை வந்தாரு. பைவ் ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிடடாரு. கடேசியா லெமன் ஜூஸ் வந்துது குடிச்சாரு நம்மாளு. பேரர் சிரிச்சாரு, காரணம் கேட்டாரு எம்.எல்.ஏ. அது பிங்கர் பவுல்." 

இப்படி அண்ணன் பரிதி எளிமையா, நகைச்சுவையா சொல்ல வந்த செய்திய கொண்டுப்போய் சேர்த்திடுவாரு. அவரு பேசறாருன்னா நல்ல கூட்டம் கூடும். மெட்ராஸ் தமிழில் பேசினாலும் தமிழ்நாடு முழுக்க அவருக்கு ரசிகர்கள் உண்டு.

91-96 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அவரது செயல்பாடு எந்த எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு உத்வேகம் தரும். தனி ஆளாக பெரும்படையை எதிர்த்தவர். அதற்காக தலைவரால் புகழப்பட்டவர்.

தூரத்திலிருந்து பார்த்து ரசித்தவரோடு பழகுகிற வாய்ப்பு கடந்த சட்டசபையில் தான் கிடைத்தது. எனக்கு முன் வரிசையில் இருந்தார். அன்பாக பழகுவார். சீரியஸா முகத்த வச்சிக்கிட்டு நம்ம கிட்ட எதாவது சொல்றார்னா, நாம ஜாக்கிரதையா இருக்கனும். அவர் சொல்லி முடிக்கிறதுக்குள்ள நாம வெடிச்சி சிரிச்சிடுவோம். 

அவ்வளவு நக்கல், நையாண்டி, கிண்டல் நிறைந்த உரையாடலா இருக்கும். சட்டசபையிலும் யாராவது கேள்வி கேட்டா குசும்பா பதில் சொல்லி சிரிக்க வைப்பாரு. சில கேள்விக்கு அவரு கண்ண உருட்டி, கைய அசைச்சி பதில் சொல்றத்துக்கு முன்னாடியே சிரிக்க வச்சிடுவாரு.

தலைவர் கலைஞர் அவர்களா இருந்தாலும், தளபதி ஸ்டாலின் அவர்களா இருந்தாலும் அண்ணன் பரிதி சகஜமா பேசுவாரு, உரிமையா பழகுவாரு. சட்டமன்றத்தில் அதிமுகவை குறித்த இவர் பேச்சினால், ஒரு தடவை பிரச்சினை வந்த போது தலைவர் கண்டித்தார். இவர் உடனே கிட்டே போய்,"இல்லப்பா. அளவுக்கு மீறி அவங்க பேசனதினால, அப்படி பதில் சொன்னேன்னு " சமாதானம் செய்தார்.

இப்படி இங்க ஃப்ரியா இருந்தவரு எனக்கென்னவோ அங்க தாக்குப் பிடிப்பாருன்னு தோணல.

# அண்னன் ஓ.பி.எஸ் மாதிரில்லாம் அவரால "பணிவா" இருக்க முடியாது...


வெள்ளி, 28 ஜூன், 2013

சார், முதல் லிஸ்ட்ல என் பேர் வரலை...

"ஹலோ, எம்.எல்.ஏங்களா ? "
" ஆமாம். சொல்லுங்க"
" நான் மதுமிதா பேசறேன் சார்"
"சொல்லுங்க"
"போன வருஷம் எங்க ஊர் சேந்தமங்கலத்துக்கு வந்தப்ப அட்மிஷன் வாங்கி தர சொல்லி கேட்டேன்ல சார், நான் தான் பேசறேன்"
"சரிம்மா நான் ஏற்பாடு பண்றேன்"

ஒரு முக்கியத் தோழரிடம் சிபாரிசு கடிதம் கொடுத்து, உள்ளூர் கழக நிர்வாகி மூலம் நிர்வாகத்திடம் சேர்க்க சொல்லி அனுப்பினேன். ஒரு வாரம் கழித்து மறுபடியும் மதுமிதாவிடமிருந்து போன்.

"சார், முதல் லிஸ்ட் போட்டுட்டாங்க. என் பேர் வரலை"
"அப்படியா, நிர்வாகத்தில் பேசறேம்மா"

கடிதம் கொடுத்து அனுப்பியவரிடம், கடிதம் சேர்ந்ததா என விசாரித்தேன். அவர் உள்ளூர் கழக நிர்வாகி வீட்டுக்கு அனுப்பியிருந்தார். நிர்வாகி உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்ததால் கடிதம் கல்வி நிறுவனம் சென்று அடையவில்லை.

கடிதம் கொடுத்த தோழரை நேரே கல்வி நிறுவனத்திற்கு சென்று இது சம்பந்தமாக பேசி வர அனுப்பினேன். நிர்வாகத்தில் இருக்கும் முக்கியமானவர் வெளியூரில் இருப்பதால் சந்திக்க இயலவில்லை. நான் போன் அடித்தேன் எடுக்கவில்லை.

அடுத்த நிலையில் இருந்தவர் இனி இடமில்லை என கை விரித்து விட்டார். மதுமிதா போன் செய்த போது விவரத்தை சொன்னேன். "பரவாயில்லை, வெயிட் பண்றேன். நீங்கள் நேரடியாக ஒரு முறை பேசி முயற்சி செய்யுங்கள்" என்றார்.


கழகப் பணியாக சென்னைக்கும் அரியலூருக்கும் ஷட்டில் ஆகிக் கொண்டிருந்த நிலையில் தினம் மதுமிதாவிடமிருந்து போன். அந்தக் கல்வி நிறுவனத்தின் நிர்வாகியின் மொபைலோ not reachable, switched off. அவர் நிலைமை அப்படி. கடைசியாகக் கிடைத்தார், ஆயினும் பயனில்லை.

மதுமிதாவிற்கு போன் செய்தேன். " அவர்களிடம் பேசினேன். இனி இடமில்லை. அதனால் வேறு இடத்தில் சேர்ந்து விடுங்கள். அடுத்த வருடம் நான் நேரில் வந்து அட்மிஷன் வாங்கி தருகிறேன்"
" சரிங்க சார். அடுத்த வருடம் எப்படியாவது வாங்கி கொடுத்துடுங்க, அங்க படிக்கனும்னு எனக்கு ரொம்ப ஆசை"
"கண்டிப்பாகம்மா. வருத்தப்படாதே"

அந்த அட்மிஷன் : ஏழாம் வகுப்பு.

# கேடில் விழுச் செல்வம் !



திங்கள், 24 ஜூன், 2013

ஒய்வுக்கு பின்பும் பணி தொடரட்டும் !

ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு, பணி நிறைவு விழாவில் உறவினர்களும், உடன் பணியாற்றியவர்களும் வந்து பாராட்டுவது இயல்பு. 

ஆசிரியர் இளஞ்செழியன் ஓய்வு பெற்ற அன்று பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பெற்றோர்கள், மக்கள் பிரதிநிதிகளும் திரண்டு வாழ்த்தியது அவரது சிறப்பு. குடும்ப நண்பர் என்பதால் அண்ணன் என்றே இவரை அழைப்பேன்.

நான் படித்த பள்ளி, ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி. நான் சட்டமன்ற உறுப்பினரான நேரத்தில் இளஞ்செழியன் இப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர். தலைமை ஆசிரியர் திரு.தமிழரசன் அவர்கள்.

த.ஆ தமிழரசன் அவர்கள் பெரிய மீசையோடு, உருட்டும் விழியோடு "டெரராக" கட்டுப்பாடிற்கு இலக்கணம். அண்ணன் இளஞ்செழியன் நெற்றி நிறைய திருநூறோடு, வாய் மணக்க திருவருட்பாவோடு "சாத்வீகமாக" இருப்பவர். இந்த முரண் சோடி அந்தப் பள்ளியை நல்ல தேர்ச்சி விகிதம் மற்றும் ஒழுக்கத்தோடு வழிநடத்தினர்.

அண்ணன் இளஞ்செழியன் அவர்களது மாமனார் மறைந்த சதாசிவம் அவர்கள் 1971ல் திமுக சார்பாக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். அமைதியானவர். அதனாலேயும் இவரது தந்தையாராலும் திராவிட உணர்வாளர். ஆனால் இது குறித்து யாரும் குறை சொல்லாத வகையில் பணியில் சிறப்பானவர்.

ஓர் ஆண்டுக்கு முன் பணி உயர்வு பெற்று தலைமை ஆசிரியர் ஆனார். தற்போது பணி நிறைவு பெற்ற போது அந்தப் பள்ளியில் இருந்து நூற்றைம்பது கி.மீ பயணம் செய்து வந்து நிகழ்ச்சியில் அவ்வூர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்தினர். அந்த அளவிற்கு அங்கும் நிறைவான பணி.

அதிலும் B.E படித்த 25 வயது மகனை ஒரு விபத்தில் இழந்த நிலையிலும், தன் ஆசிரியர் பணியை குந்தகமின்றி சிரமேற் கொண்டு செய்தது தான் அவரது கடமையின் உச்சம்.

பணி நிறைவு விழாவில் கலந்து கொண்டு அவரதுப் பணி சிறப்புகளை கூறி வாழ்த்தினேன், ஓய்வு அரசுப் பணிக்கு தான், எனவே பொதுப்பணிக்கு வரவேண்டும் என அழைத்தேன். அவர் நன்றி கூறினார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள்.

" எனது மாமனார் கலைஞர் முதலமைச்சராக இருந்தப் போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். நான் 1989ல் தலைவர் கலைஞர் ஆட்சி காலத்தில் பணிக்கு சேர்ந்தேன். அவர் காலத்தில் நல்லாசிரியர் விருது பெற்றேன். ஆனால் அதை விட பெருமை, நான் ஓய்வு பெறும் போது பணியாற்றிய பள்ளி தான்."

பணி உயர்வு பெற்றப் போது கவுன்சிலிங்கில் பக்கத்து மாவட்டங்களில் பல பள்ளிகள் காலியாக இருந்தன. ஆனால் அவர் தேர்வு செய்தது 150 கி.மீ தூரத்தில் இருந்த அந்த பெருமைக்குரியப் பள்ளி : அஞ்சுகம் முத்துவேலர் மேல்நிலைப்பள்ளி, திருக்குவளை.

# பணி தொடரட்டும் !



நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க !

பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை அவர் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அவரது மேசை மேல் ஒரு ரியல் எஸ்டேட் விளம்பரம் கிடந்தது. புரட்டிப் பார்த்தேன். அரக்கோணம் அருகே ஒரு நகர்.

" ஏம்பா சென்னைக்கு பக்கம்னா அரக்கோணம் தானா ? " எனக் கேட்டேன். " இல்லம்மா, அஙக மார்க்கெட் நல்லாருக்கு. அதனால தான்" என்றார். " அட, அரக்கோணத்தில அவ்வளவு கிராக்கியா ?"

" நீ ஒரு மனை வாங்கு, இரண்டு வருஷம் கழிச்சி வித்துட்டு லாபம் எவ்வளவுன்னு சொல்லு" என்றார் ஸ்ரீதர். "கிண்டல் பண்ணாதம்மா" என்றேன். "இருக்கறத அட்வான்ஸ் கொடும்மா" என்றார்.

சட்டை பாக்கெட்டை பார்த்தேன், அய்யாயிரம் தான் இருந்தது. மனை விலை இரண்டு லட்சத்தை தொடும். "சரி, அடுத்த முறை தர்றேன்" என்றேன். "பரவாயில்ல, இருப்பதைக் கொடு" என்றார். அய்யாயிரத்தை கொடுத்தேன்.

அரசியல் பணி நெருக்கடியில் அவரது அலுவலகம் செல்ல நேரம் வாய்க்கவில்லை. ஆறு மாதம் கழித்து ஒரு நாள் போன் செய்தார். "சிவா, அந்த மனை நல்ல ரேட் வருது. கேட்குறாங்க, கொடுத்துடலாமா ?" என்றார். " சரி 
ஸ்ரீதர்" என்றேன். "எவ்வளவுன்னா கொடுக்கலாம் ?" " உன் இஷ்டம்  ஸ்ரீதர்".

அடுத்த முறை சென்னை வந்த போது அழைத்தார். ஒரு கவரை கொடுத்தார். பிரித்து பார்த்தால் ஒரு லட்ச ரூபாய். மயக்கம் வராதக் குறை. "என்ன இது" என்றேன். "அந்த மனையில் கிடைத்த லாபம்" என்றார்.

எனது கல்லூரி நண்பர் 
ஸ்ரீதர். சிவில் இன்ஜினியர். படித்து முடித்தவுடன் சென்னையில் கட்டுமானத் தொழில் துவங்கிவிட்டார். பல கட்டிடங்களை கட்டி ஒரு வெற்றிகரமான பில்டராக பரிணமித்து வருகிறார்.

எங்களோடு கல்லூரியில் படித்த நண்பர்கள் பலர் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். அவர்கள் சென்னையில் வீடு வாங்குவதென்றால் ஶ்ரீதரை தான் அணுகுவார்கள். அந்த அளவிற்கு நம்பிக்கைக்குரியவர்.

இது போல பல நண்பர்கள் இவர் கட்டும் ஃபிளாட்களில் முதலீடு செய்து நாற்பது, அய்ம்பது லட்சம் லாபம் பார்த்தவர்கள் உண்டு.

சில வருடங்கள் கழித்து ஒரு நண்பரோடு அவரது அலுவலகம் சென்றிருந்தேன். ஒரு புது பிராஜக்ட் குறித்து தீவிரமாய் விவாதித்துக் கொண்டிருந்தார்.

அப்போது நண்பர் ,"சிவசங்கர் இதுவரை சென்னையில் லாட்ஜ்க்கு கொடுத்த வாடகைக்கு வீடு வாங்கியிருக்கலாம். இவருக்கு ஒரு வீடு கொடுங்க" என கிண்டலடித்தார். உடனே ஶ்ரீதர் "இரண்டு வருஷமாவே நான் சொல்றேன். சிவா கேட்கல. இப்ப சரின்னு சொல்லட்டும், ஒரு பிளாட் எடுத்துக்கட்டும். லாபமே வேண்டாம்" என்றார்.

இப்போ அய்ம்பதினாயிரம் அட்வான்ஸ். அவரே பேங்கிற்கு பேசினார். அவரே ஆடிட்டரை பார்த்தார். அவரே பேப்பர் தயார் செய்தார். அவரே லோன் சேங்ஷன் பெற்றார். ஒரு நாள் சாவியை கையில் கொடுத்துவிட்டார். வேறு யாருக்காவது விற்றிருந்தால் இருபது லட்சமாவது லாபம் பார்த்திருக்கலாம் அவர். இது எனக்கு மட்டுமல்ல, பல நண்பர்களுக்கும்.

அந்த 
ஸ்ரீதர் இல்லத்தில் ஒரு விழா. குடும்பத்தோடு கலந்து கொண்டு வாழ்த்தினேன். அவரது துணைவியார் விருந்து உபசரித்தார். அப்போது அவரிடம் சொன்னேன்," இருபது வருடம் கழித்து இப்போதாவது ஶ்ரீதருக்கு இந்த எண்ணம் வந்ததே, மகிழ்ச்சி". 

ஸ்ரீதர் துணைவியார் " இப்போ இல்லன்னாலும் வருத்தம் இல்லைங்க. அவரு சந்தோஷமா இருந்தா போதும். எத்தனை பேருக்கு வீடு கட்டிக் கொடுத்திருப்பாரு, அவங்க சந்தோஷம் தாங்க பெரிசு" என்றார்.

இருபது வருடம் கழித்து, மற்றவர்களுக்கு எல்லாம் வீடு கட்டிக் கொடுத்த ஸ்ரீதருக்கு வந்த "அந்த எண்ணம்", இப்போது தான் சொந்தமாக ஒரு ஃபிளாட். அதற்கான புதுமனை புகுவிழா தான் அது.

# நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க !



( ஸ்ரீதர் தன் குடும்பத்தினர் மற்றும்  நிறுவனத்தை சேர்ந்தவர்களுடன் )

சனி, 15 ஜூன், 2013

டிரஸ்ஸு கண்டு தள்ளாமை வேண்டும்

மலைக்கோட்டை தொடர்வண்டி வழக்கம் போல் லேட். எப்பவுமே லேட், இன்னும் இழுக்கும் போல...

அரியலூர் ரயில் நிலையம். வழக்கத்தைவிட கூட்டம் குறைவு தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக உட்கார்ந்திருந்தார்கள்.

பத்து நிமிடம் கடத்தினேன், முடியவில்லை. நம் வர்க்கத்திற்கான இணைய நோய் வாட்டியது. Ipad எடுத்து தற்சமய செய்திகளை பார்த்தேன். அப்புறம் முகநூலில் மூழ்கினேன்.

காற்று சில்லென்று வீசிக் கொண்டிருந்தது. நாள் முழுதும் ...18 திருமணம் மற்றும் மற்ற நிகழ்வுகளுக்காக 300 கி.மீ அலைந்த அசதி தலை தூக்கியது.

சுற்றிலும் பார்த்தேன். இரண்டு பென்ச் தாண்டி ஒருவர் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். ரயில் வர நாற்பத்தைந்து நிமிடம் ஆகும் என அறிவிப்பு.

மற்ற பென்ச்களில் யாரும் இல்லை. கிரானைட் பென்ச் படுக்க தூண்டியது. கையிலிருந்த பையை தலைக்கு வைத்து சாய்ந்தேன். கூட இருந்த நண்பர் ஒரு பென்சில் சாய்ந்தார்.

முகநூலை தூக்கம் வென்றது. சிறிது நேரத்தில் 'டொக் டொக்' சத்தம். இரு காவலர்கள் தங்கள் பணியை நினைவுப்படுத்த ஒவ்வொரு பென்சாக தட்டிக் கொண்டு வந்தனர்.

எனக்கு முன் படுத்திருந்தவரை எழுப்பி "எங்கே" என்றனர். "சென்னை" என்றார். "தூங்கிடாதீங்க" என சொல்லி என்னை பார்த்தனர். "சென்னை, ராக்போர்ட்" என்றேன். தலையசைத்து, அடுத்த பென்சை நோக்கி நகர்ந்தனர்.

சிறிது நேர தூக்கத்திற்கு பிறகு ரயில் வரும் அறிவிப்பு. அரக்க பரக்க எழுந்தேன். அடுத்த பிளாட்பாரத்தில் ரயில் வந்தது. ஓடி பெட்டியில் ஏறினேன். இன்னும் இரு வட இந்தியர்களும்.

வாசலிலேயே பயணச்சீட்டு பரிசோதகர். அவர்களையும் பார்த்தார், என்னையும் பார்த்தார். அவர்கள் அலுவலகம் செல்பவர்கள் போல இன்சர்ட் செய்து, பவுடர் போட்டு பளிச் என்று இருந்தனர். இரவு 12.30.

அவர்கள் பயணச்சீட்டையும் Pancard-ம் காட்டினார்கள். சார்ட்டில் டிக் அடித்தார். நான் பயணச்சீட்டையும் சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டையையும் காட்டினேன்.

அடையாள அட்டையை கொஞ்ச நேரம் பார்த்தார், திருப்பி திருப்பி பார்த்தார். பிறகு என்னை ஒரு முறை மேலும் கீழும் பார்த்தார். கலர் பேண்ட் சர்டில், தோள் பையோடு இருந்தேன். அலைச்சல் மற்றும் தூங்கி எழுந்ததில் தலை கலைந்து அயர்வாக இருந்தேன்.

" இது என்ன கார்டு ?" என்றார். " மேலேயே தமிழ், இங்கிலீஷில் போட்டிருக்கு" என்றேன். படித்தார், அதிலிருந்த படத்தையும் என் முகத்தையும் ஒப்பிட்டு பார்த்தார்.

" ஹிஹி. இந்தக் கார்ட பார்த்ததில்ல, இந்த டிரஸ்ல எதிர்பார்க்கல" என்றார். "ஹிஹி" என்றேன். வேற என்னத்த சொல்ல...

# டிரஸ்ஸு கண்டு தள்ளாமை வேண்டும் !