பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

சந்திக்காமலே இருந்திருக்கலாம்

மகேந்திரனோடு ஏன் பழகினோம் என்று இருக்கிறது. எனக்கு தேர்தல் பணியாற்றியவர் தான், ஆனால் அது எனக்கு அப்போது தெரியாது. அவர் சகோதரர் தான் அவர்கள் ஊர் கிளை செயலாளர். அதுவும் தெரியாது.

தேர்தலுக்கு பின்னர் முகநூலில் தீவிரமாக இருந்த நேரம் அது , அப்போது தான்  அவர் என் கவனத்தைக் கவர்ந்தார். அவர் தான் மகேந்திரன். ஒரு நாள் நான் பெரம்பலூரில் இருந்து அரியலூர் சென்றுக் கொண்டிருந்தேன்.

அப்போது நாங்கள் பயணம் செய்த காரை ஒரு பைக் பின் தொடர்ந்தது. தெரிந்த முகமாக இருந்தது. முகநூலில் பார்த்த முகம். நிறுத்திப் பேசினேன். மகேந்திரன். முதல் சந்திப்பே, பல நாட்கள் பழகிய சகோதர உணர்வோடு.

அன்றிலிருந்து மகேந்திரன் உடன் பிறந்த சகோதரர். அவர் குடும்பத்தில் நான் ஒருவன். மகேந்திரன் அண்ணன் செந்திலின்  குழந்தைகள் காதணி விழா நடந்தது. தாமதமாகத் தான் செல்ல நேரிட்டது. ஆனால் காத்திருந்தனர்.

செந்தில், மகேந்திரன் குடும்பத்தினர் அன்போடு வரவேற்றனர். அப்போது தான் நிஷாந்தை பார்த்தேன். மகேந்திரனின் மகன்.

மாலை கதிர் அனுப்பிய மெசேஜில் தான் நிஷாந்திற்கு உடல் நலம் சரி இல்லை என்று தெரிய வந்தது. உடன் மகேந்திரனுக்கு பேசினேன். "ஆமாம்ணா உடல்நலம் சரியில்லை. சற்று சீரியஸ். சளி பிடித்தது. திருச்சி கே.எம்.சி வந்தோம். லங்ஸ் இன்பெக்‌ஷன் என்கிறார்கள்" என்றார்.

"இரண்டு நாட்களாக அய்.சி.யூ தான். ஒரு கையில் என் விரலையும் இன்னொரு கையில் அவன் அம்மா விரலையும் பிடித்துக் கொண்டு எங்களை விடவில்லை. உடன் இருந்தோம். மூச்சு விட முடியவில்லை அவனால். இரவில் இருந்து வெண்டிலேட்டரில் இருக்கிறான்."

"பார்க்க மனம் தாங்கவில்லை. ஒரு ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்கிறார்கள். ரிஸ்கானது தான். வேறு வழி இல்லை, சரி என்று சொல்லி விட்டேன்" என்றார்.

"ஆப்பரேஷனுக்கு பிறகு பேசுகிறேன்"என்றேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் கதிர் இடமிருந்து மீண்டும் அழைப்பு. அவருக்கு  பேச்சு இயல்பாக வரவில்லை. நெருடியது. ஆம், அதே செய்தி தான்.

கடந்த 18ம் தேதி அய்ந்தாம் பிறந்தநாள் கொண்டாடிய நிஷாந்த் அவசரமாக விடை பெற்று விட்டான்.

மகேந்திரனுக்கு என்ன ஆறுதல் சொல்வது. இதற்கு நான் மகேந்திரனை சந்திக்காமல் இருந்திருக்கலாம், பழகாமல் இருந்திருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக