பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

அதிமுக அலுவலகம் திணறல் - வெளி மாநிலத்தினர் குவிந்தனர்....

பண்ருட்டியார் இயக்கத்தில் இணைந்தார். எம்.எல்.ஏ அருண் சுப்ரமணியன் சந்தித்தார். எம்.எல்.ஏ கலையரசன் நன்றி சொன்னார். வெண்ணிற ஆடை நிர்மலா தலைமையை ஏற்றார். காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏக்கள் கட்சியில் சேர்ந்தனர்.

                      

தமிழக அரசியல் களம் சூடாகி விட்டது. அடுத்து யார் என்ற பரபரப்பு கிளம்பி விட்டது. இவரா, அவரா என்று யாரை பார்த்தாலும் எல்லோருக்கும் சந்தேகம் சில கட்சிகளில். அலுவலகங்களுக்கு கூடுதல் செக்யூரிட்டி ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல்.

போயஸ் தோட்ட வாசலிலும், அதிமுக தலைமையகத்திலும், கோட்டையிலும் 24 மணி நேரமும் கேமராவுடன் ஊடக முற்றுகை. போயஸில் விடியற்காலை பால் ஊற்ற சென்ற பால்காரரை, யாரோ பிரமுகர் என கேமராக்கள் துரத்த, அவர் பயந்து ஓடிப் போனார். வீட்டு வேலைக்கு வந்த பெண் பணியாளரை துரத்த, அவர் அழவே ஆரம்பித்துவிட்டார்.

அதிகாரிகளை சந்திக்க, கோட்டைக்கு எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் வந்தால், "சார், அப்பாயிண்ட்மெண்ட் எப்போ ?" "தொகுதி வளர்ச்சியா ?" "நன்றி சொல்லவா ?" "இப்போ எந்தக் கட்சி ?" என்று நிருபர்கள் துரத்த ஆரம்பித்தனர். தலை தெறிக்க ஓடினர்.

இதெல்லாம் போதாது என்று இன்று அடுத்த அதிரடி திருப்பம். மகராஷ்டிரா, ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500 பேர் அதிமுகவில் இணைய, இன்றைய ஆல் இண்டியா நியூஸ் இது தான். "என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்" இது தான் அனைத்து தேசிய தொலைக்காட்சிகளிலும் பேனல் டிஸ்கஷன்.

                             

நாளை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து, ஜார்கண்ட் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் "சூல்கணபதி" வருவதாக தகவல். ஜார்கண்ட் மாநிலவே தூக்கமிழந்து நிற்பதாக தொலைக்காட்சிகள் அலறுகின்றன. அசாம் மாநிலத்திலிருந்து அசாம் முற்போக்கு கழகத்தின் துணைத் தலைவர் "வர்க்கீஸ் ராமச்சந்திரன்" அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருப்பது, அசாமின் தலைப்பு செய்தி.

" இந்தியாவின் எதிர்காலம் அம்மா தான்" என ராயலசீமாவின் இரண்டு ஆந்திரதேச கட்சியின் எம்.எல்.ஏக்கள் அம்மா பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பதியில் தங்கதேர் இழுத்து கொண்டாடியுள்ளனர். அவர்கள் திருப்பதி லட்டுக்களோடு சென்னை நோக்கி நடைபயணமாக வந்து கொண்டுள்ளனர்.

"இந்திய சினிமாவின் நூற்றாண்டை எந்த மாநிலமும் கொண்டாட முன்வராத போது, கோடிகளை அள்ளி கொடுத்து, விழா நடத்தி இந்தியா சினிமாவின் உயிர்காத்தவர் அம்மா தான்" என்று கூறி நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் ஆகியோர் நாளை மறுநாள் அதிமுகவில் இணைய உள்ளனர்.

கடந்த தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இருந்த பிகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் மற்றும் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜார்கண்டின் முன்னாள் முதல்வர் மதுகோடா ஆகியோர் அதிமுகவின் வெப்சைட்டில் புதிதாக அளிக்கப்பட்டுள்ள "ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை" மூலம் அதிமுகவில் இணைய விண்ணப்பித்துள்ளனர்.

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த முதல்வர் ஜெ-வை உதவியாளர் உலுக்கி எழுப்பினார்.

முதல்வர் கோபமாக "என்ன ?" என்றார். " தோட்டத்து கேட்டை ஏறிக் குதித்து, இரண்டு பேர் தூங்காம உங்கள பார்க்கனும்னு ஒக்காந்திருக்காங்கம்மா. பேர கேட்டா, பேசாம சைகை தான் காட்டுராங்க, கட்சியில சேரனுமாம்". "எப்படி இருக்காங்க ?"

"ஒருத்தரு தாடி வச்சிருக்காரு. பைஜாமா, ஜிப்பா போட்டிருக்காரு. டர்பன் கட்டியிருக்காரு. கையில மிக்சர் பாக்கெட் வச்சிக்கிட்டு சாப்பிட்டுகிட்டே இருக்காரும்மா"

"இன்னொருத்தரு ?"

"அவரு வேட்டி, சட்டைல இருக்காரும்மா. கழுத்துல சால்வையை மடிச்சி போட்டுருக்காரு. கண்ணாடி போட்டிருக்காரு. புஷ் குல்லா போட்டுருக்காரு. அப்பப்போ ரெண்டு விரல வச்சி மூக்க சுண்டுறாரும்மா"

வியாழன், 27 பிப்ரவரி, 2014

உலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்

ஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆனால் தமிழகத்து மக்களுக்கு தான்...

ஆளுநர் உரை. வணக்கம் வைத்தவாறு உள்ளே நுழைந்தார் ஆளுநர். தமிழ்தாய் வாழ்த்து முடிந்து, நாற்காலியில் அமர்ந்த உடனேயே, உரையை படிக்க ஆரம்பித்தார். திமுகவின் சட்டமன்ற கட்சி தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் எழுந்து நின்றதை கவனிக்காதது போல வாசிப்பை தொடர்ந்தார்.

                                      

திமுக ஆட்சிக் காலத்தில் எதிர்கட்சியினர் எழுந்து நின்றால், அவர்களை பேச விட்டே, ஆளுநர் உரையை தொடரவார், இப்போது இப்படி. தாயைப் போல் பிள்ளையோ இல்லையோ, முதல்வரை போல் ஆளுநர். ஆளும் அரசின் தோல்விகளையும், தவறுகளையும் பட்டியலிட்டார் தளபதி அவர்கள்.

ஸ்டாலின்  அவர்களின் பேச்சு பத்திரிக்கையாளர்கள் காதில் விழாமல் தடுக்க, அதிமுகவினர் மேசையை தட்ட ஆரம்பித்தனர், ஓங்கி ஓங்கி. இதில் ஆளுநர் குரலும் கேட்கவில்லை. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் உரையை புறக்கணித்து, தளபதி அவர்கள் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தோம்.

--------------------------------------

(மறுநாள்)

ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து பேச விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களை அழைத்தார் சபாநாயகர். அம்மா புராணத்தோடு துவங்கியவர் புரட்சி என்பதற்கு நீண்ட விளக்கம் கொடுத்தார். "நித்தம் அம்மா செய்யும் புரட்சியின் வெளிப்பாடே இந்த ஆளுநர் உரை" என்றவர் ஆளுநர் உரையை தொடாமல் டைரக்டாக திமுகவை தாக்க ஆரம்பித்தார்.

"தாக்க வந்தால் காவல் நிலையம் போவது தானே, ஏன் பத்திரிக்கையாளரிடம் போக வேண்டும் ?" என்று ஆரம்பித்தவர், தொடர்ந்து கலைஞர் குறித்து தரக்குறைவாக பேச ஆரம்பித்தார். உடனே திமுக உறுப்பினர்கள் பொங்கி எழுந்தோம். ஜெ.அன்பழகன் முன்னேறி சபாநாயகர் அருகில் சென்று குரல் எழுப்பினார். கிட்டத்தட்ட எல்லா உறுப்பினர்களும் முன்புறம் வந்து விட்ட நிலை. 'ஆளுநர் உரை குறித்து பேசாமல், கலைஞர் குறித்து பேசுவதை அனுமதிக்க முடியாது' என்றோம். அதனை அவைக் குறிப்பிலிருந்து நீக்க குரல் எழுப்பினோம். சபாநாயகர், "நான் அதனை படித்து பார்த்து முடிவு செய்கிறேன்"என்று சொன்னார். அவைமுன்னவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து,"அவர் பேசுவதில் தவறு இல்லையே" என்று ஆரம்பிக்க, கொந்தளிப்பு அதிகமானது. சபாநாயகர் எழுந்து நின்று, "உங்கள் துணை தலைவர் விளக்கம் தரட்டும். எல்லோரும் இருக்கைக்கு செல்லுங்கள்"என சொன்னார்.

துணைத்தலைவர் அண்ணன் துரைமுருகன் அவார்களுக்கு மைக் இணைப்பு தரப்பட்டது. எல்லோரும் இருக்கைக்கு திரும்பினோம். ஆனால் ஜெ.அன்பழகன் சபைக்குறிப்பிலிருந்து மார்க்கண்டேயன் பேச்சை முதலில் நீக்குங்கள் என தொடர்ந்து வலியுறுத்த, சபாநாயகர் அவரை வெளியேற்ற உத்தரவிட்டார். காவலர்கள் அவரை வெளியேற்றினார்கள்.

துரைமுருகன்"இது ஆளுநர் உரை மீதான விவாதம். இதில் எங்கள் தலைவர் கலைஞர் குறித்தான விவாதத்திற்கு என்ன அவசியம் ? நாங்கள் இதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தால், உங்கள் ரத்தம் உறைந்து போகும்." என்றது தான் தாமதம்... அமைச்சர் முனுசாமி துள்ளி எழுந்தார். "அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். ரத்தம் உறைந்து போகும் என்பதை நீக்க வேண்டும்" என்று தாண்டவமாடினார். உடனே சபாநாயகரும் நீக்க உத்தரவிட்டார். "மார்க்கண்டேயன் பேசியதை நீக்காமல் இதை நீக்கக் கூடாது" எனக் குரல் எழுப்ப, முனுசாமி"அது உலகம் பூராவும் போன செய்தி" என்று ஆரம்பித்து பேசிக் கொண்டே இருந்தார்.

முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு ஆவேசமாக குரல் எழுப்பிக் கொண்டே சபாநாயகரிடம் சென்று வாதம் செய்தார். ஒவ்வொரு உறுப்பினராக அவையின் மையப் பகுதிக்கு சென்று எதிர்ப்புக் குரல் எழுப்ப ஆரம்பித்தோம். சபாநாயகர் "இருக்கைக்கு போங்க"என்று தொடர்ந்து உத்தரவிட்டுக் கொண்டிருந்தார். "அவைக் குறிப்பிலிருந்து நீக்கு" என்று நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம். நானும், லால்குடி சவுந்தரபாண்டியனும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டிருந்தோம். நான், எனக்கு வழங்கப்பட்டிருந்த ஆளுநர் உரையை கையில் வைத்திருந்தேன். அதனை சபாநாயகரிடம் காட்டி "இதில் இல்லாதவற்றை பேசுவதற்கு, இந்தப் புத்தகம் எதற்கு ?" என்று கேட்டேன். அவர் என்னை எச்சரித்தார். "தேவைப்படாத புத்தகம் எதற்கு ?" என்று சொல்லி கிழித்தேன். அவ்வளவு தான், சிக்ஸர் அடித்தால் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எழுவது போல், அதிமுகவினர் ஒரே நேரத்தில் எழுந்து நின்று என்னைப் பார்த்து குரல் எழுப்பினர். வழக்கம் போல் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசமானார். கே.பி.முனுசாமி துடித்துப் போனார். சபாநாயகர் அப்போது தான் பார்த்தார்.

திமுக உறுப்பினர்கள் அனைவருமே மையப் பகுதியில் குவிந்திருந்தோம். அமைதியான கொறடா சக்கரபாணியே ஆவேசமாகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். சபாநாயகர் எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார். காவலர்கள் நுழைந்து அப்புறப்படுத்த ஆரம்பித்தனர். முன்னாள் அமைச்சர் மைதீன்கான் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டார். இன்னும் இருவர் அமர்ந்துவிட காவலர்கள் தவித்துப் போயினர். ஒரு வழியாக எல்லோரையும் வெளியேற்றினார்கள். ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் சபாநாயகரை கண்டித்து கோஷம் போட்டவாறே வெளியே வந்தோம். சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து அண்ணன் துரைமுருகன் பேட்டியளித்த பிறகு, காருக்கு காத்திருந்த என்னை பத்திரிக்கை போட்டோகிராபர்ஸ் சுற்றி வளைத்து போட்டோ எடுக்க, என்ன என்று விசாரித்தேன். "கூட்டத் தொடர் முழுதும் சஸ்பெண்ட்".

                     

மறுநாள் நாங்கள் திமுகவினர் சபையில் இல்லாத நேரம், ஆளுநர் உரையில் பேசிய மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டை ஜெயலலிதா அரசு பின்பற்றாததையும், இஸ்லாமியர் இட ஒதுக்கீடு குறித்தும் தக்க ஆதாரங்களுடன் பேச, இடைமறித்த உணவு அமைச்சர் காமராஜ், "இதற்கும் ஆளுநர் உரைக்கும் என்ன சம்பந்தம் ? பேசக் கூடாது" என்று சொல்லியிருக்கிறார்.

"இதனை ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் பேசக் கூடாது என்றால், நேற்று மார்க்கண்டேயன் பேசியது ஆளுநர் உரை மீதானதா ?" எனக் கிடுக்கிப்பிடி போட அமைச்சர் திணறி போயுள்ளார். ஆளுக்கொரு நியாயம், அம்மா அரசாங்கத்தில்....

அன்று சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்த திமுக உறுப்பினர்கள் அவைக்கு செல்லவில்லை. பத்திரிக்கையாளர்களை சந்தித்த தளபதி ஸ்டாலின் அவர்கள் ,"முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை பலமுறை கட்சியை விட்டு நீக்கி, பிறகு அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறவில்லையா? மீண்டும் அவர்களை சேர்த்துக் கொள்ளவில்லையா? இதுபற்றி பேரவையில் பேச எங்களை அனுமதிப்பார்களா?

                           

அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். செயல்பட முடியாதவராக உள்ளார் என்று அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தது ஆதாரப்பூர்வமாக மக்கள் குரல் பத்திரிகையில் வந்ததே, இதுகுறித்து பேச அனுமதிப்பார்களா?

எம்.ஜி.ஆர். மறைந்த நேரத்தில் ஜானகி அம்மாள், மோரில் விஷம் கலந்து கொடுத்தார் என தி.நகரில் நடந்த கூட்டத்தில் இப்போதைய முதல்வர் பேசியுள்ளார். இதுகுறித்து பேச அனுமதிப்பார்களா?

சோபன்பாபுவோடு கோயிங்க் ஸ்டெடி குறித்து அவரே குமுதத்தில் எழுதினாரே. அதுகுறித்து பேச அனுமதிப்பார்களா?" என்று வினா எழுப்பி, "இதுபற்றியெல்லாம் பேச முயன்ற திமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற செய்தது மட்டுமின்றி, எம்.எல்.ஏ. சிவசங்கரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். எனவே, இதைக் கண்டித்து இந்தக் கூட்ட தொடர் முழுவதிலும் பங்கேற்பதில்லை" என அறிவித்தார்.

வெளியே நின்றிருந்த ஒரு அதிமுக எம்.எல்.ஏவின் கமெண்ட் "சபையில் பேச விட்டிருந்தா பதிவில் மட்டுமே இருக்கும், வெளியே அனுப்பியதால் உலகம் முழுதும் போவுது"

புதன், 26 பிப்ரவரி, 2014

ஊருக்கெல்லாம் இன்ஸ்யூரன்ஸ் செய்து உதவியர்...

மாநாட்டின் இரண்டாம் நாள் அந்த செய்தி. அண்ணன் குமரேசன் மறைவு.

உடல் நலனோடு தானே இருந்தார், எப்படி இறந்தார் என்று விசாரித்தால், பைக் ஆக்சிடெண்ட். அவர் பொறுமையானவர், நிதானமானவர் ஆயிற்றே என்று மனச் சங்கடம். ஊர் வந்தவுடன், அவர் இல்லம் சென்று, துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினேன். 

                                  

குமரேசன் பொய்யூர் கிராமத்தில், மிக ஏழமையான குடும்பத்தில் பிறந்தவர். படித்து, நண்பர்கள் அறிமுகத்தோடு LIC-ல் இணைந்தார். உழைத்து மெல்ல மெல்ல முன்னேறினார். LIC-ல் ஒரு குறிப்பிடத் தக்க இடத்தை பிடித்தார். செல்வம் சேர ஆரம்பித்தது. அரியலூரில் வீடு கட்டினார்.

ஆனால் அதே அன்போடு, இன்முகத்தோடு எல்லோரிடமும் பழகுவார். LIC குமரேசன் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். தொடர்ந்து பல ஆண்டுகளாக அரியலூர் பகுதியில் LIC-ல் அவர் தான் நம்பர் 1. உழைப்பை தொடர்ந்தார்.

அன்று வெளிநாடு செல்லும் ஒரு உறவினருக்கு பாலிசி போட கையெழுத்து பெற, உறவினரின் கிராமம் சென்றார். கையெழுத்து பெற்று உறவினருக்கு ரூ 500 செலவுக்கு கொடுத்து விட்டு பைக்கில் திரும்புகிறார். பணம் பெற்ற உறவினர் விளாங்குடி கைக்காட்டி டாஸ்மாக் சென்று உற்சாகம் பெற்று திரும்புகிறார்.

மெயின் ரோட்டில் குமரேசன் பைக் ஏறுகிறது, உறவினர் பைக் நேராக வந்து மோதுகிறது. பின் தலையில் பலத்த அடி. சிகிச்சைக்கு தஞ்சை செல்கிறார்கள். ஆனால் உயிர் பிரிந்து விடுகிறது. இரண்டு மகன்கள். ஒருவர் மூன்றாம் ஆண்டு இன்ஜினியரிங், அடுத்தவர் முதலாண்டு இன்ஜினியரிங். முக்கிய காலகட்டத்தில் குடும்பத்தாரை தவிக்க விட்டு பிரிந்து விட்டார்.

ஊருக்கெல்லாம் இன்ஸ்யூரன்ஸ் செய்து உதவியர், தன் பைக்கிற்கு இன்ஸ்யூரன்ஸ் செய்யவில்லை. இவர் மட்டுமல்ல, இது போல பல பைக் விபத்துகளில் இதே நிலை தான். பைக் வாங்கும் போது, கம்பெனியில் செய்து கொடுக்கும் இன்ஸ்யூரன்ஸோடு சரி. மீண்டும் பெரும்பாலோர் புதுப்பிப்பதில்லை.

பல குடும்பங்களில் பைக் ஆக்சிடெண்ட்டில் குடும்ப உறுப்பினரை இழந்து பெருத்த அவதிக்குள்ளாகிறார்கள். குறைந்தபட்சம் காப்பீடாவது கிடைத்தால், அவர்கள் இல்லாத சூழலில் வாரிசுகளுக்காவது சிறு உதவியாக இருக்கும். குறைந்தப்பட்ச ஆறுதல்.

செந்துறை ஒன்றிய கழக அவைத்தலைவர் அண்ணன் நமங்குணம் செல்வராஜ் இறந்தபோதே இந்தப் பிரச்சினை வந்தது. அப்போதே இதற்கு எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நீண்ட நாட்கள் புதுப்பிக்கப்படாத இன்ஸ்யூரன்ஸ்களை எப்படி புதுப்பிப்பது என்று இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில் விசாரித்தோம்.

அடுத்து இதனை கையில் எடுத்து செயல்பட வேண்டிய சூழலில் பணிச் சுமை காரணமாக, தள்ளிப் போய் விட்டது. இப்போது அண்ணன் LIC குமரேசன் இதனை தள்ளிப் போடக் கூடாது என உணர்த்தியிருக்கிறார்.

பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் ஏதாவது ஒரு கிராமத்தில் இதனை முதலில் செயல்படுத்தி பார்க்கலாம். முதலில் ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டு, அங்கு இருக்கும் பைக்குகள் எண்ணிக்கை மற்றும் இன்ஸ்யூரன்ஸ் நிலையை கணக்கெடுக்க வேண்டும்.

பிறகு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிக்க கம்பெனி நபர்களை அழைத்து வந்து உதவிட வேண்டும். இதை தனி மனிதனாக செய்ய இயலாது. அரசியல் சார்ந்து செய்தால் நோக்கம் விமர்சிக்கப்படும்.

எனவே ஒரே கிராமத்தை சேர்ந்த 4 அல்லது 5 நண்பர்கள் கொண்ட குழு உதவினால் எளிதாக இருக்கும், உங்களோடு நானும் இருப்பேன். அண்ணன் LIC குமரேசனுக்கு 'இன்ஸ்யூரன்ஸ் அஞ்சலியாக' இது அமையட்டும்.

# வாருங்கள், கரம் கோர்ப்போம், கண்ணீர் துடைப்போம் !

இந்தியாவையே அதிரடிக்கும் தேர்தல் அறிக்கை...

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை - பிற்சேர்க்கை...

                            

1. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் நிதி நிலைமை மிகவும் சீர் கெட்டிருப்பதால், அதனை சீராக்க தமிழகத்தின் நிதி நிலைமையை சீர் செய்த, தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இந்தியாவின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டு, "அதிரடி"யாக நேர் செய்யப்படும்.

2. தமிழகத்தின் மின் வெட்டை 2 மணி நேரத்திலிருந்து, 4-14 மணி நேரமாக போராடி உயர்த்திய, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம்.விஸ்வநாதன் இந்திய மின்சாரத் துறை அமைச்சராக பதவியமர்த்தமப்பட்டு மின்சாரம் "சரி" செய்யப்படும்.

3. ராஜஸ்தான், குஜராத், உ.பி, ம.பி போன்ற வடமாநிலங்களில், குடிநீர் பஞ்சம் நிலவுவதாக வருத்தத்திற்குரிய செய்திகள் வருகின்றன. எனவே மலிவு விலையில் குடிநீர் விற்க போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, இந்திய போக்குவரத்துக்கு மாற்றப்படுவார்.

4. அமைய இருக்கிற மக்களவையை செயல்பட விடாமல் தடுக்க, மோடியும், ராகுலும் தனித் தனியாக திட்டமிடுவதாக தகவல் வந்துள்ளது. அவர்களுக்கு "உரிய முறையில்" பதிலளிக்க தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்திய சுகாதார அமைச்சராக நியமிக்கப்படுவார்.

5. இந்திய அளவில் இடைத் தேர்தல்கள் வருவது தவிர்க்க இயலாது. அதனை கையாளுவதற்கென்று ஒரு துறை எனது தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டு, தமிழக அமைச்சர் பா.வளர்மதி படையமர்த்தப்படுவார்.

6. இந்தியா முழுவதும் இருக்கும் மாடுகள் "அம்மா" என்று தான் கதறுகின்றனவா என்று கண்டறியவும், ஒரு மாநிலத்தில் மேயும் மாடுகளை பிடித்து அடுத்த மாநிலத்தில் இலவசமாக கொடுக்கவும், கால்நடைத் துறை ஏற்படுத்தப்பட்டு, தமிழக மந்திரி சின்னையா நியமிக்கப்படுவார்.

7. பாராளுமன்றத்தில் புதிய வரலாறுகளை சொந்தமாகக் கூறவும், கடந்த கால ஆட்சி மீது குறை சொல்லியே எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிப்பதற்காகவும் உள்துறை அமைச்சராக, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி நியமிக்கப்படுவார்.

8. இந்தியாவில் உள்ள எல்லா மாநகராட்சிகளையும் இணைத்து, அந்த கூட்டமைப்பின் மேயராக சைதை துரைசாமி நியமிக்கப்பட்டு, எல்லா இடங்களிலும் அம்மா உணவகம், அம்மா திரையரங்கம், அம்மா மருந்தகம் திறக்கப்பட்டு, அந்த மாநகரங்களும் "சென்னை"யை போலவே 'சிறப்பாக' பராமரிக்கப்படும்.

9. விதி 110-ன் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிடும் போது, அதனை வரவேற்று பேசுவதற்காகவே, ஏற்கனவே அனுபவம் வாய்ந்த செ.கு.தமிழரசன், சரத்குமார், தனியரசு ஆகியோரோடு தா.பாண்டியன், பண்ருட்டி, வேல்முருகன் ஆகியோர் நியமன எம்.பிக்களாக நியமிக்கப்படுவார்கள்.

10. தமிழக சட்டசபை போல, இந்திய பாராளுமன்றம் சுமுகமாக நடக்க வழிவகை செய்யப்படும். பேசினால் மைக் கட் செய்யவும், போராடினால் தூக்கி வெளியே போடவும், பேட்டி கொடுத்தால் உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரவும் தமிழக சபாநாயகர் தனபால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் சேர்த்து சபாநாயகராக செயல்படுவார்.

# கும்தலக்கா கும்மாவா அம்மான்னா சும்மாவா.....

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

கனவு காணும் வாழ்க்கை யாவும்...

அது என்னவோ பாலுமகேந்திராவின் மரணம் பெரும் பாதிப்பை திரை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. “அது என்னவோ” என்று சொன்னதற்கு காரணம் அவர் எடுத்த படங்களின் எண்ணிக்கை மற்றும் அவைகளின் வெகுஜன வெற்றி இவற்றை கணக்கில் கொண்டே.

மாநாட்டு பணிகளில் தீவிரமாக இருந்ததால், வருத்தத்தை பகிர்ந்து கொள்ள சந்தர்பமில்லை. ஆனால் அந்த பாதிப்பு மனதில் இருந்தது. அதனால், அவரது படப் பட்டியலை பார்ப்போம் என விக்கிப்பீடியாவில் தேடினேன். அவரது மொத்த படங்களே 22 தான். அதில் தமிழ் 15 தான்.

                                   

இதில் அவரது ஆரம்ப கால படைப்புகளான “அழியாத கோலங்கள், மூடுபனி” இரண்டும் அவரது முத்திரைப் படைப்புகள். ஆனால் “மூன்றாம் பிறை” தான் அவரது அடையாளமானது. கமலுக்கும், ஸ்ரீதேவிக்கும் புதிய அடையாளத்தை வழங்கியது. இன்றைக்கும் அந்த “சுப்பிரமணி”யை மறக்க முடியாது.

அடுத்து வந்த “நீங்கள் கேட்டவை” அவரது பாணியிலான கமர்ஷியல் முயற்சி. இதில் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். அடுத்து ரஜினியை வைத்து ஆக்சன் படம் “உன் கண்ணில் நீர் வழிந்தால்”. “கண்ணில் என்ன கார்காலம்” பாடல் இன்னும் காதுகளில் ரீங்கரிக்கிறது.

இளையராஜாவுக்கும், பாலுவுக்கும் அப்படி ஒரு உறவு. மனதை மயக்கும் பாடல்கள் தான் பாலுமகேந்திரா படங்களுக்கு. அந்த உறவு தான் பாலுவின் கடைசிப் படமான “தலைமுறைகள்” வரை தொடர்ந்திருகிறது. “வீடு” படத்தில் பாடல்களே கிடையாது. ஆனால் இசையே பாடும்.

நடுத்தர வர்க்கம் வீடு கட்ட எவ்வளவு கஷ்டப்படும் என்பதை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியிருப்பார் “வீடு” பட்த்தில். ஒரு வீட்டை உண்மையாகவே கட்டி படம் எடுத்தார். படத்திற்கும், அர்ச்சனாவிற்கும் தேசிய விருது, பாலுவின் உழைப்பு. அதற்கு பிறகு அவர் பாணியில் சில படங்கள்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு “சதிலீலாவதி” மூலம் காமெடி என்ட்ரி போட்டார். பிறகு சில படங்கள் வந்தன, அவ்வளவு தான், ஆனால் அவரது முத்திரைகளோடு. அதிலும் "மறுபடியும், வண்ணவண்ண பூக்கள், அது ஒரு கனாக் காலம்" உண்டு. 


எப்படி பார்த்தாலும் “அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, வீடு, சந்தியா ராகம்” தான் அக்மார்க் பாலு முத்திரையோடு மனதில் பதிந்தவை.

                                      

ஆனால் அவற்றினை கொண்டே, 25 நூறு நாள் படைப்புகளை கொடுத்த இயக்குநர்களை தாண்டி ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறார், எண்ணிக்கை, வெற்றி தோல்வியை தாண்டி நிலைத்திருக்கிறார் என்றால், அது தான் பாலுமகேந்திரா.

மெல்லிய உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்தும் இயக்கம். வசனங்களை விட காட்சிகளே பேசி விடும் விதம். மயிலறகாய் தடவிக் கொடுக்கும் பிண்ணனி இசை. கண்ணிலேயே தங்கி விடும் ஒளிப்பதிவு. இவற்றின் உன்னதக் கலவையே பாலுவின் ரசாயனம்.

கடைசியாக அவரே களத்திற்கு வந்தார், நடிகராக “தலைமுறையில்”. நிஜ உலகில் தொப்பியையும் கண்ணாடியையும் கழட்டாமலே இருந்தவர், நிழல் உலகிற்காக அவைகளை துறந்தார். மறைவிற்கு முன் நிஜத்தோடு வெளிப்படுவோமென நினைத்தாரோ ?


                            

# கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள். ஆனால் பாலுவுடையது அழியாத கோலங்கள்...

ஒரு குறும்படம் எடுத்திருக்கலாம்....

ஒரு குறும்படம் எடுத்திருக்கலாம், மிஸ்ஸாயிடுச்சி. 

மாநாட்டுக்கு இரண்டு நாள் முன்பே சென்னையில் இருந்து கிளம்பி, காரிலேயே வந்த ஆர்வம். மாநாட்டுக்கு முதல்நாள் காலை ஒரு முறை, மாலை ஒளி வெள்ளத்தில் பார்க்க ஒரு முறை என இரு முறை பந்தலை பார்வையிட்டு ஆலோசனை வழங்கிய நேர்த்தி. விரலால் மைகை வருடி, டெஸ்ட் செய்த லாகவம்.

இரண்டு மாதமாக உடன்பிறப்புகளுக்கு, முரசொலியில் ஏழு கடிதங்கள் மாத்திரமே எழுதி, அதில் இது வரை நடைபெற்ற மாநாடுகளின் வரலாற்றை எல்லாம் தொகுத்து, இயக்க உணர்வை ஊட்டி, வரலாற்று அறிவை வழங்கி, பெருந்திரளாய் திரட்டி, திருச்சியை திக்குமுக்காட வைத்த பாங்கு.

இதை எல்லாம் தாண்டி, இரண்டு நாள் மாநாட்டு நிகழ்வை கையாண்ட விதம் தான் டாப்.

காலையில் மாநாட்டு நிகழ்வுக்கு வந்தால், மதிய உணவு இடைவேளைக்கு செல்வார். மதியம் உணவு முடிந்து வந்தால், இரவு தான் அறைக்கு செல்வார். இரண்டு நாட்களும் இப்படி தான், இயற்கை உபாதைக்காக ஒரே ஒரு முறை தான் மேடைக்கு பின் பக்கம் உள்ள அறைக்கு சென்றாக நினைவு.

மேடை மீது கார் வந்து நின்று, அவரது சக்கர நாற்காலி தரையில் இறங்குவதற்குள்ளாக வணங்குவோருக்கு பதில் வணக்கம். இறங்கி மேடையை அடைவதற்குள், மேடையை ஒரு ஸ்கேன் பார்வை. ஏதாவது திருத்த வேண்டும் எனில் உடன் ஆலோசனை.

மேடைக்கு வந்தவுடன் அந்த சக்கர நாற்காலி மேடையின் நுனிக்கு செல்லும். குழுமியிருக்கும் உடன்பிறப்புகளை கண்டு மலர்ந்த முகத்தோடு, அய்ந்து விரலையும் விரித்து ஒரு கையசைப்பு. அவ்வளவு தான் மாநாட்டு திடலே ஆர்ப்பரிக்கும்.


                     

பந்தலின் கடைகோடியில் இருக்கும் தொண்டனுக்கும் தன்னை பார்த்து தலைவர் கையசைப்பதாகவே உற்சாகம். வந்தவர்களை வரவேற்றதாக அவருக்கும் நிறைவு. இது தான் அவரையும் உடன்பிறப்புகளையும் கட்டிப்போடும் பாச பந்தம்.

மேடையில் வந்து அமர்பவர் அசையாமல், அசராமல் ஒவ்வொருவர் பேச்சையும் கவனித்தார். அது வளரும் சொற்பொழிவாளரோ, கழகத்தின் முன்னோடித் தலைவரோ எல்லோர் பேச்சையும் உன்னிப்பாக கவனித்தார். அவ்வப்போது சிறு புன்னகை.


                      

அருகே வந்து வணங்குபவர்களுக்கு திருப்பி கையசைப்பு, வணக்கம். சால்வை வழங்குபவர்களுக்கு பார்வையாலேயே ஒரு நன்றி. சிறப்பாக பேசுபவர்களை பார்வையாலேயே ஒரு வருடல். கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு முறையான, உரிய மரியாதை.

லேசாக போரடிக்கும் போது முன்னால் இருக்கும் மேசையில் பென்சிலால் சிறு தட்டல்கள். எப்போதாவது சிறு பருப்பு துகளை வாயில் போட்டு மெல்லல்.  உதவியாளர் சண்முகநாதனிடம் சிறு தகவல் பரிமாற்றம்.


                        
                               

அவ்வப்போது தளபதி அவர்களுடன் ஆலோசனை...


                 

ஒவ்வொரு மாவட்ட செயலாளருக்கும் நினைவு பரிசு வழங்கிய போது, ஒரு அங்கீகாரச் சிரிப்பு. இந்த படத்தை பார்த்தால் தெரியும்.

                                

தனது நிறைவு பேச்சின் போது முகத்தில் வெளிப்படுத்திய உணர்வுகள். “என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே” எனும் போது ஏற்படுத்தும் உற்சாகம். அண்ணன் நேருவுக்கு பாராட்டு, ராம்ஜெயம் குறித்து நெகிழ்வு, ஆளும் அரசுக்கு சாட்டை வீச்சு, கொள்கை முழக்கம் என அனைத்தும் பொதிந்த பேச்சு.

பட்டியலிட்டால் எழுத்திலடங்கா....

இதை எல்லாம் தான் ஒரு குறும்படமாக எடுத்திருக்கலாம். ஒரு ஆய்வே செய்யலாம்.

# அவர் தான் கலைஞர் !

திங்கள், 24 பிப்ரவரி, 2014

சேனல்களின் ஓ.பி வேன்கள் வந்தவாறு உள்ளன...

சமத்துவ மக்கள் கட்சியின் அலுவலகம் பரபரப்பாக இருக்கிறது. ஃபோன்கள் தொடர்ந்து ஒலித்தபடி இருக்கின்றன. செக்யூரிட்டிகள் யாரையும் உள்ளே விடாமல் தடுத்தபடி இருக்கிறார்கள். உள்ளே டிவியில், அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு பற்றிய ஜெயா செய்திகள் ஓடிக் கொண்டிருக்கிறது. 

அலுவலகத்திற்கு வெளியே பத்திரிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். லைவ் ஆக அப் லிங்க் செய்யும் தொலைக்காட்சி சேனல்களின் ஓ.பி வேன்கள் வந்தவாறு உள்ளன. டைம்ஸ் நவ், என்.டி.டி.வி போன்ற வட இந்திய மீடியாக்களோடு தமிழ் சேனல்களின் நிருபர்களும் மைக்குடன் தற்போதைய நிலைமையை அப்டேட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

                            

"இதோ இன்னும் சிறிது நேரத்தில் பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் வர இருக்கிறார்கள்" என லைவ்விற்காக நிருபர்கள் சொல்லி கொண்டிருக்கும் போதே, சர்ரென்று ஒரு கார் வந்து நின்றது. "வாணி ராணி" ராணி கெட்டப்பில் ராதிகா சரத்குமார் இறங்கி உள்ளே சென்றார். "சரத்தின் கூட்டணி தலைவர் ராதிகா வந்துவிட்டார். அடுத்து ?" என தந்தி டிவி அலறியது.

புதிய இன்னோவா வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய செ.கு.தமிழரசன், " இது அம்மா ஒரு இரும்பு மங்கை என்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு. இந்தியாவை வழி நடத்த இரும்பு மனிதர் வல்லபாய்படேலுக்கு தவறிய வாய்ப்பை, அம்மா பெறுவார்கள். நான் சரத்தோடு பேச்சு நடத்த வந்துள்ளேன்" என்றார். அலுவலகத்தில் நுழைந்தார்.

ஒரு டெம்போ டிராவலர் வேன் அதிரடியாக வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய தொண்டர்கள் கை கோர்த்து பாதுகாப்பு வளையம் அமைத்தனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் இறங்கினார். " இது பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக போராடும் நேரம். ஈழத்திலும் நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தான்" என்று அலுவலகம் உள்ளே சென்றார்.

ஒரு பழைய அம்பாசிடர் கார் வந்து நின்றது. உள்ளிருந்து மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் இறங்கினர். நிருபர்கள் மைக்கை நீட்டினர். "நாங்க என்ன சொன்னாலும், பிரகாஷ் காரத் வந்து தான் முடிவு. பொலிட் பீரோ கூட்டத்தில் அவர் இருக்கார். நாங்க சரத்தை பார்த்து, அவரது புதிய பட சிடீ வாங்கிகிட்டு போவோம்" யார் பேசியது என்று தெரிவதற்குள் எஸ்ஸாகினர்.

அடுத்து ஒரு வெளிநாட்டு இறக்குமதி கார் வந்தது. மீடியாக்களின் டார்லிங் தா.பாண்டியன். அவரே மைக்கை பிடித்து இழுத்தார். "எந்த மாட்டுல எப்புடி பால் கறக்கனும்னு எனக்கு தெரியும். ஆடியும் கறப்போம், பாடியும் கறப்போம். இல்லன்னா பிளாக் டீயும் குடிப்போம். இல்லன்ன டீயே குடிக்காமலும் இருப்போம். எதுவுமே பிரச்சியினைல்லை. எல்லாமே பிரச்சினை தான்"


             

அப்போது நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் வந்து இறங்க, பரபரப்பு. "நீங்க இந்த கூட்டணியிலேயே இல்லையே, இங்க எப்புடி ?" டைம்ஸ் நவ் நிருபர். "ஹாஹா, இது நல்ல டவுட்டு. நான் எந்த கூட்டணியிலயும் இல்ல. ஆனா என்னை இல்லாம யாரும் கூட்டணி அமைக்க முடியாது. அவ்ளோ ஏன், என்னை இல்லாம மத்தியில் ஆட்சியே அமையாது". நிருபர் தலை சுற்றி கீழே விழ, "பழமுதிர் சோலை எனக்காகத் தான்" பாடிக் கொண்டே உள்ளே போனார் கார்த்திக்.

                

நேரம் ஆகிக் கொண்டிருந்தது, இருட்ட ஆரம்பித்து விட்டது. ஒரு பஸ் வந்து நின்றது. சால்வையுடன் ஒரு பெரியவர் இறங்கினார், பண்ருட்டி. கருப்பு துண்டை தலைப்பாகை கட்டி வந்தவர் நாஞ்சில். அடுத்து டைட் பேண்ட்டை சரி செய்து கொண்டே உள்ளே போனவர் பரிதி. இப்படியாக பிடித்து வரப்பட்ட பிள்ளைகள் கூட்டம்.

"அனைத்து கூட்டணிக் கட்சிகளும் திரண்டு விட்டனர். 2011 சட்டமன்றத் தேர்தல் நிலைமை திரும்புகிறதா ?" "இப்போது தீவிர ஆலோசனை நடைபெறுகிறது" "இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருகிறது" "என்ன நடக்குமோ ?" சேனல்கள் அலறிக் கொண்டிருக்கின்றன.

ஒரு ஓப்பன் லாரி வந்து நின்றது. அதில் மைக் செட் கட்டப்பட்டிருந்தது. அனைத்து தலைவர்களும் திபுதிபு என ஓடி வந்து ஏறினர். சரத் முறுக்கேரிய புஜம் தெரிய ஒரு அட்டைப்பெட்டியை தூக்கிக் கொண்டு வந்தார். லாரியில் வைத்தார். சேனல்களின் கேமராக்கள் லாரியை நோக்கி திரும்பின. தா.பா மைக்கை எடுத்தார். சரத் அட்டைபெட்டியை பிரித்தார், 66 கிலோ கேக்.

சரத் கேக்கை வெட்ட, தா.பா பாடினார்,"அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே" "அம்மாவை வணங்காது உயர்வில்லையே" கோரஸ் ஒலிக்கிறது...

லாரி போயஸ் நோக்கி நகர்கிறது. கோஷம் ஒலிக்கிறது...

# "ஆப்பி பர்த்டே அம்மா"

நாலடி உயரம் தான், உடையோ வேட்டி, ஜிப்பா...

அவன் தோற்றமே என்னை கவர்ந்தது. சிறிய உருவம். வயதும் குறைவாகத் தான் தெரிந்தது. ஆனால் வயதுக்கும், உருவத்திற்கும் மீறிய உடை. ஒரு நாலடி உயரம் தான் இருப்பான். உடுத்தியிருந்த உடையோ வேட்டி, ஜிப்பா. அதிலும் திமுக கரை போட்ட வேட்டி. முகத்தில் குழந்தமை இன்னும் மிச்சமிருந்தது.

மாநாட்டு மேடையில் தான் அவனை பார்த்தேன். மிக சுவாதீனமாக, பழக்கப்பட்டவன் போல் நடமாடிக் கொண்டிருந்தான். மாநாட்டுக்கு முதல் நாள் 14-ந் தேதி மாலை. மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட தலைவர் கலைஞர் அவர்கள் வந்துவிடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம்.

தலைவர் வாகனம் மேடைக்கு வந்து விட்டது. நான் அவன் அருகில் சென்று மேடையில் இருந்து இறங்க அறிவுறுத்தினேன். பெரிய மனைதனை போல என்னை பார்த்துக் கொண்டே நகர்ந்தான். அதற்குள் தலைவர் மேடை ஏற்பாடுகளை பார்வையிட, நாங்கள் அதில் மூழ்கி விட்டோம்.

தலைவர் பார்வையிட்டு சென்ற பிறகு, தளபதி அவர்கள் மீண்டும் வருகிறார் என கொடிமேடை அருகே காத்திருந்தோம். மணி இரவு 9.00. இப்போது அவன் மீண்டும் என் பார்வையில் தட்டுப்பட்டான். அருகே அழைத்து விசாரித்தேன். ஷாகுல் அமீது என பெயர் சொன்னதாக ஞாபகம்.

“எந்த ஊர் ?” என்று கேட்டேன். “பள்ளப்பட்டி” என்றவன், இப்போது என்னோடு கரம் கோர்த்துக் கொண்டான், நீண்டநாள் பழகியவன் போல. நான் அருகில் இருந்த கரூர் மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் நன்னியூர் ராஜேந்திரன் அவர்கள் முன் நிறுத்தினேன். “அண்ணே, உங்க மாவட்டத்து பையன்” என்றேன்.

“எந்த ஊர் தம்பி ?” என்றார். “பள்ளப்பட்டி" என்றான். சில கழக முன்னோடிகள் பெயரை சொல்லி, அவர்களை தெரியுமா என்று வினவினார். அவன் சகஜமாக எல்லோரையும் தெரியும் என்று சொன்னான். “எங்க எம்.எல்.ஏ கே.சி.பி அய்யாவ நல்லா தெரியும்” அவனாக சொன்னான்.


                      Displaying 20140214_225927.jpg

“யார் கூட வந்த ?” “நான் மட்டும் தான் வந்தேன்” “படிக்கிறியா ?” “ஒன்பதாவதோட நிப்பாட்டிட்டேன். சேலத்தில ஒரு மெடிக்கல்ல வேலையில இருக்கேன். அது வீரபாண்டியார் அய்யா சிலைக்கு பக்கத்தில தான் இருக்கு”. எது கேட்டாலும் கட்சி தொடர்பான பதில தான்.

“எங்க தங்குவ ?” “இங்கேயே தான் “(மாநாட்டு பந்தலைக் காட்டி). “சரி. என் ரூமுக்கு வந்திடு” “இல்லண்ணே, தூக்கம் வராது. இத முழுசும் சுத்தி பார்த்தா தான் தூக்கம் வரும்” ரூபாய் 500 கொடுத்தார் நன்னியூர் ராஜேந்திரன். வாங்க மறுத்தான். வலுக்கட்டாயமாக அவன் பையில் வைத்தார். உடன் இருந்த டி.ஆர்.பி.ராஜா குஷியாகி அவனோடு புகைப்படம் எடுத்தார்.


                          Photo: கடந்த நிலைத்தகவல் நாயகனின் புகைப்படம் கிடைத்து விட்டது. 

ஷாகுல் அமீது (நிலைத்தகவலில் பெயரை தவறாக குறிப்பிட்டு விட்டேன்) உடன் கரூர் மா.பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன், புதுக்கோட்டை மா.செ பெரியண்ணன் அரசு, மன்னை ச.ம.உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் நான்.

அண்ணன் நேரு அவர்கள் வந்துவிட நாங்கள் பணியில் தீவிரமாகி விட்டோம். மறுநாள் காலையில் மேடையில் இருந்து பார்த்த போது, அவன் உணவகம் நோக்கி சென்று கொண்டு இருந்தான். குளித்த ஈர துண்டு தோளில். இரண்டாம் நாள் தளபதி உரையாற்றும் போது, தொலைவில் நின்று, எதையோ கொரித்துக் கொண்டு ரசித்துக் கொண்டிருந்தான்.

# வாழ்க இளைஞனே ! வாழ்க நின் கூட்டம் !!

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

மாநாட்டின் இரண்டாம் நாள்... திணறியது திருச்சி

16.02.2014. மாநாட்டின் இரண்டாம் நாள்...

கழக வெளியீட்டு செயலாளர் அய்யா திருச்சி செல்வேந்திரன் மகன் எழில் திருமணம் தலைவர் தலைமையில். தலைவர் வருவதற்கு முன்பாக, மணமகனுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு மாநாட்டுக்கு கிளம்பிய போது, டிராபிக். மாநாட்டு மேடையை அடைந்த போது, தளபதி அவர்கள் வந்து 10 நிமிடம் ஆயிற்று என்றார்கள்.

மேடை ஏறிய தளபதி, கடைசி வரிசையில் அமர்ந்திருந்த எனது தந்தையை பார்த்த உடன், அருகில் சென்று நலம் விசாரித்து விட்டே, தன் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். என் தந்தையாருக்கு மிகுந்த மகிழ்ச்சி.

பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாளர்கள் உரை. சிறப்பான உரைகள். இரண்டாம் நாள் மாநாட்டிற்கு முதல் நாள் மாநாட்டை விட கூட்டம் நெரிய ஆரம்பித்தது. திண்டுக்கல் சாலை 10 கி.மீக்கு டிராபிக் நகரவில்லை என தகவல் வந்தது. தலைவர் மேடைக்கு வந்த போது, மொத்த கூட்டமும் எழுந்து நின்று "தலைவர் வாழ்க" என்று முழங்கியது. பந்தல் அதிர்ந்தது. கண் குளிர்ந்தது, காதும் குளிர்ந்தது.

ஒவ்வொருவரும் ஒதுக்கிய நேரத்தை தாண்டி சிறிது சிறிது நேரம் கூடுதலாக எடுத்துக் கொண்டதன் விளைவு, 12.00 மணிக்கு பேச வேண்டிய தளபதி அவர்கள் மைக் முன் வந்த போது மணி 1.30. மாநாட்டு ஏற்பாடுகளுக்காக அண்ணன் நேருவை வாழ்த்திவிட்டு, அரசியலை தொட்ட போது அனல் ஏற ஆரம்பித்தது. ஜெயலலிதாவுக்கு சவால் விட்டு பேசும் போது அரங்கம் தகித்தது. உச்சக்கட்ட பேச்சு. கைத்தட்டல் அடங்கவேயில்லை.


                   

அனலாக பேசியவர், முடிக்கும் போது அரங்கத்தை அமைதியில் ஆழ்த்திவிட்டார். தளபதி அவர்கள், அண்ணன் நேரு அவர்களது சகோதரர் ராமஜெயம் குறித்து நினைவு கூற, கண்கலங்க ஆரம்பித்த நேரு ஒரு கட்டத்தில் கதறி அழ ஆரம்பித்து விட்டார்.

                     

2.30-க்கு தளபதி அவர்கள் பேசி முடிக்கும் வரை, சாப்பிடக்கூட கலையாமல் மக்கள் அப்படியே அமர்ந்திருந்தனர். டிராபிக் ஜாமால் நகருக்குள் செல்ல முடியாது என எங்களுக்கு அலுவலகத்திலேயே உணவு ஏற்பாடு செய்திருந்தார் அண்ணன் நேரு. சாப்பிட்டு வரும் போது எங்களுக்கு முன் ஒரு ஊர்வலம் போய் கொண்டிருந்தது.

யார் என்று பார்த்தால், அண்ணன் திருமா நடந்து போய் கொண்டிருந்தார். டிராபிக் பிரச்சினையால் 2 கி.மீக்கு மேல் நடந்தே மேடையை வந்தடைந்தார். ம.ம.க தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கொஞ்சம் தூரம் பைக்கிலும், பிறகு நடந்தும் மேடையை வந்தடைந்தார்.

நாங்கள் மேடையை அடைந்த போது, மேடை முழுதும் கட்டுக்கடங்கா கூட்டம். ஆக்காட்டி ஆறுமுகம் குழுவினரின் நாட்டுப்புற இசை கச்சேரி கேட்கும் குஷியில் மேடையில் ஏறியிருந்தனர். கீழே இறங்க சொல்லி பார்த்தோம், அசையவில்லை. தொண்டரணியினருடன் இணைந்து கைகோர்த்து "செயின்" அமைத்து கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சம் பின்னுக்கு தள்ளினோம்.

ம.ம.க தலைவரோடு பாதுகாப்புக்கு வந்திருந்த இளைஞர்களும், எங்களோடு ஒத்துழைத்தனர். வெறும் தொண்டர்கள் மட்டும் என்றால், பரவாயில்லை என விடலாம். காலையில் இருந்தே பலரும் பிக்பாக்கெட்களிடம் பணம், செல் இழந்த செய்தி வந்து கொண்டிருந்ததால், பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டிய நிலை. செயின் அமைத்து தள்ளும் போது சிலர் எதிர்த்து தள்ள, வலது கையில் பலத்த அடி, வீங்கிவிட்டது.

கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேச ஆரம்பித்த நிலையில், அடுத்த பிரச்சினை. மேடைக்கு நேர் முன்னால் இருந்தப் பகுதியில் கூடியவர்கள் கொடியை அசைத்தும், துண்டை அசைத்தும் குரல் எழுப்ப, பேசுவோருக்கு இடைஞ்சல். ஒரு கட்டத்தில் அண்ணன் நேரு வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு இறங்கி ஒழுங்குப்படுத்தினார். அவர் மேடைக்கு வர வேண்டிய சூழலில் மீண்டும் கூச்சல். இம்முறை அண்ணன் திருச்சி சிவா களத்தில் குதித்தார். 


                      

அடுத்து நான் பத்து தொண்டர் அணியினருடன் அங்கு சென்றேன். சென்றேனில்லை, ஸ்பீக்கர் மீது இறங்கி, கீழே தரையில் குதித்தேன். கையில் ஒரு குச்சியோடு ஒழுங்குப்படுத்த, ஒரு தோழர் "எல்லோரும் நம்மாளுங்க தான். அடிச்சிடாதீங்க" என்று அறிவுரை வழங்கி சென்றார்.

அப்போது ஒரு இளைஞன் தொடர்ந்து விசில் அடிக்க, நான் குச்சியை நீட்டி எச்சரிக்க, அமைதியான இளைஞன் என்னையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். விறுவிறுவென என் அருகில் வந்து நின்று, தன் நண்பனை போட்டோ எடுக்க சொன்னார். " நீ யாருப்பா ?" என்று கேட்டேன். "அண்ணே, நான் அகரம் அருண். உங்க பேஸ்புக் ஃபாலோயர்" என சொல்ல ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு. இப்படியாக இரண்டு மணி நேரம் டியூட்டி ஓடியது.

அடுத்து தலைவர் பேச இருந்த நிலையில் மேடை ஏறினேன். காலையிலேயே அண்ணன் நேரு சொல்லிவிட்டார், "தலைவர், தளபதி பேசும் முன், வரவேற்புகுழு செயலாளர்கள் நால்வரும் மேடைக்கு வந்துவிட வேண்டும். நாம் சேர்ந்து நினைவுப் பரிசு கொடுக்க வேண்டும்." அதே போல் கொடுத்தோம். பெரிய அங்கீகாரம்.

இந்த தள்ளுமுள்ளுவில், வேட்டி, சட்டை கசங்கி வியர்த்து இருந்த கோலத்தை பார்த்த அண்ணன் ராசா அவர்கள் பதறி விட்டார்கள். கை வீக்கத்திற்கு மருத்துவம் பார்க்க அறிவுறுத்தினார்.

தலைவர் உரை. அண்ணன் நேரு அவர்களது பணியை பதினைந்து நிமிடம் பாராட்டினார். "தம்பி என்பதா, தளகர்த்தர் என்பதா, நண்பர் என்பதா ?" உச்சக்கட்ட பாராட்டு. தம்பிகளை பாராட்டும் தலைவர்.

மறுநாள் தளபதி அவர்கள் சென்னை கிளம்பும் போது அழைப்பதாக, கரூர் மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் நன்னியூர் ராஜேந்திரன் சொல்லியிருந்தார். இரவு அறை திரும்பி, உடல் வலிக்கு வென்னீரில் குளித்து, மாத்திரை சாப்பிட்டு, கைகால் எல்லாம் "மூவ்" தடவி படுத்ததில், காலை எழுந்தது லேட்.

மிஸ்டு காலில் கரூர் மா.செ உதவியாளர் செந்தில் அழைப்பு. பேசினேன். தளபதி கிளம்பும் தகவல் சொல்ல அழைத்திருக்கிறார். தளபதி கிளம்பி விட்டார்கள். முறையாக வரவேற்பு குழு செயலாளர் என்ற முறையில் நன்றி சொல்லி வழியனுப்ப சென்றிருக்க வேண்டும். அண்ணன் ராஜேந்திரனை செல்லில் அழைத்து "உடல் நலிவால் வர இயலாமல் போயிற்று. அண்ணனிடம் சொல்லி விடுங்கள்" என்று சொல்லி வைத்து விட்டேன், அவர் அப்போது தளபதி காரில் இருந்தார்.

அடுத்த அரை மணி நேரத்தில் செல் அழைப்பு. தளபதி அவர்கள். "என்ன சங்கர், கை என்ன ஆச்சி ?" விபரம் சொன்னேன். "எக்ஸ்ரே எடுத்து பார்த்திடுங்க. ரெஸ்ட் எடுங்க"

உடல் நலிவிலும், உள மகிழ்வோடு. இந்த பாச உணர்வுள்ள தலைவர் வேறு எந்த இயக்கத்தில் உண்டு ?

# சோ'சியர்களே, இந்த பேரியக்கத்திற்கு அஸ்தமனம் கிடையாது. என்றும் உதயம் தான்...

சனி, 22 பிப்ரவரி, 2014

மாநாடு முதல் நாள், முதல் வரிசையும் களப்பணியும்....

வரவேற்பு குழு செயலாளர் அப்படின்ன உடனே, கலர் கலரா கனவோட இருந்தேன். இது வரை மாநாட்டு பந்தலின் கடைசி கம்பத்தில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, கடலை சாப்பிட்டுக் கொண்டே மாநாடு பார்த்தது தான் வரலாறு.

வரவேற்பு குழு செயலாளர் அப்படின்னா, மேடையிலேயே இருக்கனும், வந்தவர்களை வரவேற்கனும், ஹாயான டியூட்டி தான் அப்படின்னு இருந்தேன். ஆனா பத்து நாள் முன்னாடி திருச்சி வந்தப்பவே அண்ணன் நேரு லேசா சிக்னல் கொடுத்திருக்காரு.

அவர் மாநாட்டு இடத்தை சுற்றி வரும் போதே, கூட நடந்த போதே, இப்படி தான்னு தெரியாமப் போச்சு. இன்னைக்கு தான் தெரிஞ்சுது, இது வேற கதைன்னு. நேற்று இரவு மாநாட்டு ஏற்பாடுகளை ஒரு பார்வை பார்த்தோம், வரவேற்பு குழு செயலாளர்கள்.

அண்ணன் நேரு கொடிக்கம்பம் மற்றும் கொடியை சரி பார்த்து முடித்து, திடலிலேயே சாப்பிட்ட போது மணி 11.30. பிறகு அறைக்கு வந்த போது மணி 12.00. காலை 6.00க்கு எழுந்து குளித்து, மாநாட்டு திடலுக்கு போன போது மணி 8.00.

லேசான டிராபிக். எதிரில் ஒரு கார். உள்ளே தளபதி டி-ஷர்டில். மாநாட்டு திடலிலேயே வாக்கிங் முடித்து போகிறார். அண்ணன் நேரு உடன் இருந்திருக்கிறார், கரூர் மாவட்ட பொறுப்பாளர் நன்னியூர் இராஜேந்திரன் அவர்களும்.

கொடி மேடையில் நன்னியூர் இருந்தார். நானும் இணைந்தேன். பிறகு பெரம்பலூர் துரைசாமி, புதுக்கோட்டை அரசும் வந்து சேர்ந்தார். கண் கொள்ளா கூட்டம், கருத்து கொள்ளா கூட்டம். மாநாடு துவங்கியது.

                          


கடைசியில் இருந்தவர்கள் எழுந்து மெல்ல முன்னேறி வந்தனர். மேடை அருகே வந்து, தலைவரை வணங்கி நகர்ந்தனர். சிலர் அங்கேயே நிற்க துவங்கினர். இது ஒரு கட்டத்தில் பிரச்சினையாக ஆரம்பித்தது. இறங்கி அவர்களை நகர்த்தினோம்.

மதிய உணவுக்கு பிறகு, தஞ்சை சின்னப் பொண்ணு குழுவினரின் பாடல் கச்சேரியின் போது, மேடைக்கு எதிரே கூட்டம் அதிகரிக்க துவங்கியது. பாடலுக்கு ஆட்டம் வேறு. அவர்களை சரிபடுத்துவதே வரவேற்புக்குழு செயலாளர்கள் வேலையாகிப் போனது. அண்ணன் நேருவும் அவ்வப்போது சேர்ந்துக் கொண்டார்.

சில நேரம் முதல் வரிசையில் அமர்ந்து சொற்பொழிவுகளை கேட்கும் வாய்ப்பு, சில நேரம் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களப்பணி. ஒரு சமயம் பெரியண்ணன் அரசு மேடைக்கு வர, கேட்டை திறந்து உதவினேன். அப்போது அவருக்கு பின் நின்றவர், நான் தடுப்பதாக நினைத்து, என் நெஞ்சில் கை வைத்து தள்ள, நான் அவரை தள்ள, லேசான தள்ளுமுள்ளு.

பிறகு யார் என்று தெரிந்து, அவர் வருந்த நிலைமை சுமுகமானது. சில தொண்டர்களை நகர சொல்லும் போது, "எவ்வளவு செலவு செஞ்சு வர்றோம், தலைவர், தளபதியை கிட்ட பார்க்கக்கூடாதா ?" என்று எகிறியதும் நடந்தது. இதற்கிடையே அவ்வப்போது சொற்பொழிவுகளையும் கேட்டோம்,

தேர்தல் நிதி வசூல் செய்து கொடுத்தமைக்காக மாவட்ட செயலாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மாநாட்டு மேடையில், தலைவர் கையால் பெற்றது பெரும் நிகழ்வு.

                 


 # வசவுகளோடும், வாழ்த்துக்களோடும் கடந்தது முதல் நாள்

வியாழன், 20 பிப்ரவரி, 2014

மாநாட்டை காண எல்லோரையும் தாண்டிய ஆர்வம் அவருக்கு தான்...

கல்லூரி மாணவர்கள், முகநூலில் உள்ள இளையோர் என முதல் முறையாக மாநாட்டை காணும் ஆவலில் மாநாடு குறித்து விசாரித்து வந்தார்கள். அதே ஆவலோடு கிளம்பி வந்த வண்ணம் உள்ளனர். 

ஆனால் திருச்சி மாநாட்டை காண எல்லோரையும் தாண்டிய ஆர்வம் தலைவர் கலைஞருக்கு தான்.

மலைக்கோட்டை ரயிலில் வருகிறார் என வரவேற்புக்கான ஏற்பாடுகளில் இருந்த நிலையில், காரில் வருவதாக சொல்லி விட்டார். 13ந் தேதி மதியம் 3.30 சென்னையிலிருந்து கிளம்பியவர் வழி நெடுக கழகத் தோழர்கள் அளித்த வரவேற்பினை ஏற்றுக் கொண்டு திருச்சியை அடைந்தார்.

                                                Photo: திருச்சி....!

14-ந் தேதி காலை மாநாட்டு திடலுக்கு வந்துவிட்டார். பந்தல் மேடை அமைப்புகளை சுற்றி பார்த்து மகிழ்ச்சியடைந்தார். ஒரு இளைஞனுக்கான உற்சாகத்தோடு ரசித்துப் பார்த்தார். அவரே பல மாநாடுகளை முன்னின்று நடத்தியவர், இருப்பினும் ஆர்வம்.

மேடை எழிலை பார்த்து ரசித்தவர், பந்தலை நோக்கி திரும்பினார். மகிழ்ச்சி ஆரவாரம். பந்தலில் மக்கள் கடல். பொதுமக்கள். குழந்தைகளோடு குடும்பம், குடும்பமாக பிரம்மாண்ட பந்தலை கண்டுகளிக்க வந்தவர்கள், தலைவரையே கண்டதில் ஆனந்தத்தின் உற்சாகத்திற்கு சென்றார்கள்.

                              

தலைவர் முன் சுவர் வைத்தது போல், பத்திரிக்கை புகைப்படக்காரர்கள், இணைய புகைப்படக்காரர்கள், மொபைல் புகைப்படக்காரர்கள். ஒதுங்க சொல்லி, சொல்லி ஓய்ந்து போனோம். தலைவர் மக்களை பார்த்து கையசைக்க ஆரவாரம் தொடர்ந்தது.

ஓய்வுக்கு அறைக்கு திரும்பியவர், மாலை மீண்டும் வந்தார், ஓளி அலங்காரத்தில் பந்தலை ரசிக்க. மேடையில் தலைவரை கண்டதும் ஹோ என்ற உற்சாகக் கூச்சல். இப்போதும் மக்கள் வெள்ளம் பந்தலில். உற்சாகமான தலைவர் ஒரு விரலை கீழிருந்து மேல் நோக்கி தூக்க, உற்சாக கூச்சல் உச்சம் தொட்டது.





விரலை கீழிறக்கியவர், மீண்டும் மேல் நோக்கி தூக்க, மீண்டும் உற்சாகக் கூச்சல். தலைவர் முகத்தில் பெருமிதம். சிறிது நேரம் மியூசிக் கண்டக்டராக கலக்கினார்.
அவருக்கான மைக் பொருத்தப்பட்டது. தலைவர் சரி பார்க்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு இது போல் மைக் சரி பார்த்த தளபதி அவர்கள் "மைக் டெஸ்ட். ஒன், டூ, த்ரீ" என சொல்ல சிரிப்பலை. இப்போது தலைவர் மைக் மீது ஆட்காட்டி விரலை வைத்து வருட ஒரு வித்தியாச ஒலி. திருப்தியாக தலையசைத்தார். வீணை விதவான் தந்தியை வருடி சரி பார்த்த தோற்றம்.

# அவர் நா இசைக்கு தானே உடன்பிறப்புகளே அடிமை !

திருச்சி மாநாட்டு ஏற்பாடுகள் - 2

இரண்டு மாதத்திற்கு முன்பு இது வயல்வெளி. நடந்தால் முழங்கால் அளவுக்கு உள்ளே போகும். இப்போது, கால்பந்து திடல் போல் கெட்டியாகி விட்டது. 

அப்படி கெட்டியானதற்கு காரணம், அண்ணன் நேரு நடந்த நடை. இரண்டு மாதங்களுக்கு முன்பாக அந்த பகுதியை சீர்படுத்த துவங்கினார்கள். அதிலிருந்து , ஒவ்வொரு இன்ச்சையும் நடந்தே சென்று சுற்றி வந்து, பணிகளை மேற்பார்வையிட்டார்.

                                       

இது 200 ஏக்கர் பகுதி. கிட்டத்தட்ட 2 கி.மீ நீளம், 1 கி.மீ அகலம் கொண்ட இந்தத் திடலில் ஒரு நாளைக்கு நான்கு அல்லது அய்ந்து முறை சுற்றி வந்து விடுவார். நாங்கள், வரவேற்பு குழு செயலாளர்கள், ஒரு வாரம் உடன் இருந்து பார்த்த அனுபவம்.

சரி, மாநாட்டு சிறப்புக்கு போவோம். பார்வையாளர்கள் உட்காரும் பகுதி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மையப் பகுதி மேடைக்கு நேர் எதிரே, இருபுறமும் மற்ற இரு பகுதிகள். அதற்கு அடுத்த நடமாடும் பகுதிக்கு அடுத்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உணவுப் பொருட்கள் மற்றும் இதர கடைகள் அமைய உள்ளன. அதற்கு அடுத்த அடுக்கில் குளியலறை மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக. இது, இது வரை எந்த கழக மாநாட்டிலும் செய்யப்படாத வசதி.

மேடை 200 அடி நீளம், 80 அடி அகலம். இதுவும் பிரம்மாண்டம் தான், இது காறும் இல்லாத மெகா சைஸ். மேடையின் பேக்ரவுண்ட், பாராளுமன்ற மைய மண்டப அமைப்பு. அங்கு தான் தலைவர் கலைஞர் அமர்ந்து, மாநாட்டை பரிபாலனம் செய்ய போகிறார். 


                                  

மாநாட்டு மேடையின் பேக்ரவுண்ட்டிற்கு பின்னால், ஒரு பகுதி இருக்கிறது. அங்கு ஆறு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைவர் மற்றும் பேராசிரியர் அவர்களுக்கு அறை. அத்தோடு முக்கிய பிரமுகர்களுக்கு அறை, கணினி அறை என இது எல்லாமே புதுசு தான். மாநாட்டின் போது இயங்க இது உற்சாகம் தரும்.

பின்னால் இரண்டு குடில்கள். வீடு போன்ற அமைப்போடு தலைவர் மற்றும் தளபதி தங்குவதற்கு என்றே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், இவர்கள் பயணம் தடைபடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

                                      

சுற்றிலும் வாகனங்கள் நிற்க 200 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி மாநாடு சிறப்புற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இதை எல்லாம் தாண்டி மாநாடு வெற்றி என்பது, மாநாட்டுக்கு முதல் நாள் இரவு 12.30 மணி தாண்டியும் மக்கள் குவிவது தான். அதிலும் கைகுழந்தைகளோடு கட்சி சார்பற்ற மக்கள் தொடர்ந்து வந்து பார்ப்பது தான் "வெற்றி".

# திருச்சி, திருப்புமுனை தான்....

புதன், 19 பிப்ரவரி, 2014

திருச்சி மாநாட்டு ஏற்பாடுகள் -1

"ஏம்பா, போர்ல தண்ணி எப்படி வருது ?"
"ஃபுல் போர்ஸ்ல வருதண்ணே" 

இந்த பதிலால், மழையை கண்ட விவசாயி போல் அண்ணன் கே.என்.நேரு அவர்களுக்கு மகிழ்ச்சி. மாநாட்டிற்கு வருகிற தொண்டர்களுக்கு, தமிழக அரசின் "அன்பால்" மாநகராட்சி குடிநீர் வழங்காது என்பதால் 20க்கு மேல் ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க RO பிளாண்ட் போடப்பட்டுள்ளது.

மின்சார இணைப்பிற்கும் அரசை நம்ப வேண்டாம் என, 180க்கு மேற்பட்ட ஜெனரேட்டர்கள் உதவியுடன் மின் விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. அரசின் அன்பு எந்த அளவிற்கு இருக்கிறதென்றால், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மாநாடு நடைபெறுகிற இடத்திற்கு செல்லும் சாலையின் நிலையை கேட்டாலே புரியும்.

சாலையை புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டு, பழைய சாலை கொத்தப்பட்டு, ஒரு அடுக்கு ஜல்லி சாலை அமைக்கப்பட்ட நிலையில், வேலையை நிறுத்த சொல்லி வாய்மொழி உத்தரவு. ஒரு மாதமாக தார் போடப்படாமல், சாலை மீண்டும் சீர்கெட்டு வருகிறது. இந்த சாலையில் முக்கிய கல்லூரி உள்ளது, மாணவர்களும் அவதிப்படுகின்றனர்.

இதை போல், பல முனைத் தாக்குதல் அரசு தொடுத்து வருகிறது. ஆனாலும் மாநாட்டு பணி அசராமல் தொடர்கிறது.

இது வரை இல்லாத அளவிற்கு, மாநாட்டு பணிகள் பிரம்மாண்டம், அனைத்து வகையிலும். திண்டுக்கல் சாலையில் செல்லும் போதே, டைரக்டர் ஷங்கர் படம் போல், அகண்ட வெட்டவெளி கண்ணில் படும். மாநாடு நடைபெறுகிற இடம் 200 ஏக்கருக்கு மேல். உள்ளே திரும்பினால், சிவந்த நிறத்தில் டெல்லி செங்கோட்டையை ஒத்த முகப்பு. இருபுறமும் கூட்டணிக் கட்சி தலைவர்களின் பிரம்மாண்ட கட்-அவுட்கள்.

                                   

முகப்பினுள் நுழைந்தால், பாராளுமன்ற வளாகத்தின் வெளிப்புற தோற்றத்தில் அடுத்த முகப்பு. அதனுள் நுழைந்தால், ஜிலுஜிலுக்கும் பனை ஓலை ஆர்ச், தலைவர் கலைஞர் வயதை குறிக்கும் வகையில் 90 அடி உயரத்தில். 


                                 

அதற்கு முன்பாக அதற்கு ஈடாக 90 அடி உயரத்தில் கொடிக்கம்பம். அதில் பறக்க இருப்பது, 10 அடி உயர கழகக் கொடி.

பனை ஓலை ஆர்ச்சை ஒட்டி 1100 அடி நீளமும், 600 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட பந்தல். அது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 


                                 

உள்ளே சூரிய ஒளி போல், பளீரிடும் ஃபோகஸ் லைட்கள். கீழே மணல் பரப்பப்பட்டு உட்கார்ந்து பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூணிலும் ஒலிப்பெருக்கி கட்டப்பட்டுள்ளது.

உள்ளே தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட உள்ளது. மேடையிலிருந்து தூரமாக அமர்ந்திருந்தாலும், அருகில் இருந்து பார்க்கும் உணர்வை தரும். மின்விசிறிகளும் பொருத்தப்பட்டுள்ளன. பந்தலுக்கு வெளியிலும் மெகா திரைகள் அமைக்கப்பட்டு, ஒளிப்பரப்பப்படவுள்ளது.

இரண்டு மாதத்திற்கு முன்பு இது வயல்வெளி. நடந்தால் முழங்கால் அளவு உள்ளே போகும். இப்போது, கால்பந்து திடல் போல் கெட்டியாகி விட்டது.

(தொடரும்)

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

1990 - 2014 மாநாடுகள் - ஒரு மீள் பார்வை...

அண்ணன் தங்கம்.தென்னரசு அவர்களின் வாழ்த்துக்கள் டைம்மெஷினில் ஏற்றி விட்டது. 1990-ல் நடைபெற்ற மாநாட்டில் கல்லூரி மாணவனாகக் கலந்து கொண்ட நான் இந்த 2014 மாநாட்டின் வரவேற்புக்குழு செயலாளர்களில் ஒருவன் என்பதை வாழ்த்தியுள்ளார், இதற்கு முந்தைய ஸ்டேடஸில்.

கோவையில் 1993-ல், ஏழாவது மாநில மாநாடு. மறுமலர்ச்சிகள் வெளியேற்றப்பட்ட நேரம் என்பதால் ஒரு “வித” எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று அவர்களுக்கு “மகிழ்ச்சியை” கொடுத்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டபோது தனியார் நிறுவனப் பணியில் இருந்தேன்.

1996-ல் திருச்சியில் எட்டாவது மாநில மாநாடு. கழகத் தோழர்களை உற்சாகப்படுத்தி, கழகத்தை ஆட்சிக்கட்டிலில் ஏற்ற அடித்தளமாக இருந்த மாநாடு. இந்த மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர் அண்ணன் கே.என்.நேரு அவர்கள். செயலாளர்களில் ஒருவர் எனது தந்தையார் எஸ்.சிவசுப்ரமணியன். இந்த மாநாட்டின் போது நடைபெற்ற ஊர்வலம் திருச்சியை குலுக்கியது. நான் அப்போது வளர்ந்து வந்த தொழிலதிபர்.

1997-ல் சேலத்தில் சிறப்பு மாநில மாநாட்டிலும், 1998-ல் திருநெல்வேலியில் திமுக பொன்விழா தொடக்க சிறப்பு மாநாட்டிலும் கழகத் தோழர்களோடு கலந்து கொண்டேன், முழு நேர அரசியல்வாதியாக. 1996 உள்ளாட்சித் தேர்தலில் , மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்று, பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக தேர்வாகி இருந்தேன்.

                              Displaying img460.jpg

எதிர்கட்சியான நிலையில், 2003-ல் விழுப்புரம் மாவட்ட மாநாடு. 2004-ல் விருதுநகரில், நடைபெற்ற தென்மண்டல மாநாட்டில் அண்ணன் ஆ.ராசா அவர்கள் கொடியேற்றி ஆற்றிய உரை மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. 2004-ல் சேலம் சிறப்பு மாநாடு. 2005-ல் திண்டுக்கல், தஞ்சை,கோவை, வேலூர் மண்டல மாநாடுகள் நடைபெற்றன. 2006 மார்ச்சில் ஒன்பதாவது மாநில மாநாடு, திருச்சியில். வரவேற்புக்குழு தலைவர் அண்ணன் கே.என்.நேரு, செயலாளர்களில் ஒருவர் ஆ.ராசா. இந்த மாநாடுகளின் போது, நான் ஆண்டிமடம் ஒன்றிய கழக செயலாளர், அரியலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்.

2007 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் திமுக இளைஞர் அணியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. மிகப் பெரிய இளைஞரணி அணிவகுப்பு நடைபெற்றது, தளபதி அவர்கள் தலைமையில். அணிவகுப்பை அண்ணன் ஆ.ராசா அவர்கள் துவங்கி வைத்தார்கள். அணிவகுப்பில் கலந்து கொண்டு மகிழ்ந்தோம். அப்போது நான் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் மற்றும் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர்.


                                    

இப்போது 2014-ல் திருச்சியில் கழகத்தின் பத்தாவது மாநில மாநாடு. இப்போது நான் அரியலூர் மாவட்ட செயலாளர் மற்றும் குன்னம் சட்டமன்ற உறுப்பினர். இதை விட பெருமை, மாநாட்டின் வரவேற்புக்குழு செயலாளர்.

மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவர் அண்ணன் கே.என்.நேரு அவர்கள். வரவேற்புக்குழு செயலாளர்களாக, நான்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளோம். புதுக்கோட்டை பெரியண்ணன்.அரசு, அரியலூர் எஸ்.எஸ்.சிவசங்கர், கரூர் நன்னியூர் ஜி.ராஜேந்திரன், பெரம்பலூர் பா.துரைசாமி.

உண்மையில், இது கிடைத்தற்கரிய வாய்ப்பு. கழக வரலாற்றில் என் பெயரும் இடம் பெறும் வாய்ப்பு.

நன்றி கோடி, தலைவர் கலைஞர் அவர்களுக்கும், தளபதி அவர்களுக்கும்.


                                 

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

1990-ல், திருச்சியில், ஆறாவது திமுக மாநில மாநாடு

ஆறாவது திமுக மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. கோவையில் அய்ந்தாவது மாநில மாநாடு 1975-ல் நடைபெற்று நீண்ட வருடங்களுக்கு பிறகு 1990-ல் ஆறாவது மாநாடு. நீண்ட இடைவெளி என்பதால், கழகத் தோழர்களும் உற்சாக உச்சியில்.

1977-ல் ஆட்சிக்கட்டிலில் இருந்து இறங்கியிருந்த கழகம், 1989-ல் மீண்டும் ஆட்சியை பிடித்திருந்தது. அந்த உற்சாகமும் கூடுதலாக. நான் கல்லூரியில் இருந்து நேராக மாநாட்டிற்கு சென்றிருந்தேன். பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் தயாராகியிருந்தது திருச்சி.

கீற்றுக் கொட்டகையாக அமைக்கப்பட்டிருந்த பந்தல். முன் முகப்பு அரண்மனை போலவும், உள் முகப்பு பனையோலையால் ஆன அலங்கார வளைவு. உள்ளே திமுக இளைஞரணி நடத்திய “திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சி” இடம்பெற்றது.

கண்காட்சியில் திராவிட இயக்க தலைவர்களின் படங்கள், வரலாற்று நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன. கல்லூரி மாணவனான எனக்கு அது புது அனுபவம். ஆண்டிமடம் ஒன்றியத்தில் இருந்து வந்திருந்த கழகத் தோழர்களுடன் எங்கள் குடும்ப உறுப்பினர்களும் வந்திருந்தனர்.

ஊர்வலம் நடைபெற்ற சாலையில் அலங்கார வளைவுகள் ஒவ்வொரு ஒன்றியத்தின் சார்பாக அமைக்கப்பட்டிருந்தது. அப்போது கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் இணைந்திருந்த, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம். முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் அவர்கள் மாவட்ட செயலாளர். அண்ணன் கே.என்.நேரு அவர்கள் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர்.

கழகத் தோழர்கள் குடும்பம், குடும்பமாக கலந்து கொண்டிருந்தனர். மணல் தரையில் பெட்ஷீட் விரித்து போட்டு அமர்ந்து மாநாடு பார்த்த நினைவுகள் மறக்காது. நொறுக்குகள் கொரிக்கும் போது, பக்கத்தில் உள்ளோருக்கும் கொடுக்கும் அன்னியோன்யம். மாநாட்டிலேயே புது நட்புகள் மாநில அளவில் துளிர்க்கும்.

இரண்டு நாள் மாநாடும், சிறந்த சொற்பொழிவாளர்களால் கருத்து மழை தான். ஒவ்வொரு சொற்பொழிவாளரும் கொடுக்கப்பட்ட தலைப்பில் பேசுவது, ஒரு புத்தகத்தை படிப்பதற்கு இணையானது. கழகத் தோழர்களால், பேச்சாளர்கள் பேச்சுக்கு உடனடியாக மதிப்பெண் போடப்படும். சிறப்புகள், தவறுகள் விவாதிக்கப்படும். அதுவே ஒரு தனி அனுபவம் தான்.

எனது தந்தை சிவசுப்ரமணியன் அவர்கள் அன்று திருச்சி மாவட்ட துணை செயலாளர் மற்றும் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர். மறைந்த அண்ணன் க.சொ.கணேசன் அவர்கள் ஜெயங்கொண்டம் ச.ம.உறுப்பினர். அண்ணன் அரியலூர் ஆறுமுகம் அவர்கள் அரியலூர் ச.ம.உ. இவர்கள் பதினைந்து நாட்கள் திருச்சியில் தங்கி மாநாட்டு பணியாற்றினர்.

அய்யா புரவலர் அன்பிலார், மந்திரக் கோல் மைனர் நாஞ்சிலார், முரசொலி மாறன் ஆகியோர் உயிரோடிருந்து, மேடையை அலங்கரித்தனர். தலைவர் கலைஞர் அவர்கள் மிகச் சிறப்பான நிறைவுரை ஆற்றினார்.

( மாநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நான், மறைந்த மாவட்ட பிரதிநிதி அண்ணன் பூவாணிப்பட்டு கலியபெருமாள், என் தம்பி சிவக்குமார் )


                         

மாநாடு என்றே சொல்லக்கூடாது, சொல்லவும் முடியாது....

காலையில் வேப்பூர் ஒன்றியம் நமையூர் கிராமத்தில், ஒரு கழகத் தோழர் மறைவுற்ற செய்தி வந்தது. கிளம்பி போய் அஞ்சலி செலுத்திவிட்டு வரும் போது வழியில் சில வேன்கள் எதிரில் சென்றன. யார் என்று சற்று உற்று கவனித்ததில் இரண்டு அரசியல் கட்சி கொடிகள் கண்ணில் பட்டன. ஒன்று பா.ஜ.க கொடி, மற்றொன்று ஐ.ஜே.கே.

அட எங்கே போகிறார்கள், என்று யோசித்த போது தான் நினைவு வந்தது மோடி விஜயம். போன பிஜேபி வாகனங்கள் பெரும்பாலும் கன்னியாக்குமரி மற்றும் தென் மாவட்டங்கள் தான். ஐ.ஜே.கே வாகனங்கள் லால்குடி மற்றும் குன்னம் தொகுதியை சேர்ந்தவர்கள். எனக்கும் வேண்டியவர்கள்.

இந்த மாநாட்டிற்கு பலத்த எதிர்பார்ப்பு. காரணம் மோடி அலை ஓங்கி ஓங்கி வீசி, அது புயலாக மையம் கொண்டு, எதிர்படுவோரை எல்லாம் தூக்கி வீசும் என கணிக்கப்பட்டது தான். ஆனால் இன்று வண்டலூர் அருகே கரையை கடந்த போது, அதன் வீச்சு எல்லோருக்கும் தெரிகிறது.

நாங்கள் அப்போது திருச்சி கழக மாநாடு ஏற்பாடு பணிகளுக்காக சென்று கொண்டிருந்தோம். பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் துரைசாமி அவர்களோடு நானும் குன்னம் தொகுதி தோழர்கள் முன்னாள் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மதியழகன் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கரிகாலன், ரசூல் அகமது, மாவட்ட ஆதி திராவிட அணி அமைப்பாளர் சன்.சம்பத், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரபாகரன் ஆகியோரும் சென்றோம்.

திருச்சியில் ஏற்பாடு செய்யப்படுவது மாநாடு. வண்டலூரில் நடைபெறுவது பொதுக்கூட்டம். இது மட்டுமல்ல, கேப்டன் கூட்டியதும் பொதுக்கூட்டம் தான்.

அரியலூர் மாவட்ட திமுக தேர்தல் நிதியளிப்புப் பொதுக்கூட்டத்திற்கு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வந்த போது கூடிய கூட்டத்தை கணக்கில் கொண்டால், தேமுதிக கூட்டிய கூட்டம் மூன்று மடங்கு இருக்கும். பா.ஜ.க கூட்டமும் அதே கதை தான். இவை எல்லாம் மாநாடு என்றே சொல்லக்கூடாது, சொல்லவும் முடியாது.

திருச்சியில் நடைபெற போகும் மாநில மாநாட்டின் ஏற்பாடுகளை பார்த்தவர்கள் பிரமித்து போயே உள்ளனர். நேற்றும், இன்றும் மாநாட்டு பணிகளில் பங்கேற்றோம்.

மாநாட்டு மேடை, கொட்டகை மற்றும் ஏற்பாடுகளை பார்வையிட திமுக தோழர்கள் வருவதை தாண்டி பொதுமக்கள் வரத்து அதிகமாகவே இருக்கிறது. குடும்பம் குடும்பமாக கட்சி சார்பற்றவர்களும் வந்து பார்வையிட்டு, பிரமித்து போகின்றனர். ஏதோ பொருட்காட்சி போல உள்ளது.

இதை எல்லாம் பார்க்கும் போது எனக்கு பழைய நினைவுகள் வந்து, வந்து செல்கின்றன. சின்ன வயதில் குடும்பத்தாரோடு பங்கேற்ற மாநாடு, நினைவு தெரிந்த பிறகு கலந்து கொண்ட மாநாடு, அரசியலுக்கு வந்த பிறகு பங்கேற்ற மாநாடு என பல மாநாடுகள்.

# வரலாற்று நினைவுகள்...

வியாழன், 6 பிப்ரவரி, 2014

அதுவே தலைமைப் பண்பு. எங்களுக்கும் பயிற்சி !

வழக்கமாக எனக்கு ‘லேட் கமர்’ என்று பெயர் உண்டு. யாராவது வந்து விட்டால், அவர்களுக்கு பதில் சொல்லி கிளம்புவது பழக்கம், அதனால் தாமதமாகிவிடும். இது தவிர்க்க முடியாதது. அவர்களை தவிர்த்து கிளம்பினால் மதிப்பதில்லை என்ற பெயர் வந்துவிடும்.

கழக கொறடா அண்ணன் சக்கரபாணி அவர்களுக்கு என் மீது இதில் நல்ல அபிப்ராயம். அதனால் காலை 9.30 மணிக்கு செல்லில் அழைத்தார். “சங்கர் கிளம்பியாச்சா?”. “அண்ணே ஆட்டோ ஏறிட்டேன். கரெக்ட் டைம்க்கு போயிடுவேன்”.

மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு வாங்க சொல்லி முதல் நாளே கொறடா சொல்லியிருந்தார். சகோதரர் டி.ஆர்.பி ராஜாவோடு போக சொல்லியிருந்தார். அவர் தொகுதி நிகழ்ச்சி முடித்து, வரத் தாமதமாகிவிட்டது. நான் மட்டும் செல்வதால், தாமதமாகிவிடுவேன் என்று கொறடா எண்ணம்.

ஆனால் 9.50க்கு சட்டசபைக்கு சென்றுவிட்டேன். சட்டபேரவை செயலாளர் அறைக்கு சரியாக 10.00 மணிக்கு நுழைந்தேன். வேட்புமனு விண்ணப்பம், வாக்காளர் பட்டியல் பெற்றுக் கொண்டேன். கழகத் தொண்டரணி தேவராஜ் அங்கு டூ-வீலரில் வந்திருந்தார். அவரோடு கிளம்பி ச.ம.உ விடுதி வந்தேன்.

அமைப்பு செயலாளர் அண்ணன் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி அவர்களிடம் பேசினேன். அறிவாலயம் வருவதாக சொன்னார். ஆட்டோ பிடித்து விரைந்தேன். வேட்பாளர் அண்ணன் திருச்சி.சிவா அவர்களும் வந்து விட்டார்கள். மனுவை தயார் செய்ய துவங்கினார்கள்.

தலைவர் கலைஞர் அவர்கள் கிளம்புவதாக தகவல் வந்தது. முன்மொழிந்து முதல் கையெழுத்தை தலைவரிடம் பெற்று விடலாம் என்று அண்ணன் சிவா அவர்கள் சொல்ல, கிளம்பினோம். அப்போது எனது செல்லில் அழைப்பு, Private Number. சமீப காலமாய் வெளிநாட்டு அழைப்புகள் இப்படி வருவதால் குழப்பம்.

“சங்கர், ஸ்டாலின் பேசறேன். வேட்புமனு வாங்கிட்டிங்களா ?”.
“அண்ணா, மனு வாங்கிட்டேன். அறிவாலயம் வந்துட்டேன்”.
“தலைவர் கிளம்பிட போறாங்க. போய் கையெழுத்து வாங்கிடுங்க”.
“தலைவர் அறைக்கு தான் போய்கிட்டு இருக்கோம் அண்ணா”.

பேசும் போதே இணைப்பு கட்டாகிவிட்டது. தலைவர் அறைக்கு சென்று கையொப்பம் பெற்றோம். தலைவர் கிளம்பியவுடன் தளபதி அவர்கள் எண்ணிற்கு அழைத்தேன். தளபதி அவர்கள் அப்போது தான் விழுப்புரத்தில் திருமணம் நடத்தி வைத்து விட்டு கார் ஏறியிருக்கிறார்.

கார் ஏறியவுடனயே இது குறித்து அழைக்கிறார் என்றால், எவ்வளவு கண்ணும் கருத்துமாக பணியில் இருக்கிறார் என்பது புரியும். அவர் கொறடாவிடம் விசாரித்திருக்க முடியும். ஆனால் எனக்கே நேராக அழைக்கிறார் என்றால், எளிமை, அக்கறை.

அடுத்து, அன்று காலை தான் ஒரு நாளிதழில் ஒரு செய்தி, ‘திருச்சி.சிவா அவர்கள் தேர்வில் தளபதி அதிருப்தி’ என. திருப்தி என்பதும் இந்த அழைப்பிலேயே புரியும்.

மீண்டும் நான் அழைத்தேன்.

“அண்ணா, தலைவர் கையெழுத்து வாங்கிட்டோம்”
“வாங்கிட்டிங்களா. மகிழ்ச்சி”

# தளபதியின் தலைமைப் பண்பு. எங்களுக்கும் பயிற்சி !



                                          

புதன், 5 பிப்ரவரி, 2014

வேட்டிய மாத்த விடாம, கெட்டியா பிடிச்சிக்கிட்டார்...

29.01.2014 மதியம் 12.30. அப்போது தான் குரோம்பேட்டையை கடந்தேன். அண்ணன் ஆ.ராஜா அவர்கள் இன்று நீலகிரி தொகுதியில் கழக வேட்பாளாராகப் போட்டியிட விருப்ப மனு அளித்தார்கள், அறிவாலயத்தில். அதற்காக சென்று கொண்டிருந்தேன்.

இன்று அய்யா அலைகடல் வெற்றிகொண்டான் அவர்க...ள் நினைவு நாள். காலையில் ஜெயங்கொண்டத்தில் உள்ள அவரது இல்லத்தில், அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி கிளம்பியதால், நானே தாமதம்.

அப்போது தான் ஃபோன் அழைப்பு. "மாவட்ட துணை செயலாளர் அண்ணன் முருகேசன் மறைவுற்ற செய்தி". அண்ணன் ராஜா அவர்களை நேரில் சந்தித்து, இந்தத் தகவலை தெரிவித்து உடனே ஜெயங்கொண்டம் திரும்பினேன்.

1999-ல் நான் அரியலூர் மாவட்ட கழக செயலாளராக தேர்வு பெற்றேன், அப்போது அண்ணன் முருகேசனும் மாவட்ட துணை செயலாளராகத் தேர்வு பெற்றார். ஆனால் அவர் அதற்கு முன்பே மாவட்ட துணை செயலாளராக இருந்தவர். அப்போது எனது தந்தையார் மாவட்ட செயலாளர்,

மாவட்ட செயலாளர் ஆன போது, எனக்கு வயது 29, அண்ணன் முருகேசனுக்கு 62. அவர் மகன் போன்ற வயது. ஆனால் அன்றிலிருந்து இது வரை என்னை "மாவட்டம்" என்று மரியாதையோடு தான் அழைப்பார், இடையில் நான் மாவட்ட செயலாளராக இல்லாத நேரத்திலும்.

2001-ல் ஜெயலலிதா முதலமைச்சர் ஆன போது, அரியலூர் மாவட்டத்தை பெரம்பலூர் மாவட்டத்தோடு இணைத்து விட்டார். அப்போது ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டத்தின் செயலாளர் அண்ணன் ஆ.ராஜா அவர்கள். இவர் துணை செயலாளர்.

மீண்டும் தலைவர் கலைஞர் முதல்வர் ஆகி அரியலூர் மாவட்டத்தை பிரித்து வழங்குகினார். நான் மீண்டும் அரியலூர் மாவட்ட செயலாளராகிறேன். அண்ணன் முருகேசனே மாவட்ட துணை செயலாளர். மற்ற எல்லாப் பொறுப்புகளிலும் புதிய நபர்கள்.

நான்காவது முறையாக மாவட்ட துணை செயலாளர், காரணம் அவ்வளவு எளிமையான, அன்பான, பிறரை மதிக்கின்ற மனிதர்.

சிறு மூளை சுருங்க ஆரம்பித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால் ஞாபக மறதி, நினைவிழப்பு ஏற்பட்டது. நேற்று தஞ்சை சென்று சிகிச்சையளித்தும் பலனில்லை. காலை மறைவுற்றார். இரவு 7 மணிக்கு சென்று அஞ்சலி செலுத்தினேன்.

அப்போது அவரது மகன் கணேசன் சொன்னது, "நேற்று மருத்துவமனையில், தன்னையறியாமல் வேட்டியில் சிறுநீர் போயிட்டார். ஆனா வேட்டிய மாத்த விடாம, கெட்டியா பிடிச்சிக்கிட்டார். காரணம் கருப்பு சிவப்பு கரை போட்ட வேட்டி. அவரிடம் வேறு கரை வேட்டியே கிடையாது. இறந்த பிறகு தான் கைலி மாற்றினோம்.

இந்தக் கரை வேட்டிய அவரும் விடல, வேட்டியும் அவர விடல. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இந்த வேட்டி தான் அவர காப்பாத்துச்சு. நோய் பாதிப்பால், ஞாபக மறதியில் வழி தவறி வேறு ஊருக்கு போயிட்டார். அங்க நினைவிழந்து கீழ விழுந்து அடிபட்டு மயக்கமாயிட்டார். கரை வேட்டிய பார்த்த கழகத் தோழர்கள் போய் அடையாளம் தெரிந்து காப்பாற்றினார்கள்."

# முருகேசன்கள் கழகத்தின் வேர்கள்
 

அவசியம் "கற்க" வேண்டிய நூல் - விடுபூக்கள்

விடுபூக்கள் - தொ.பரமசிவன்; நூல் அறிமுகம்.

நூலாசிரியர் தொ.பரமசிவன் என்பதே இப்புத்தகத்தின் சிறப்பாகும். பண்பாட்டு ஆய்வாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறையின் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழகத்தின் பல கூறுகளை வெளிக் கொணர்ந்தவர். நடிகர் கமல் அடிக்கடி இவரை சந்தித்து தான் தன் வரலாற்று ஆர்வத்தை கூர்மைப்படுத்திக் கொள்வார்.

மாலை கட்டிய பின் எஞ்சிய பூக்களே விடுபூக்கள், அது போல ...பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல் என அறிமுகப்படுத்தப்படுகிறது. வீடும் வாழ்வும், பண்பாட்டின் வாழ்வியல் என்ற இரு பிரிவுகளில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள்.


                                                   


 "குளித்தல்" என்ற சொல்லுக்கான விளக்கமளிக்கும் முதல் கட்டுரையே பிரமிக்க வைக்கிறது. சூரிய வெப்பத்தாலும், உழைப்பாலும் வெப்பமடைந்த உடலை குளிர வைத்தலே "குளிர்த்தல்" ஆகும். மஞ்சள் நீராட்டு, ஆறாட்டு என விரியும் கட்டுரை நமக்கு பல சேதிகளை தருகிறது.

வள்ளி, உள்ளி, பூண்டு ஆகியவற்றை ஏன் பார்ப்பனர்கள் உண்பதில்லை என்பதற்கான விளக்கம், கீரையின் அன்றைய சமூக மதிப்பு ஆகியவை கூறப்படுகிறது. பழம் போடுதல், பயறு அவித்தல் ஆகிய சொல்லாடுதலுக்கான விளக்கம் ஆகியவை உணவும் குறியீடுகளும் என்ற தலைப்பில்.

மலர்களால் தொடுக்கப்படும் மாலையின் குறியீடுகள், அரசியல், அதில் பயன்படுத்தும் மலர்கள், தொடுக்கும் மக்களின் சமூக நிலை, அது சாதியானது என நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஆய்வு.

காது நீளத்தை பார்த்து வகை சொல்லும் "தொன்மை" நமக்கு சினிமாவை தான் நினைவுப்படுத்தும். ஆனால் சங்க இலக்கியங்களில் காணப்படும் பெயர் இப்போதும் புழங்குவது, சங்க இலக்கியத்தில் "பாயசம்" இடம் பெறுவது தொன்மை என நிறுவுகிறார்.

என்ன தான் வரலாற்று ஆய்வாளர் என்றாலும், கைம்பெண்ணும் சொத்துரிமையும் என்றக் கட்டுரையில் வடமாநிலங்களில் ரூப்கன்வர்கள் சதியில் எரிக்கப்படுவதற்கு, பெரியார்-அம்பேத்கர் கருத்துகள் எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கப்படாததே காரணம் என்று சொல்லும் போது, அவரது சமூக அக்கறை வெளிப்படுகிறது.

தம்பி உடையான் என்ற தலைப்பில் கீழக்கரை இசுலாமியர்களிடையே செய்குதம்பி, சக்குதம்பி போன்ற பெயர்கள் இருப்பதற்கு சேது அரச மரபினர் கொடுத்த பட்டம் என்ற விளக்கம் 17ஆம் நூற்றாண்டின் வாழ்வியலை விளக்குகிறது.

நெல்லை மாவட்டம் சிங்கிகுளம் என்ற கிராமத்தில் இருக்கும் கோவிலில் மக்கள் பகவதி அம்மனையும் முனிஸ்வரரையும் தற்போது வணங்குகிறார்களாம். ஆனால் அவை உண்மையில் என்ன திருமேனிகள் என்று அறியும் போது, கோவில்களே இவ்வளவு மாற்றம் பெற்றிருந்தால், வரலாறு எவ்வளவு திரிக்கப்பட்டிருக்கும் என்று தலை சுற்றுகிறது.

அம்பாசமுத்திரம் அருகிலுள்ள மன்னார் கோவில் கிராமத்தில் உள்ள திருமால் கோயிலின் முன் உள்ள பெண் சிலையின் ஆய்வும், திருவிழாக்கள் குறித்த ஆய்வும் நுணுக்கமானவை.

கூலி என்ற ஆங்கில வார்த்தையின் தமிழ் மூலம், ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுகள் குறித்த கட்டுரைகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன.

தஞ்சைப் பெருங்கோவில் குறித்த கட்டுரையும், இராசராச சோழனின் ஏக ஆதிபத்தியம் குறித்த கட்டுரையும் ராசராசனின் சிறப்புகளையும், எதிமறைகளையும் பட்டியலிடுகிறது.

நாம் கற்ற, கற்பிக்கப்பட்ட வரலாற்றின் உண்மை தன்மையை உணர வைக்கிறார். இது அவசியம் உணரப்பட வேண்டியதாகும். நாம் காணும் தோற்றங்கள் திரிக்கப்பட்டவை, திணிக்கப்பட்டவை என்பதை பொட்டில் அறைகிறது நூல்.

வரலாற்றை உண்மையாய் அறிய விருப்பப்படுபவர்கள், வரலாற்று, பணபாட்டு ஆய்வு சிந்தனைக் கொண்டவர்கள் அவசியம் "கற்க" வேண்டிய நூல்.

இந் நூலை படிப்பவர்கள், கோவிலுக்குள் நுழைந்தால் வணங்குவதற்கு முன், கோவிலின் தல வரலாற்றை அறியவே ஆர்வம் காட்டுவார்கள். உணவை உண்பதற்கு முன் அதன் குறியீடை அறிய விரும்புவார்கள்.

நூல்: விடுபூக்கள்.
ஆசிரியர்: தொ.பரமசிவன்
பதிப்பகம்: கயல்கவின், சென்னை
விலை: ரூ 75.00

# விடுபூக்கள், மனதை விடாபூக்கள் !