மணீஷ். ஆறாம் வகுப்பு
படிக்கும் பையன். பள்ளியில் நல்ல பிள்ளை என்ற பேர் பெறுபவன். எல்லாப் பாடங்களிலும்
90-95 மதிப்பெண் எடுப்பவன்.
வீட்டிலும் அன்பு பிள்ளை.
கடந்த மாதத்தில் நடைபெற்ற
கனிம சுரங்க பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் பேசி முதல் பரிசு பெற்றான். அதே போல
விளையாட்டிலும் ஆர்வமானவன். வருகின்ற அக்டோபர் மாதத்தில் நடைபெற இருக்கின்ற மாநில
அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க தேர்ச்சி பெற்றவன்.
எனக்கு நெருக்கமான கழகத்
தோழர் ரமேஷின் மகன். பள்ளி விட்டால் தந்தையோடு கிரவுண்டில் தான் பார்க்கலாம்.
விடியற்காலை எழுந்து படித்து விட்டு, எக்ஸர்சைஸ் செய்து விட்டு பள்ளி கிளம்பினால், மாலை வந்து ஒர்க் அவுட். அப்படி சுறுசுறுப்பானவன்.
கடந்த தேர்வில் ஹிந்தியில்
எதிர்பார்த்ததை விட 10 மார்க் குறைவு. அனைத்து
பாடத்திலும் நல்ல மதிப்பெண் எடுக்கக்கூடியவன் இப்படி செய்து விட்டானே என அம்மா
கண்டித்திருக்கிறார்.
கடந்த வாரம் வியாழக்கிழமை, காலை தந்தை ரமேஷ் கோவிலுக்கு சென்று விட்டார். தாய் மகனை படிக்க
சொல்லி விட்டு வயலுக்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தால்
வீடு உட்பக்கம் பூட்டியிருக்கிறது.
உள்ளே பார்த்தால் குழந்தை
தூக்கில் தொங்குகிறான். ஊரே கூடிவிட்டது. இந்த பிள்ளை அமைதியான பிள்ளையாயிற்றே என
அனைவரும் துக்கத்தில். செய்தி கிடைத்து போகும் போது போஸ்ட்மார்ட்டத்திற்காக குழந்தையின்
உடலை அரியலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டனர்.
மார்ச்சுவரியில் வைத்து
பார்த்தேன். கண்ணாடி, ஒட்ட டிரிம் செய்யப்பட்ட முடி, பேண்ட், ஷர்டில் அடக்கமாக தூங்குபவனை
போல் படுத்திருந்தான். இது போன்ற பல மரணங்களை பார்த்திருக்கக் கூடியவர் தான், ஆனால் டாக்டர் வானொலி அவர்களுக்கே வருத்தம் தாங்க முடியவில்லை.
முன்னாள் ச.ம.உ அய்யா ஆறுமுகம் இரண்டு மணி நேரம் மருத்துவமனையிலேயே
உட்கார்ந்துவிட்டார், வருத்தம் தாளாமல்.
ரமேஷை தான் எப்படி தேற்றுவது
என்று தெரியவில்லை. ஒரே மகன் மணீஷ். பிரிந்துவிட்டான். தன் சொல்லால் மகன்
மரித்தானோ என மனைவி அரளி விதை குடித்து உயிருக்கு போராடும் நிலையில்
மருத்துவமனையில்....
போஸ்ட்மார்ட்டத்திற்காக
மருத்துவமனையில் காத்திருந்த நேரத்தில் பார்த்தோரெல்லாம்
அவன் பெருமையே பேசினர். எல்லோர் உள்ளங்களிலும் குடி கொண்டவன், இன்று உலகில் குடியில்லை.
# குழந்தைகளை குழந்தைகளாகவே
இருக்க விடுவோமே....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக