பிரபலமான இடுகைகள்

வியாழன், 17 செப்டம்பர், 2015

திராவிட இயக்க வரலாறு தொடர்கிறது

அடுத்த பணிக்கு ஒரு மணி நேர இடைவெளி இருந்தது. அதில் மாநில சிறுபான்மை நல துணை அமைப்பாளர் அண்ணன் எம்.எம்.அப்துல்லா அவர்களை சந்திக்கலாம் என முடிவெடுத்தேன்.

"அண்ண, எல்டாம்ஸ் ரோடு வந்துடுங்க. வெளியில் நிற்கிறேன்" என்றார். எல்டாம்ஸ் ரோட்டில் ஒரு சின்ன பிரிவு சாலை. ஒரு பெரிய அபார்ட்மெண்ட். இரண்டாம் மாடியில் அண்ணன் வீடு. எனது நூலை அளித்து விட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். திராவிட இயக்கப் பெருமைகள் குறித்து.

அப்போது அலைபேசி அழைப்பு. லூயி கதிரவன்,"வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்திருக்கு"என்றார். உறுதிப் படுத்திக் கொள்ள கலைஞர் செய்திகள் சேனல் வைத்தோம்.

பிளாஷ் நியூஸ். திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படும் விருதுகள் அறிவிப்பு. பெரியார் விருது: ஆண்டிமடம் சிவசுப்பிரமணியன்.

"ஆகா. அப்பாவுக்கு பெரியார் விருது. மகிழ்ச்சி அண்ணா" வாழ்த்தினார் அப்து அண்ணன். அப்பாவுக்கு ஃபோன் செய்து, செய்தியை சொன்னேன். அவர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி

"அண்ணே, ஒரு வரலாறு". "சொல்லுங்கண்ணே". "1916 மே 20ல, வேப்பேரியில் எத்திராஜு முதலியார் வீட்டில் ஒரு கூட்டம் நடந்தது.  பிராமணர் அல்லாத தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கூட்டம் அது. பிராமணர் அல்லாத மற்றோர் உரிமை காக்க கூடிய கூட்டம்"

"அதில் சர்.பி.தியாகராயர், டி.எம்.நாயர் ,டாக்டர் நடேசன், சர்.உஸ்மான் சாஹிப், திவான் பகதூர் கருணாகரன், அலமேலு மங்கை தாயார் ஆகியோர் கூடி 'தென்னிந்திய மக்கள் நலச் சங்கம்' என்ற அமைப்பை துவங்கினர். அதற்காக அப்போது துவங்கப்பட்ட பத்திரிக்கை தான் 'ஜஸ்டிஸ்".

"அது தான் பிறகு ஜஸ்டிஸ் பார்ட்டி, அது பிறகு சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம். அங்கு துவங்கி நம் தலைமுறை வரை வந்து நிற்கிறது"

" அந்த கூட்டத்தில் இருந்த சர்.உஸ்மான் சாஹிப் வாழ்ந்த வீட்டில் தான் நாம் உட்கார்ந்திருக்கிறோம்"என்றார் அண்ணன் அப்துல்லா.

"அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அறிவித்த பெரியார் விருது செய்தியை, உஸ்மான் சாஹிப் வீட்டில் உட்கார்ந்து கேட்பது நமக்கு வரலாறு அண்ணே" என்றேன் நான்.

15.09.2015 மாலை 06.00 மணிக்கு அண்ண அறிவாலயத்தில் முப்பெரும் விழாவில் விருது வழங்கப்பட்டது.

# திராவிட இயக்க வரலாறு தொடர்கிறது !
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக