பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

சிமெண்ட் ஆலைகளும் மாறி வரும் தொழில் நுடபமும்....

இன்று ஒரு வேலையாக அரியலூர் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் சிமெண்ட் ஆலைக்கு சென்றிருந்தேன். மிக சமீபத்தில், நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலைக்கு ஆய்வுக் குழுவில் சென்றிருந்த நினைவு வந்தது.

                            

தன்னிச்சையாக இரண்டு ஆலைகள் குறித்த ஒப்பீட்டுக் காட்சி மனதில் ஓடியது. plant மற்றும் machineries குறித்த ஒப்பீட்டை ஒதுக்கி அலுவலகம் குறித்து மாத்திரம் இங்கே சொல்ல விழைகிறேன்.

அரசு ஆலையில் தலைமை நிர்வாகி அறை தனியாக. மற்றப் பிரிவுகளுக்கு தனித்தனி அறை. இண்டர்காமில் பேசிக் கொள்ளலாம், அல்லது ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு வந்து பேச வேண்டும். எல்லா அறைகளிலும் அறை முழுதும் பீரோ மற்றும் மேசை. மேசை நிறைய ஃபைல்கள், கத்தை கத்தையாக பேப்பர்கள். அரிதாக கணினி.

                            

தனியார் ஆலையின் அலுவலகத்தினுள் நுழைந்தால் ஐ.டி அலுவலகத்திற்கு வந்த உணர்வு. மிக பிரம்மாண்டமான ஹாலில் இடுப்பளவு மறைக்கப்பட்ட கியுபிக்கிள்ஸ், அதில் ஒவ்வொருவரும் லேப்டாப்புடன். எங்கும் பேப்பர் கண்ணில் படவில்லை.

இரண்டு. மூன்று அறைகள் நிர்வாகிகளுக்கு, அவை பாதியளவு கண்ணாடியாலான சுவர் கொண்டவை. அதில் ஒரு அறை தலைமை நிர்வாகி அறை. அங்கிருந்து அலுவலகம் முழுதையும் கண்காணிக்கலாம்.

ஹாலின் கடைசியில் கண்ணாடியால் தடுக்கப்பட்ட பெரியளவு அறையில் ஹாலிவுட் படத்தில் வருவது போல பெரிய, பெரிய மானிட்டர்கள். அதனை மூன்று பேர் கண்காணித்துக் கொண்டிருந்தனர். ஆலையின் மொத்த நடவடிக்கையும் இங்கிருந்து கண்காணிக்கப்படுகிறது, கட்டுப்படுத்தப்படுகிறது.

சுரங்கத்தில் இருந்து வருகிற சுண்ணாம்புக்கல் தரம் அறிவதிலிருந்து, கலவை விகிதாச்சாரம் சரி செய்வதிலிருந்து ஒவ்வொரு நடவடிக்கையும் அலுவலகத்தில் இருந்தே நடக்கிறது. அரசு ஆலையில் இது அத்தனையும் பிளாண்டில் நடைபெறும்.

அடுத்து முழு சுவரும் கண்ணாடியாலான ஒரு கண்ணாடி கான்ப்ரன்ஸ் அறை. அதில் கிட்டத்தட்ட 20 பேர் கொண்ட கூட்டம் நடந்துக் கொண்டிருந்தது. அது தினம் நடக்கும் கூட்டமாம், முதல் நாள் நடவடிக்கைகளை ஆய்ந்து மறுநாள் நடவடிக்கைகளை திட்டமிடும் கூட்டம். இது போன்ற கூட்டம் அரசு ஆலையில் மாதம் ஒரு முறை நடைபெறும் என நினைக்கிறேன்.


                               

நவீனப்படுத்தப்பட்டதால் அரசு ஆலையை விட 50% குறைவான மனித சக்தியை கொண்டு தனியார் ஆலைகள் இயக்கப்படுகின்றன. அந்த வேலைகளும் காண்டிராக்டாக விடப்படுகிறது. இது ஒரு புறம் வேலைவாய்ப்பு இழப்பு, இன்னொரு புறம் நிறுவனத்திற்கு லாபம்.

இத்தனை நவீன வசதிகளோடும், எளிய நடைமுறைகளோடும் தனியார் ஆலைகள் லாபகரமாக இயங்குகின்றன. அரசு ஆலைகள் சிவப்பு நாடாக்களில் கட்டப்பட்டு தள்ளாடுகின்றன. (ஆனால் எங்கள் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை ஆறு ஆண்டுகளுக்கு மேலாக லாபத்திலேயே இயங்குகிறது, ஆனால் அரசின் ஆலங்குளம் ஆலை நட்டம்)

# அரசு துறைகளிலும் நவீனமயம் தேவை, மெல்ல மெல்லவாவது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக