பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

பொங்கலோ பொங்கல்

பொங்கல் திருநாள் குடும்பத்தோடு இருக்கக் கூடிய நாள். அன்றும் காலை 9.00 மணிக்கு வெளியில் கிளம்பினேன். ஆனால் வீட்டில் யாரும் கோபிக்கவில்லை. காரணம், சென்ற நிகழ்ச்சி அப்படி.

கைபெரம்பலூர் கிராமத்தில் நூலகத்திற்கான புதியக் கட்டிடம் திறப்பு விழா. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கட்டப்பட்டது. வழக்கமாக இது போன்ற நிகழ்ச்சிகள்  அரசு விழாவாகவோ அல்லது கட்சி விழா போலவோ நடக்கும்.

ஆனால் இந்த விழா கைப்பெரம்பலூர் ஊர் கூடி நடத்திய விழாவாக அமைந்தது. காரணம், அந்த நூலகத்தை பெறுவதற்கு அவர்கள் பட்ட அவஸ்தை, பிறகு கட்டிடத்தை பெற எடுத்த முயற்சிகள்.  இதனை நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற ஆசிரியர் மருதமுத்து விளக்கினார்.

கைப்பெரம்பலூர் கிராமம், கிழுமத்தூர் ஊராட்சியை சேர்ந்தது. ஒரு உள்ளடங்கிய கிராமம்.  ஆரம்பத்தில் இங்கு நூலகம் அமைக்க ஊர் பெரியவர்கள் கோரிக்கை வைத்த போது, மக்கள்தொகை குறைவு என்ற காரணத்தால் மறுக்கப்பட்டிருக்கிறது.

பிறகு அந்த ஊராட்சிக்கு ஒரு ஊர்புற பகுதி நேர நூலகம் ஒதுக்கப்பட்ட போது, இந்த ஊரின் கோரிக்கை கணக்கில் கொள்ளப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கே 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதற்கு தேவையான நிதியை ஊர்காரர்கள் வாரி வழங்கி இருக்கிறார்கள்.

பிறகு கட்டிடத்திற்கான முயற்சி. வேறு அரசு துறைகள் மூலம் முடியாமல், சட்டமன்ற உறுப்பினர் நிதிக்காக என்னை அந்த ஊர் கிளை செயலாளர் பரமசிவம் மூலம் அணுகினர். நான் குடிநீர் மற்றும் பள்ளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிதி வழங்குவது வழக்கம். இதுவும் கல்வி சார்ந்தது என்பதால், ஒதுக்க நினைத்தாலும், தொகை காரணமாக அந்த ஆண்டு தாமதமானது.

ஊரை சேர்ந்த இளைஞர்கள் உதவி பேராசிரியர் அப்பூதியடிகள், இளையராஜா, ராதா உட்பட 20 பேர் அலுவலகத்திற்கு வந்து சந்தித்தனர்.  அந்த நூலகம், 'ஊரின் கனவுத் திட்டம்' என்பது எனக்கு புரிந்தது. அந்த ஆண்டு நிதி ஒதுக்கினேன்.

ஊர்க்காரர்களிடமே ஒப்பந்தத்தை ஒப்படைத்தேன். கவுன்சிலரை கட்ட சொல்லி 4 லட்ச ரூபாய் கடனாக வழங்கி இருக்கின்றனர் ஊர்க்காரர்கள். அப்போதே திறப்புவிழாவை சிறப்பாக நடத்துவோம், கலந்து கொள்ள வேண்டும் என சொல்லி விட்டனர் என்னிடம். கட்டிடம் எழ, எழ எனக்கு புகைப்படத்தை மெசெஞ்சரில் அனுப்பினர் அப்பூதியடிகளும், சிங்கப்பூரில் பணியாற்றும் இளையராஜாவும்.

திறப்புவிழாவை தைப்பொங்கல் அன்று வைத்துக் கொள்கிறோம் என நான்கு நாட்களுக்கு முன் கேட்டனர். மகிழ்ச்சியுடன் இசைவளித்தேன். நிகழ்ச்சிக்கு சென்றால் அனைத்துக் கட்சியினரும் குழுமி இருந்தனர். இளைஞர்கள், மகளிர், சிறுவர்கள் என அங்கு கூடியிருந்தனர்.

அந்த ஊரை சேர்ந்த 20க்கு மேற்ப்பட்டோர் ஆசிரியர்களாக உள்ளனர், 110 பேர் பொறியியல் பட்டதாரிகள் என்ற விபரத்தை தெரிவித்தனர்.  ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மாணிக்கம், அன்பழகன், தலைமையாசிரியர் உட்பட  பத்து பேர் உரையாற்றினார்கள். எதிர்காலத்தில், நூலகம் எப்படி சிறப்பாக செயல்படும் என்பது அவர்கள் பேச்சிலேயே வெளிப்பட்டது.

நான் நிறுவனராக உள்ள 'பெரியார் அறிவு மய்யம்' சார்பாக, அரசு வேலைவாய்ப்புத் தேர்வுகளுக்கு படிப்பதற்கான (TRB, TET, Bank exam, VAO, IAS Exams) 23 புத்தகங்கள் மற்றும் பெரியார் நூல்களை வழங்கினேன்.  11.00 மணிக்கு துவங்கிய விழா நண்பகல் 01.30க்கு நிறைவடைந்தது.

ஒவ்வொரு ஊரும் தங்கள் தேவைகளுக்கு இப்படி ஒன்று பட்டால் முன்னேறலாம்.

நாடே சூரியனை வழிபட்டு பொங்கல் பொங்கிய நேரம் அது, நாங்களும் பொங்கல் கொண்டாடினோம்.

# பொங்கலோ பொங்கல், அறிவுப் பொங்கல் !

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக