பிரபலமான இடுகைகள்

திங்கள், 7 செப்டம்பர், 2015

வட இந்திய முகங்கள் வித்தியாசமாக

திருச்சி - பெரம்பலூர் சாலை. இரவு உணவுக்கு கொணலை எஸ்.என்.ஆர் ஹோட்டலில் நிறுத்தினோம்.  டைம் ஓவர். கொஞ்சம் தள்ளி பாலாஜி பவன். ரோட்டோரக் கடை. இறங்கும் போதே அந்த டிராக்ஸ் ஜீப் கண்ணில் பட்டது. மகராஷ்டிரா பதிவு.

உணவு ஆர்டர் செய்தோம். இரண்டு மேசையை இணைத்து ஒரு கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் அந்த ஜீப்பில் வந்திருந்தவர்கள். இரண்டு, மூன்று மொட்டைத் தலைகள். பின் மண்டையில் கொத்து முடியோடு ஒரு மொட்டை. மீசையோடு ஒரு மொட்டை.

தாடி மீசையோடு ஒரு நபர். ஸ்மார்ட்டாக டிரெஸ் செய்து ஒரு நபர் என கலப்படமானக் கூட்டம். இரண்டு நாட்களாக வாட்ஸ் அப்பில் "வட இந்தியாவில் இருந்து ஊடுருவிய கொள்ளையர்கள்" செய்தியை பார்த்த அலர்ஜியில் இருந்ததால் சற்றே கூர்ந்து கவனித்தேன்.

சிலர் எழுந்து கைகழுவ செல்வதும், சிலர் சென்று உணவை வாங்கி வருவதுமாக இருந்தனர். எங்கள் உணவு வந்தது. உண்டோம். கிளம்பும் போது அவர்களும் பில் கொடுத்துக் கொண்டிருந்தனர். எப்படி இந்த ஜீப்பில் இத்தனை பேர் என நினைத்துக் கொண்டே நகர்ந்தேன். அவர்களும் ஜீப் அருகில் வந்தனர்.

"எப்படி இத்தனை பேர் நெருக்கியடித்து இத்தனை தூரம் பயணித்தீர்கள்?" எனக் கேட்டேன். அவர்கள் பதினோரு பேர் என நினைத்திருந்தேன். 9 பேர் வந்துள்ளோம் என்றார் ஸ்மார்ட் நபர். எங்கு போகிறீர்கள் எனக் கேட்டேன். இப்போது தான் காஞ்சிபுரத்தில் வருகிறோம் , சீரங்கம் பார்க்க திட்டமிட்டிருந்தோம். நேரமாகி விட்டதால் நேரே மதுரை செல்கிறோம் என்றனர்.

இது எல்லாம் எனக்கு தெரிந்த ஓட்டை ஹிந்தியிலும், அவர்களுக்கு தெரிந்த உடைசல் ஆங்கிலத்திலும். கொஞ்சம் சைகை பாஷையும். உரையாடல் தொடர்ந்தது. "உங்கள் ஊர் கோவில்கள் எல்லாம் அருமையாக இருக்கின்றன. எங்கள் ஊரில் இது போன்று இருப்பவை மிகக் குறைவு. இரண்டே நாட்களில் சுற்றிப் பார்த்து விடலாம்" என்றார்.

"காஞ்சிபுரம் பார்த்து விட்டே இப்படி சொல்கிறீர்கள். இந்தப் பக்கம் தஞ்சாவூர், கும்பகோணம் செல்லுங்கள். பல கோவில்கள் உள்ளன. இரண்டு, மூன்று நாட்களுக்கு பார்க்கலாம். இது போல பல ஊர்கள் உள்ளது. ஆனால் நான் வேறு கொள்கையாளன். உங்கள் ஆர்வத்தைப் பார்த்து சொல்கிறேன் "என்றேன். தமிழ்நாட்டை மார்க்கெட்டிங் செய்வதோடு, நம் பழைமையை அவர்கள் உணரட்டும் என்ற எண்ணம்.

உடனே தன் டைரியை எடுத்து, கோவில் பெயர்கள், ஊர்கள், தூரம், பாதை எல்லாம் கேட்டுக் குறித்துக்  கொண்டார் அவர். அப்போது உடன் இரண்டு பேர் மட்டும் இருந்து கவனித்துக் கொண்டிருந்தனர். ஊரில் இருந்து எந்த வழியாக வந்தார்கள் எனக் கேட்டேன். கர்நாடகா வழியாக திருப்பதி, காஞ்சிபுரம். அடுத்து மதுரை, இராமேஸ்வரம், திருவனந்தபுரம் முடித்து ஊர் பயணம்.

எல்லா இடங்களிலும் கோவில் தரிசனம் மாத்திரமே என்றனர். எல்லோரும் முப்பதுகளில் இருப்பவர்கள். பொழுது போக்கு இடம் போகவில்லையா எனக் கேட்டேன். "இல்லை. முழுவதும் ஆன்மீகப் பயணம்" என்றனர். "எந்த ஊர்?" என்றேன். "லத்தூர்". "நிலநடுக்கம் வந்த லத்தூரா?". "அதே. நிலநடுக்கத்தால்  பத்தாயிரம் பேர் மாண்டு போன ஊர்".

"நீங்கள் எந்த ஊர்". அருகில் தான் என்றேன். "என்ன செய்கிறீர்கள்?". "எம்.எல்.ஏவாக இருக்கிறேன்". என்னை மேலும் கீழும் பார்த்தனர். கண்களில் அவ்வளவு சந்தேகம். அடையாள அட்டையை எடுத்துக் காட்டினேன். கொஞ்சம் நம்பிக்கை பெற்றார்கள். மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் என்னை சூழ்ந்துக் கொண்டனர் இப்போது.

"விலாஸ்ராவ் தேஷ்முக் எங்கள் பக்கத்து ஊர்" என்றனர். மறைந்த தேஷ்முக் , மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய இடம் வகித்தவர். முதல்வர், மத்திய அமைச்சர் என பொறுப்பு வகித்தவர். அய்ந்து முறை சட்டமன்ற உறுப்பினர். "மகிழ்ச்சி" என்றேன். "அவர் எங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். ஆனால் ஒரு நாளும் இது போல் அருகில் பார்த்தது கிடையாது" என்றனர்.

"தமிழகத்தில் அப்படி கிடையாது. எம்.எல்.ஏக்களை எளிதாக பார்க்கலாம்" என்றேன். "தேஷ்முக்  மும்பையில் இருந்து வீட்டுக்கு வருவார். மும்பை செல்வார். அவ்வளவு தான். கிராமங்களுக்கு வர மாட்டார். இப்படி எல்லாம் ரோட்டோரமாக பார்க்க முடியாது"என்றனர். "அவர் பெரிய தலைவர், முதல்வராக இருந்தவர். பணி நெருக்கடி அப்படி இருந்திருக்கும்" என்று விளக்கம் அளித்தேன்.

"உங்களோடு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும், ஊரில் காட்டுவதற்கு" என்றனர். எல்லோரும் நிற்க குரூப் போட்டோ. அப்போது ஒருவர் சொன்னார், "எங்கள் தரிசனப் பயணத்தில் இது முக்கிய தரிசனம்".

என் எண்ணை வாங்கிக் கொண்டனர். ஸ்மார்ட்டாக இருந்த நபர் பெயர் சச்சின் பாட்டீல். அவர் எண்ணைக் கொடுத்தனர். மகராஷ்டிரா அழைத்துள்ளனர். அடுத்த முறை தமிழகம் வரும்போது  அழைக்க சொல்லியுள்ளேன், கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை பார்ப்பதற்கு. பிரிய மனம் இல்லாமல் நகர்ந்தனர்.

# புதிய உறவுகள், புதிய நட்புக்கள் மொழி கடந்து !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக