சட்டமன்ற விமர்சனம்
31.08.2015.
110 விதி. வருவாய் துறை மற்றும் தொழில் துறை அமைச்சர்கள் அறிவிக்க வேண்டிய திட்டங்களை முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்தார். அவையில் 30 நிமிடங்கள் தான் இருந்தார் ஜெயலலிதா. 11.30க்கு கிளம்பி விட்டார்.
ஒரு வார போராடத்திற்கு பிறகு இன்று ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்துக் கொண்டார் சபாநாயகர். ஆனால் கவனமாக முக்கியப் பிரச்சினைகளை தவிர்த்து விட்டார். "மீன் பாசி குத்தகை" பிரச்சினையை எடுத்துக் கொண்டார். அதிலும் ஓர் உள்குத்து அரசியல். திமுகவுக்கு பெயர் கிடைத்து விடாமல், கம்யூனிஸ்ட்கள் மாத்திரம் கொடுத்த கவன ஈர்ப்பாக தேடி எடுத்திருந்தார்.
மானியக் கோரிக்கை மீது திமுக உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன் பேசும் போது, "கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடும் பேருந்துகள் சரியாக இல்லை. சீராக பராமரிக்கப் படவில்லை. பிரேக் பிடிப்பதில்லை" என்றார். உடனே அமைச்சர் தங்கமணி," உறுப்பினர் எப்போது ஆர்.டி.ஓ ஆனார்? பிரேக் பிடிக்காதது இவருக்கு தெரியுமா ?" என்று திசை திருப்பி சமாளித்தார்.
"கன்னியாகுமரி மாவட்டத்தில் போராட்டம் செய்யும் போது மரணமடைந்த காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக் குறித்து நீதி விசாரணை வேண்டும்" என்று புஷ்பலீலா ஆல்பன் சொன்ன உடன் அவசரமாக இடைமறித்த சபாநாயகர்,"அதை அடுத்த மானியக் கோரிக்கையில் பேசலாம்" என சொல்லி அவரை அமர வைத்து விட்டார்.
காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி, மாற்றுத்திறனாளிகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வழங்க வேண்டிய உபகரணங்கள் வழங்கவில்லை என்பது குறித்து பேச வாய்ப்பு கேட்டு தொடர்ந்து போராடினார். ஆனால் சபாநாயகர் வாய்ப்பு வழங்க மறுக்க போராட்டம் தொடர்ந்தது. அப்போது எழுந்த அமைச்சர் வளர்மதி, "இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பேசி இருக்க வேண்டும். ஆனால் விஜயதரணிக்கு டிவிக்கு பேட்டி கொடுக்கத் தான் நேரம் இருக்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பேச நேரம் இல்லை" என்று எகிற, விஜயதரணி மறுக்க ஒரே கூச்சல்.
முன்னாள் அமைச்சர் பெரிய.கருப்பன் பேச வாய்ப்பு கேட்டார். சபாநாயகர் அனுமதித்தார். மைக்கை இயக்க, அது வேலை செய்யவில்லை. மீண்டும், மீண்டும் பட்டனை அழுத்த சில நொடிகள் கழித்து வேலை செய்தது. "இதெல்லாம் மறந்தே போச்சு, உங்களாலே" என அவர் கமெண்ட் அடிக்க அவையில் சிரிப்பலை.
01.09.2015.
தனது தொகுதிக்கு விளையாட்டு அரங்கம் கேட்டு பேசிய திருவிடைமருதூர் தொகுதி கோவி.செழியன்(திமுக), திரு என்று துவங்கும் தொகுதிகளை பட்டியலிட, சபாநாயகர் தடுத்தார். ஆனால் அவர் பட்டியல் முழுதும் சொல்லியே முடித்தார்.
காட்டுமன்னார் கோவில் முருகுமாறன்(அதிமுக), "தமிழின் உயிரெழுத்து 12. தமிழினத்தின் உயிரெழுத்து 3. அது அ.ம்.மா" என மூன்றெழுத்துகளையும் தனித்தனியாக உச்சரித்து உருக, அதை கண்டு சபாநாயகர் பரவசமாக, காணக் கண் கொள்ளாக் காட்சி.
இன்றும் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக் கொண்டார். அதுவும் கம்யூனிஸ்ட்கள் மாத்திரமே கொடுத்தத் தீர்மானம். "தாமிரபரணி, பவானி, காவிரி ஆறுகளில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டிய அவசியம் குறித்து".
இன்று கம்யூனிஸ்ட்கள் முக்கியத்துவத்தைக் குறைத்து, தேமுதிக அதிருப்தி உறுப்பினர் மைக்கேல் ராயப்பனை பேச அழைத்தார். அவரோ சப்ஜெக்டை விட்டுவிட்டு அம்மா புகழ் பாடினார். தங்களுக்கு முதல் வாய்ப்பை எதிர்பார்த்த கம்யூனிஸ்ட்கள், இதை கண்டு தடுமாறிப் போனார்கள். அடுத்து பேசிய மார்க்சிஸ்ட் உறுப்பினர் தங்கவேல் புள்ளி விபரங்களை அடுக்கி அரசின் அலட்சியம் குறித்து விளக்கமாகப் பேசினார் .
பதில் சொல்ல எழுந்த அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், மாசுப்படுவதை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை சொல்வதை விட, கடந்த திமுக ஆட்சி குறித்து பேசுவதிலேயே குறியாக இருந்தார். அதிலும் பத்துக்கு மேற்ப்பட்ட முறை 'மைனாரிட்டி' திமுக அரசு என்று சொல்லி திமுக உறுப்பினர்களிடம் வம்பு இழுப்பதையே நோக்கமாக கொண்டது போல் பேசினார்.
திருப்பூருக்கு மாசுகட்டுப்படுத்துவதற்காக 200 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக சொன்னார். ஆனால் மூன்றாண்டுகளாக 94 கோடி மட்டுமே வழங்கி இருப்பதை சொல்லாமல் மறைத்தார். அது குறித்து குரல் எழ, உடனே திசைதிருப்பும் வழியை கண்டுபிடித்தார். மீண்டும் திமுக பக்கம் திரும்பினார். "கடந்த திமுக ஆட்சியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், காசுக்கு கட்டுப்பட்ட வாரியமாக இருந்தது" என்றார் தோப்பு.
அதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின்," அப்படி தவறு நடந்திருந்தால் அமைச்சர் நிரூபிக்க தயாரா, இல்லாவிட்டால் அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். சவாலுக்கு அமைச்சர் தயாரா?" எனக் கேட்க, அமைச்சரோ பதில் சொல்லாமல் நழுவினார். ஓ.பி.எஸ் அவையில் இருந்து வெளியேறினார். வழக்கமாக இது போன்ற நேரங்களில் வம்புக்கு வரும் மற்ற அதிமுக அமைச்சர்கள் , இதில் தோப்பு வெங்கடாசலத்திற்கு ஆதரவாக பேச முன்வரவில்லை. திமுக உறுப்பினர்கள் அமைச்சர் பதிலளிக்க வலியுறுத்தினோம். ஆனால் சபாநாயகர் அதற்கு பதில் சொல்லாமல், அடுத்த சப்ஜெக்ட்டுக்கு தாவினார்.
"கோகோ கோலா வெங்கடாசலம்" என்று கோஷம் எழுந்தது. (இதே வெங்கடாசலம் "கோகோ கோலா" நிறுவனத்திற்கு பெருந்துறையில் இடம் வாங்க உதவிய நல்லவர் என்ற பெயர் உண்டு. அதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியதும் வரலாறு). சபாநாயகர் பதிலளிக்கவில்லை. அதை கண்டித்து வெளிநடப்பு செய்து, நிருபர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்து விட்டு , சபைக்கு திரும்பினோம்.
பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி துறை மானியத்தில் உரையாற்றிய திமுக உறுப்பினர் திராவிடமணி "+1 படிக்கிற மாணவர்களுக்கு +2 பாடம் நடத்தப்படுகிறது" என்று பேசினார். உடனே இடைமறித்த பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி, "உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா?" எனக் கேட்க,"நாமக்கல் பள்ளிகளில் அதுதானே நடக்கிறது" என உறுப்பினர்கள் இடமிருந்து குரல். ஆனால் அமைச்சர் கண்டு கொள்ளவில்லை.
12.26க்கு முதல்வர் வந்தார். 12.32க்கு 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். 12.52க்கு முடித்தார். 12.53க்கு கிளம்பி விட்டார். இன்று கைத்தறி துறை.
அதிமுக சேர்ந்த வைகைச்செல்வன் மானியத்தை ஒதுக்கி விட்டு, அம்மா பாட்டு பாடினார். "அம்மா தேனீ, ஜான்சி ராணி" என கவிதை மழை பொழிந்தார். அத்தோடு இல்லாமல், எதிர்கட்சிகள் மீது அமில மழை வீசினார்.
02.09.2015.
கேள்வி நேரம் முடிந்ததும் கவன ஈர்ப்பு தீர்மானம். "சென்னை உட்பட தமிழகத்தின் சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து". இன்று தான் திமுக கொடுத்த தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
திமுக சார்பில் ஜெ.அன்பழகன் பேசினார்,"லாரியில் தண்ணீர் வழங்குவதை அரசே ஒப்புக் கொள்கிறது. அதனை அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும்". இந்தத் தீர்மானத்தில் பேசிய மார்க்சிஸ்ட் பாலபாரதி, " அரசுக்கு நன்றி" என்று பேச ஆரம்பித்தார். அமைச்சர்கள் முகத்தில் சந்தோஷம், திமுக உறுப்பினர்கள் சிலரிடமிருந்து கிண்டலான குரல். ஆனால் அவர் நிதானமாக குற்றச்சாட்டுகளாக அடுக்கினார். இறுதியாக முதல்நாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் சொன்ன வார்த்தைகளை அப்படியே சொன்னார்,"மாசு கட்டுப்பாட்டு வாரியம், காசுக்கு கட்டுப்பட்ட வாரியமாக இருக்கிறது".
அவ்வளவு தான் சபாநாயகர் பொங்கி எழுந்தார். அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கினார். முதல் நாள் அமைச்சர் பேசிய அதே வார்த்தைகள் தவறில்லை என்று சொன்னவர், இன்று மாற்றி தீர்ப்பளித்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். பிறகு சபாநாயகரை கண்டித்து வெளிநடப்பு செய்தோம். "சபாநாயகர் தொடர்ந்து ஒரு தலைப்பட்சமாக நடந்து வருகிறார். ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே நடக்கிறார். இதனை கண்டிக்கிறோம்" என மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அவைக்கு திரும்பினோம்.
இந்தியா தழுவிய தொழிற்சங்க போராட்டம் குறித்து விவாதிக்க திமுக, மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யுனிஸ்ட், காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், பா.ம.க ஆகிய அனைத்துக் கட்சிகளும் கோரின. ஆனால் சபாநாயகர் மறுத்து விட்டார். கம்யுனிஸ்ட்கள் போராட்டத்திற்கு ஆதரவான வாசகங்கள் எழுதிய துண்டறிக்கையை காட்டினர். அவர்களை சபாநாயகர் கடுமையாக எச்சரித்தார். திமுகவை தவிர மற்ற எதிர்கட்சிகள் இந்தப் பிரச்சினைக்காக வெளிநடப்பு செய்தனர். அப்படியே தலைமை செயலகத்திற்கு எதிரே மறியலில் ஈடுபட்டனர்.
இன்று 110 இல்லை, அதாவது முதல்வர் ஜெயலலிதா வரவில்லை.
உள்ளே நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கையில் திமுக சார்பாக ஏ.வ.வேலு பேசினார். பொதுப்பணித் துறையில் இருந்து நெடுஞ்சாலைத் துறையை தனியாக பிரித்து, தனி அமைச்சகம் உண்டாக்கியவரே கலைஞர் தான் எனத் துவங்கி, திமுக ஆட்சிக் காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை அடுக்கினார்.
சென்னையில் கட்டப்பட்ட பாலங்களை பற்றி பேசும்போது குறுக்கிட்ட துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியிலும் பாலங்கள் கட்டப்பட்டது என்றார். "சென்னையில் எந்தப் பாலம் கட்டினீர்கள்" என ஏ.வ.வேலு மீண்டும் கிடுக்கிப்பிடி போட அமைச்சர் பதிலளிக்காமல் தவிர்த்தார். 40 நிமிடங்கள் விவாதம் நீடித்தது.
03.09.2015.
கேள்வி நேரம் முடிந்ததும் 11.16க்கு முதல்வர் ஜெயலலிதா வந்தார். கிராமசாலைகள் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்குவதாக 110ல் அறிக்கை வாசித்தார். சென்று விட்டார்.
கவன ஈர்ப்பு தீர்மானத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையை தூர் வாரும் அவசியம் குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசினர்.
எதிர்கட்சி தலைவர்கள் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஜீரோ அவரில் பேச வாய்ப்பு கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை அமர சொல்லி சபாநாயகர் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது துரைமுருகன் படக்கென எழுந்து நின்றார். அவரை பார்த்து சபாநாயகர்,"என்ன துரைமுருகன் சொல்லுங்க" என்றார் சீரியஸாக. உடனே துரைமுருகன் தனது பாணியில் சிரித்து, "நான் வெளியில் போகிறேன்" என்றார். சிரிக்காத சபாநாயகரே சிரித்துவிட, மொத்த அவையும் குலுங்கியது.
உணவு மற்றும் கூட்டுறவு துறை மானியத்தின் மீது பேசிய லால்குடி சவுந்திரபாண்டியன் (திமுக),நெல் கொள்முதலில் தேக்கம், விலைவாசி ஏற்றம், விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து பேச, அவரை பேச விடாமல் அமைச்சர்கள் குறுக்கிட்டுக் கொண்டே இருந்தனர்.
உணவு அமைச்சர் காமராஜ் கொஞ்சம் மேல் நோக்கிப் பார்த்து பேசுவார், சிலை மாதிரி நிற்பார் அசைவில்லாமல். ஆனால் கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜு பேசுவதை பார்ப்பது அலாதியான அனுபவம். சமயங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே மிஞ்சி விடுவார். கை, கால், முகம் எல்லாம் பேசும் அவருக்கு. ஜெ-வை புகழ்வதென்றால் அப்படியே பணிவு சொட்டும், உருகுவார். எதிர்கட்சிகளை பேசுவதென்றால் அவ்வளவு எகத்தாளம், நக்க
ல், நையாண்டி கரை புரண்டு ஓடும் அவர் பேச்சில். அன்று சற்று கூடுதல். மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ விக்கிரவாண்டி ராமமூர்த்தி,"அபிநய சுந்தரன்" என்ற பட்டத்தை செல்லூர் ராஜுக்கு கொடுக்கலாம் என்று சொல்லும் அளவிற்கு போனது செல்லூர் பெர்ஃபார்மன்ஸ்.
மார்க்சிஸ்ட் சார்பில் பேசிய டில்லிபாபு லாகவமாக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டினார். அப்போது ,"துவரம்பருப்பு விலை ஏறிவிட்டது. ரேஷன் கடைக்கு சென்று நானே பொருள் வாங்கினேன். மண்ணெண்ணெய் அளவுப்படி கிடைக்கவில்லை" என்றார். உடனே அமைச்சர் எழுந்து, ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது என்றார். சட்டமன்ற உறுப்பினரின் நேரடி அனுபவத்தையே இப்படி மறுத்தால் எப்படி பேச முடியும் என்ற முணுமுணுப்பு எழுந்தது.
இன்று எதிர்கட்சிகள் யாரும் வெளி நடப்பு செய்யவில்லை.
04.09.2015.
சபைக்கு சென்று கொண்டிருந்த எனக்கு அலைபேசி அழைப்பு வந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு முழுதும் ஒரு மணி நேரம் மின்சாரம் விட்டு, ஒரு மணி நேரம் கட் செய்தார்கள். பகலில் மூன்று மணி நேர இடைவெளி எனத் தகவல் வந்தது.
அவை உள் நுழைந்தேன். ஆண்டிப்பட்டி தங்க.தமிழ்செல்வன் (அதிமுக) பேசிக் கொண்டிருந்தார். "கரண்ட் கட் இல்லாமல் முழு நேரமும் இருக்கிறது" என முழங்கிக் கொண்டிருந்தார். (என்னம்மா இப்படி பேசறீங்களேம்மா?)
கும்பகோணம் அன்பழகன்(திமுக) தனது தொகுதிக்கு நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு கிட்டங்கி கேட்டவர், விவசாய அமைச்சர் வைத்திலிங்கத்தை பார்த்து,"மண்ணின் மைந்தரே விவசாய அமைச்சராக இருக்கிறீர்கள். இதற்கு ஆவன செய்ய வேண்டும்" எனக் கேட்க, அமைச்சருக்கு என்ன சொல்வதென ஒரு நிமிடம் புரியவில்லை. சமாளித்து,"புரட்சித் தலைவி அம்மா கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்"என்றார்.
"தமிழ்நாட்டிலிருந்து கேரள மாநிலத்திற்கு காய்கறிகள் தடையின்றி செல்ல வேண்டிய அவசியம் குறித்து" கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது. சி.பி.எம் சார்பாக நாகை மாலி மற்றும் சிபிஐ ஆறுமுகம் பேசினார்கள். பதிலளித்த அமைச்சர் வைத்திலிங்கம்,"காய்கறிகள் கேரளாவிற்கு செல்கிறது. நாட்டில் எந்தப் பதற்றமும் இல்லை. நீங்கள் தான் பதற்றமாக இருக்கிறீர்கள்" என்றார் கம்யுனிஸ்ட் உறுப்பினர்களை பார்த்து.
இன்று தொழில்துறை மற்றும் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை. தேமுதிக அதிருப்தி உறுப்பினர் மாபா பாண்டியராஜனை முதலில் பேச அழைத்தனர் முதல்முறையாக. அவர் தொழிலதிபர் என்பதால் சப்ஜெக்டில் புள்ளிவிபரங்களோடு அழுத்தமாக பேசுவார் என எதிர்பார்த்தார்கள்.
ஆனால் அவரோ மற்றவர்கள் போல அம்மா புராணம் பாடுவதிலேயே இருந்தார். நிர்வாக இயல் அறிஞர் சி.கே.பிரகலாத்தின் "GIVE" என்பதற்கான நிர்வாகவியல் விளக்கத்தை சொல்லி, give என்றால் கொடுப்பது, கொடுப்பது என்றால் ஈகை, ஈகை என்றால் அம்மா என சுற்றி வளைத்து அம்மா வாழ்த்து பாடினார். மோடி மாடல், குஜராத் மாடல் போல அம்மா மாடல் என்று ஏதோ விளக்கம் கொடுக்க, அதிமுகவினரே விநோதமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
அடுத்து டைட்டான் கடிகார நிறுவனத்தில் இருக்கும் தமிழக அரசின் ஷேரை விற்றால் ரூபாய் 5,800 கோடி கிடைக்கும். அதில் 1000 கோடியை கொண்டு 'அம்மா நிதியம்' துவங்கலாம் என அரசுக்கு ஆலோசனை வழங்க ஆரம்பித்தார். அப்போது எழுந்த முன்னாள் அமைச்சர் தங்கம்.தென்னரசு பாயிண்ட் ஆப் கிளாரிபிகேஷனாக ,"உறுப்பினர் disinvestment குறித்து பேசுகிறார். அது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?" எனக் கேட்டார். பதிலளித்த அமைச்சர் தங்கமணி,"அரசு டிஸ் இன்வெஸ்ட்மெண்ட் செய்யாது. அரசின் கொள்கை அது தான்" என விளக்கமளிக்க மாஃபா தடுமாறினார். புள்ளிவிபரப் புலி என்று மாஃபாவுக்கு சபையில் ஒரு இமேஜ் உண்டு. அது கொஞ்சம் டேமேஜ் ஆகியது.
அடுத்து பேசிய தஞ்சாவூர் ரெங்கசாமி (அதிமுக) சபையை மிரள செய்தார். "சீனாவின் அதிசயம் 6, ஜப்பானின் அதிசயம் 8, உலக அதிசயம் 9, தமிழகத்தின் அதிசயம் 110" என அறிவித்தார் ரெங்கசாமி.
அடுத்து வேப்பனஹள்ளி செங்குட்டுவன்(திமுக). "குரோம்பேட்டை மற்றும் பல்லவன் சாலை பஸ் டெப்போக்களில் ஒன்றரை ஆண்டுகளாக 500 புதிய பேருந்துகள் தயார் நிலையில் நிற்கின்றன. அவை இயக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன? இப்படி நின்றால் கேரண்டி காலம் முடிந்து விடும்." செங்குட்டுவனின் கிடுக்கிப் பிடியில் தங்கமணி பதில் சொல்ல திணறினார். "சிறுசிறு வேலைகள் இருப்பதால் நிற்கிறது. அவ்வளவு நாட்கள் நிற்கவில்லை" என்று சமாளித்தார்.
டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த ஒரு செய்தி குறித்து செங்குட்டுவன் பேச, சபாநாயகர் அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கினார். ",பத்திரிக்கையில் வருவதை பேசக் கூடாதுன்னா, அப்புறம் எதற்கு அவையில் பத்திரிக்கையாளர்களை அனுமதிக்கிறீங்க. அனுப்பிடுங்க" என கம்பம் இராமகிருஷ்ணன் குரல் கொடுக்க சபாநாயகர் அந்தப் பக்கம் திரும்பவில்லை.
அடுத்து மார்க்சிஸ்ட் தலைவர் சௌந்தர்ராஜன். விறுவிறுவென பாயிண்ட், பாயிண்ட்களாக பிரச்சினைகளை அடுக்க ஆரம்பித்தார். போக்குவரத்து துறை குறித்து பேசியவரை இடைமறித்த அமைச்சர்,"அம்மா அளித்த நிதியால் போக்குவரத்துத் துறை சிறப்பாக செயல்படுகிறது" என சொன்னார்.
அதற்கு,"ஊழியர்களின் கடின உழைப்பால் போக்குவரத்துத் துறையின் செயல்திறன் காப்பாற்றப்படுகிறது" என சௌந்தர்ராஜன் பதிலளிக்க, அமைச்சர் எதுவும் சொல்லவில்லை.
"350 பஸ்கள் மூன்று மாதங்களாக டெப்போவில் நிற்கின்றன" என்றக் குற்றச்சாட்டை சௌந்தர்ராஜன் சொல்ல, பதில் சொல்ல முடியாமல் சமாளித்தார் போக்குவரத்துத் துறை அமைச்சர் தங்கமணி.
செந்தில்பாலாஜி இடமிருந்து தங்கமணி வசம் கைமாறிய "பஸ்" கண்ட்ரோல். இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு இவர்கள் மட்டும் பொறுப்பல்ல, அவர்கள் மேனேஜர் ஜெயலலிதாவும் தான். மொத்த அரசாங்கமும் அப்படித் தான், சட்டமன்றமும் அப்படித் தான்.
# "நோ பிரேக், நோ கண்ட்ரோல்".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக