சட்டப்பேரவை கூட்டத் தொடர் துவங்கிய நாள் : 24.08.2015.
24.08.2015: மங்கல இசை முழங்கி, ஜெயலலிதாவிற்கு வாழ்த்துப்பா பாடி விட்டு, மறைந்த முன்னாள் குடியரசு தலைவருக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது.
25.08.2015: விதி 110ல் மக்கள் நல்வாழ்வுத்துறையில் சில அறிவிப்புகளை வெளியிடுகிறார் ஜெ. 30 நிமிடம் சபையில் இருந்து விட்டு போயஸ் கார்டன் கிளம்பி விட்டார்.
26.08.2015: செய்தித்துறையில் ஒரு அறிவிப்பு 110 விதியின் கீழ். 30 நிமிடமே சபையில்.
27.08.2015: ஆதிதிராவிடர் நலத்துறையில் அறிவிப்புகள். 110 விதி. 30 நிமிடம்.
28,29,30 - சபை விடுமுறை.
31.08.2015: 110 விதியில் வருவாய் துறையில் அறிவிப்பு. 30 நிமிட சபை பங்கேற்பு.
45 நாட்கள் நடக்க வேண்டியக் கூட்டத் தொடரை, 19 நாட்கள் மட்டுமே நடத்த நாள் குறித்ததே தவறு.
ஒரே நாளில் இரண்டு துறைகள், மூன்று துறைகள் மீது விவாதம் நடத்தி, அதற்கு அமைச்சர்களையும் பதிலளிக்க வைப்பது அவலம். விவாதிக்க போதுமான நேரமுமில்லை. விவாதிக்கவும் விடாமல், எதிர்கட்சிகளை முடக்குவது.
இதை விடக் கொடுமை, ஒரு துறை மீதான மானியக் கோரிக்கை நடப்பதற்கு முன்பாகவே, அந்தத் துறையில் முதலமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். அவர் திட்டங்களை முன்பாகவே அறிவித்த பிறகு, அந்தத் துறை மீதான மானியத்தில் விவாதிப்பதால் என்ன பலன் என்ற சோர்வு சட்டமன்ற உறுப்பினர்களிடத்தில் ஏற்பட்டு விடுகிறது.
இதைவிட சட்டமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்கள், ஆலோசனைகள் தேவையில்லை, அவர்களுடைய விவாதங்கள் தேவையற்றவை என சொல்லாமல் சொல்வது போலவே தோன்றுகிறது.
துறை அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்ட பிறகு, அந்தத் துறை அமைச்சருக்கு என்ன வேலை, முதலமைச்சருக்கு நன்றி சொல்வதும், அறிவிப்பு வெளியிடும் போது மேசையை தட்டுவது மாத்திரமே.
சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதிப்பதிலும் பயனில்லை, அமைச்சருக்கும் வேலை இல்லை என்றான பிறகு சட்டமன்றம் நடப்பதில் என்ன அர்த்தம். மக்கள் பிரச்சினைகளை எடுத்துரைக்கவும் எதிர்கட்சிகளை அனுமதிப்பதில்லை.
முதலமைச்சர் ஜெயலலிதா கார் தலைமைச் செயலகத்தில் நுழையும் போது நேரம் 10.55. சட்டசபைக்குள் 11.00 மணிக்கு வந்தமர்ந்து 110 விதியின் கீழ் அறிக்கை வெளியிடுவது. அதில் எதிர்கட்சிகள் கருத்து தெரிவிக்க முடியாது. ஜால்ரா தட்ட மட்டுமே அனுமதி.
11.30க்கு அவையில் இருந்து நேரே காருக்கு சென்று ஏறினால் போயஸ் கார்டன் தான். இது தான் தினப்படி நிகழ்ச்சி நிரல்.
30 நிமிடமே சட்டப்பேரவையில் முதல்வரால் இருக்க இயல்கிறது என்றால், சட்டசபையை எதற்காக காலை 10.00 மணியில் இருந்து மாலை 4.00 மணி வரை நடத்த வேண்டும்?
தினம் 30 நிமிட அறிவிப்புகளை வெளியிட்டு விட்டு சபையை முடித்து விடலாமே?
இல்லை என்றால் அதையும் காணொளிக் காட்சி மூலம் முடித்து விடலாமே?
# சட்டப்பேரவை ஜனநாயகத்திற்கு வந்த கேடு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக