பிரபலமான இடுகைகள்

புதன், 6 ஜனவரி, 2016

நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று

இப்படியாகும் என ஜெயலலிதாவே நினைக்கவில்லை. பழையபடி நல்லபடியாகத் தான் முடியும் என்று நினைத்திருக்கிறார். ஆனால் அது அவரையே கவிழ்த்து விட்டது. சென்னையில் கனமழை பொழிந்த போது, அது தான் அவரது திட்டமாக இருந்தது.

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் விசாரணை கமிஷன் கேட்ட போது, முதலில் கிண்டலடித்து பிதற்றினார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். இயற்கை பேரிடர் குறித்து யாராவது விசாரணை கேட்பார்களா என நக்கல், நையாண்டி எல்லாம் செய்து களித்தார் நத்தம்.

"அது இயற்கை பேரிடர் அல்ல, செயற்கை பேரிடர். அரசால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட பேரிடர் இது", என தளபதி அவர்கள் ஆணித்தரமாக சொன்ன பிறகு அடங்கிப் போனார் நத்தம். கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இன்னும் சில எதிர்கட்சிகளும்  விசாரணைக் கமிஷனை வலியுறுத்தினார்கள்.

அதனால் தான் தலைவர் கலைஞர் அவர்களே நேரடியாக சென்று ஆளுநரிடம் மனு கொடுத்தார், விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்தி. காத்திருந்தனர் மக்கள், உண்மை வெளி வருமென. ஜெயலலிதா  அரசிற்கு தான் உண்மையை சொல்வதே பிடிக்காதே.

மௌலிவாக்கம் போல இந்த செம்பரம்பாக்கம் பிரச்சினைக்கு விசாரணை கமிஷன் அமையாமல் பார்த்துக் கொள்வதில் ஜெயலலிதா உறுதியாக இருக்கிறார், இன்னும் இருப்பார். காரணம் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக.

அதனால் தான் தலைவர் கலைஞர் பிரச்சினையை இன்று மக்கள் மன்றத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். மிகப் பெரிய மக்கள் திரளோடு ஆர்ப்பாட்டம் நடந்தேறி இருக்கிறது. மக்களுடைய உணர்வின் வெளிப்பாடு தான் ஆர்ப்பாட்டத்தின் வெற்றி.

ஜெயலலிதா நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று. அவருக்கு நினைப்பு கடந்த 2001 - 2006 ஆட்சியில் ஏற்பட்ட வெள்ளம் போல ஆகி விடும் என்பது தான். கணுக்கால் அளவு நீர் உள்புகுந்து வெளியேறிவிடும், வெள்ள நிவாரணம் வழங்கி, கடந்தத் தேர்தல் போல தேர்தல் வெற்றியை உறுதி செய்யலாம் என்பது தான்.

அரசின் ஆலோசகர்களும் அதையே வெற்றிக்கு வழியாக வலியுறுத்தி சொல்லி இருக்கிறார்கள். உளவுத்துறை அதை வழி மொழிந்திருக்கிறது. அதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீரை திறந்து விடாமல் தேக்கியிருக்கிறார்கள். ஆனால் அளவை தான் தவறாக கணக்கிட்டு விட்டார்கள்.

அவர்கள் வைத்த ஆப்பில் அவர்களே சிக்கிக் கொண்டார்கள். எக்குத்தப்பாக தண்ணீர் நிறைந்து திறந்து விட வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. அதே நேரத்தில் மழையும் வலுத்து விட்டது. தண்ணீர் ராசி  கொண்டவர்' தான் என சொல்லிக் கொள்ளும் ஜெயலலிதாவிற்கு தண்ணீரே ராசிபலன் சொல்லி விட்டது.

ஜெயலலிதாவின் வெள்ள அரசியலில் அப்பாவிப் பொது மக்கள் தான் சிக்கி சின்னாபின்னமாயினர். தூக்கத்திலேயே வெள்ளம் வருவது தெரியாமல் மூழ்கி இறந்துப் போன அப்பாவிகளின் கணக்கு இன்னும் தெரியவில்லை.

# கணக்கு தீர்க்கப்படும், வெள்ளம் அடித்துப் போகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக