பிரபலமான இடுகைகள்

சனி, 2 ஜனவரி, 2016

பிறந்தது புத்தாண்டு

மற்றுமொரு ஆண்டு பிறந்திருக்கிறது. மற்றுமொரு நாள் துவங்கி இருக்கிறது. மற்றுமொரு பொழுது புலர இருக்கிறது. மற்றுமொரு நம்பிக்கை காலம் துவங்கும் என நம்புகிறோம். மற்றுமொரு புதிய விடியலுக்காக காத்திருக்கிறோம்.

இது ஒவ்வொரு ஆண்டும் நடப்பது தான். ஆனால் புதிய மாற்றத்தை எதிர்பார்த்து பயணிப்பதே வாழ்க்கை. அது தானே வாழ்க்கை. அதில் தான் அடங்கி இருக்கிறது வாழ்க்கை வண்டியின் எரிபொருள். அது தான் முன்னே செலுத்துகிறது.

சிலர் வெற்றியை குறி வைத்து ஓடுவார்கள். அது தட்டித்தட்டி போகலாம். ஆனால் கைக்கு சிக்காத வண்ணத்துப்பூச்சியை சிறு வயதில் துரத்தி, துரத்தி நாம் தயாராகித் தான் இருக்கிறோம். அப்படித் தான் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

சிலருக்கு தோல்வியே சுகம். சும்மா இருந்து விட்டு, எதுவும் நடக்கவில்லை, எதுவும் நடக்காது என சொல்லிக் கொண்டு தோல்வியை சுவைப்பவர்கள் அவர்கள். அதையே சிலுவையாய் சுமப்பதாய் காட்டிக் கொண்டு தங்களை ஏசுவாய் வரித்துக் கொள்வார்கள்.

சிலருக்கு எல்லாம் விதி தான். நடப்பது அத்தனையும் விதி என்று கூறி, விதி விட்ட வழியில் செல்வதாக சொல்லிக் கொள்வார்கள். விதியின் பிள்ளைகள், நதியின் ஓட்டத்தில் அடித்து செல்லப் படுவார்கள்.

சிலரே புது முயற்சிகளில் துணிந்து இறங்குபவர்கள். நதியின் ஓட்டத்தில் செல்லாமல், எதிர் நீச்சல் போட வேண்டும் என்பதில்லை, நதியின் ஓட்டத்தில் சென்றாலும் நினைத்த இடத்தில் கரை ஏறும் துணிச்சல் வேண்டும்.

வெற்றிப் பட்டாம்பூச்சியை துரத்தாமல் இருக்க முடியாது தான், ஆனால் அதிலேயே மூச்சு வாங்கி அடுத்த ஆட்டத்தில் இல்லாமல் போய் விடக்கூடாது. வெற்றி மட்டுமே வாழ்க்கை அல்ல, சில தோல்விகளும் வாழ்க்கைக்கு தேவை, பாடமாக.

தோல்வி சிலுவை தான் சுமக்கவே கூடாத ஒன்று. மொத்த வாழ்க்கையையும் ஆணி அடித்து தொங்க விட்டுவிடும். சிலுவையில் இருந்து இறக்க யாரும் வர மாட்டார்கள். நாமே இறங்கவும் முடியாது.

வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்ந்தால் அதுவே வாழ்வின் நிறைவு. அதுவே வாழ்வின் வெற்றி. பொருளாதார தேடலோடு, இசை, எழுத்து, புத்தகம், விளையாட்டு, நண்பர்கள் என சேர்த்து தேடினால் வாழ்க்கை ருசிக்கும். அதுவே வாழ்வை உயிர்ப்பாய் வைத்திருக்கும்.

புதிய விடியலும், நம்பிக்கையும் நம் கையில் இருக்கிறது. நம் உழைப்பில் தான் இருக்கிறது. உழைப்பை நம்பினால் ஒவ்வொரு ஆண்டும் புதிய விடியலே.

# உழைப்போம், உயிர்ப்பாய் இருப்போம், வாழ்வோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக