பிரபலமான இடுகைகள்

வியாழன், 7 ஜனவரி, 2016

மக்களின் நாயகன் ஐ.பி

நல்ல உயரம், தாட்டியான உடல். நின்று பார்க்க வைக்கும் தோற்றம். நீண்ட அகன்ற கிருதாவும், பெருத்த மீசையும் சற்றே மிரள வைக்கும். ஆனால் உதட்டில் தவழும் புன்னகையும், கண்ணில் தெரியும் அன்பும்  வசியம் செய்யும். பார்ப்பதற்கு தான் கரடுமுரடான தோற்றம். ஆனால் எளிய மனிதர்.

அவர் தன் இளமைக் காலத்தில் எப்படி இருந்திருப்பார் என யோசித்துப் பார்த்தேன். பிறகு அவரது பழையப் புகைப்படங்களை பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. அதில் இன்னும் வாலிப முறுக்கோடு முரட்டுத் தனமாகவே தெரிந்தார்.

ஆனால் அந்த முரட்டுத் தோற்றத்திற்கு தொடர்பே இல்லாமல் மக்கள் மனதை கவர்ந்திருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக விளங்கினார். 1989ல் ஒன்றியப் பெருந்தலைவராக வெற்றிப் பெற்று பணியாற்றினார்.

கழகத்தின் ஒன்றிய செயலாளராக துவங்கி படிப்படியாக தன் செயல்பாட்டின் மூலம் மாவட்டக் கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படி மக்கள் பணியை தொடர்ந்தவர் 1989ல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ல் மீண்டும் ச.ம.உ ஆகி, தலைவர் கலைஞர் அமைச்சரவையில் அமைச்சரானார்.

அவர் தான் அண்ணன் ஐ.பெரியசாமி. கழகத் தோழர்களுக்கு செல்லமாக ஐ.பி. சட்டமன்றத்தில் எதிர்கட்சியினரின் கேள்விகளை சிரித்தபடி அனாயசமாக எதிர்கொள்வார். அனைவரிடமும் சகஜமாக இருப்பார்.

2001 தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டாலும், 2006 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை வருவாய்த்துறை அமைச்சர். முதிர்ந்த ஏழை எளியோருக்கு உதவித்தொகை வழங்குவதில் முதல்வர் கலைஞர் எண்ணத்திற்கேற்ப முனைப்புடன் செயல்பட்டார்.

சென்னையில் இருப்பதை விட அமைச்சருக்கு தொகுதியில் இருப்பதே பிடிக்கும் என எல்லோரும் கிண்டல் செய்வார்கள். அந்த அளவிற்கு தொகுதி பாசம். ஆத்தூர் தொகுதியில் உள்ளே நுழைந்தால் எதிர்பட்டவர்களை நின்று நலம் விசாரித்தே நகர்வார். முடிந்தவரை எல்லோருக்கும் உதவினார்.

இதன் விளைவு  2011 சட்டமன்றத் தேர்தலில் தெரிந்தது. திமுகவிற்கு எதிரான அலை இருந்தாலும், அது இவரது வெற்றியை தடுக்க முடியவில்லை. அதிலும்  53,932 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

தொடர் உழைப்பின் பலனாக கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக தலைவர் அவர்களாலும், தளபதி அவர்களாலும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார் அண்ணன் ஐ.பி. இப்போதும் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் முத்திரை பதித்து வருகிறவர்.

எளிமை, பொறுமை, அன்பு, உழைப்பு போன்ற பண்புகளால் மிளிரும் மனிதர். இன்று அண்ணனுக்கு பிறந்தநாள்.

#  மக்களின் நாயகன் அண்ணன் ஐ.பி வாழ்க !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக