மணப்பெண் சற்று தவிப்பாக உட்கார்த்திருந்தார். சுயமரியாதைத் திருமணம். வாழ்த்தரங்கம் நடந்துக் கொண்டிருந்தது. பாலிமர் டிவி கலை திருமணத்தில் கலந்துக் கொண்டு சென்றதால், இடையில் தான் மேடை ஏறினோம்.
மணவிழாத் தலைவர் அய்யா ஆனைமுத்து. மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சியின் தலைவர். இட ஒதுக்கீட்டிற்காக தனது வாழ்வை அர்பணித்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகளோடு போராடிக் கொண்டிருப்பவர்.
செந்துறை. அண்ணன் அரங்க.இளவரசன் மகன் திருமணம். சில மாதங்களுக்கு முன்பே திருமண ஏற்பாடு குறித்து கூறியிருந்தார். மேடை முழுதும் அரசியல்வாதிகள் அல்லாத பகுத்தறிவாளர்கள் நிறைந்திருந்தனர். நான் மட்டுமே அரசியல்வாதி.
ஒவ்வொருவராக வாழ்த்திக் கொண்டிருந்தனர், தூயத் தமிழில். எதிரே உட்கார்ந்திருந்தோரில் பெரும்பாலோர் கேட்டுக் கொண்டிருந்தனர், ஒரு சிலரைத் தவிர. மேடையிலும் மணமகன் உட்பட ரசித்துக் கொண்டிருந்தனர், ஒருவரைத் தவிர. அவர் மணமகள்.
மணமகனிடம் கேட்டேன், " பொண்ணுக்கு தமிழ் தெரியுமா ?". "தெரியாதுங்க சார்". காரணம் மணமகள் தெலுங்கானாவை சேர்ந்தவர்.
மணமகன் ஹைதராபாத்தில் பணிபுரியும் பொறியாளர். சில வருடங்களாக அங்கே தங்கி இருந்ததில், மணமகளை சந்தித்திருக்கிறார். காதலால் இணைந்தனர். தந்தையார் கொண்டிருக்கிற பெரியார் கொள்கையை இவர் நடைமுறை படுத்திவிட்டார்.
மாநிலம், மொழி கடந்த சாதி மறுப்பு திருமணம். இரு வீட்டாரும் இணைந்து திருமணத்தை நடத்தினர்.
வாழ்த்த அழைத்தார் அய்யா ஆனைமுத்து. மணமக்களை வாழ்த்தினேன். "நாம் வாழ்த்தி பேசுவது மணமகளுக்கு புரியாது. அதனால் அவருக்கு புரிவது போல் சில வார்த்தைகளை பேசுகிறேன். மன தமிழ்நாட்டுக்கு ஒச்சியுன்ன ஜோதிய வெல்கம் சேஸ்தேனு. மீரு தெலுங்கானா எந்தா ரெவல்யூஷன் பூமியோ அந்தா ரெவல்யூஷன் பூமி மன அரியலூர் டிஸ்ட்ரிக்ட்" என தெலுங்கில் வாழ்த்த, மணமகள் முகத்தில் அளவில்லா மகிழ்ச்சி.
மணமகளுக்கான உறுதிமொழியை ஆங்கிலத்தில் வடித்தெடுத்து கொடுத்தார் அய்யா ஆனைமுத்து. மணமகள் உறுதிமொழி ஏற்றார். மணமகனை கேட்டேன்,"உங்களுக்கு தெலுங்கு தெரியுமா ?". "தெரியாது சார். அவங்கள தமிழ் கத்துக்க சொல்லனும்". "நீங்களும் தெலுங்கு கத்துக்குங்க. தமிழ் தெரிந்த நமக்கு தெலுங்கு ஈஸி தான்"என்றேன்.
மணமகனும் உறுதி ஏற்று, மங்கல நாணை அணிவித்தார். மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து விடை பெற சென்றேன். மணமகளிடம், "மீரு தமிழ் நேர்ச்சுக்கோண்டி, அப்பாயிக்கு தெலுகு teach செய்யண்டி" என்றேன். வேற்று மண்ணில், தாய்மொழி கேட்ட இன்பம் அவருக்கு.
தமிழ் அறியா தெலுங்கு பெண் "ஜோதி"யை காதல் மணமுடித்த மணமகன் பெயர் "தமிழ்வேந்தன்".
# சந்தோஷங்க விவாக ஜீவிதம் தமிழ்-ஜோதி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக