"சுப்ரமணியன் பார்க்கனுமாம், எங்க வந்தாப் பார்க்கலாம்?". "எந்த சுப்ரமணியன்?". "சிங்கப்பூர்ல டைலர் கடை வச்சிருக்காரே, அவரு தான்". "என்ன விஷயம் ?". "அவரு செந்துறையில் மாட்டுப் பொங்கலன்னைக்கு ஒரு டைலர் கடை திறக்கிறார். அழைப்பதற்காக பார்க்கனுமாம்".
"இரண்டு நாட்களும் நான் பிஸி. ஏரியாவில் சுற்றிக் கிட்டு தான் இருப்பேன். நேரில் பிடிப்பது சிரமம். நிகழ்ச்சிக்கு வந்துடுறேன்". கடந்த வருடம் நான் சிங்கப்பூர் சென்றிருந்த போது, அவரது தையலகத்திற்கு வந்தாக வேண்டும் என்று அன்பு உத்தரவிட்டார், சென்று வந்தேன்.
மாட்டுப் பொங்கல் அன்று காலை செந்துறை சென்றேன். பெரியார் படம் போட்ட வரவேற்பு தட்டி முன்னால் இருந்தது. சுப்பிரமணியன் கருப்புசட்டையில் நின்றார். அவர் திராவிட இயக்க உணர்வாளர் என்பது தெரியும், ஆனால் இவ்வளவு வலுவான கொள்கையாளர் என்பது தெரியாது.
அன்று சனிக்கிழமை. சனிக்கிழமையில் எந்த நிகழ்வுமே வைத்துக் கொள்ள மாட்டார்கள். இவரது தனது தையலகத்தை ஆரம்பிப்பது, அவரது தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியது.
பத்து ஆண்டுகளுக்கு முன் பொருளாதார நெருக்கடியால் சிங்கப்பூர் சென்றார். உழைத்து முன்னேறி, கடனை அடைத்து, பொருளாதாரம் மேம்பட்டு, இன்று செந்துறையிலும் ஒரு கடை திறக்கிறார். பாரத்தை கடவுள் மேல் போட்டுவிட்டு உழன்று விடாமல், போராடியதால் தான் இந்த வெற்றி.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் அய்யா துரை.சந்திரசேகரன் அவர்கள் வருகை தந்து கடையை திறந்து வைத்தார்கள். எந்தவித சடங்கு, சம்பிரதாயமும் இல்லை. குத்துவிளக்கு போன்ற குறைந்தபட்ச சமரசமும் இல்லை. எளிமையாகவும், இனிமையாகவும் நடைபெற்றது.
வாழ்த்துரை நிகழ்வு. தி.க மண்டலத் தலைவர் அண்ணன் காமராஜ்,"வாகனங்களை பரிசோதித்து பைன் போடும் காவல்துறை, கடந்த ஒரு மாதமாக ஜெயங்கொண்டத்தில் நடக்கும் திருட்டை தடுக்க முடியவில்லை"என்று நாட்டு நடப்பை வெளுத்து வாங்கினார். ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி மாட்டுக்கறி அரசியலையும், ஜல்லிக்கட்டு அரசியலையும் தெளிவுப்படுத்தினார்.
அய்யா துரை.சந்திரசேகரன் அவர்கள்,"சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த போது, இரண்டு விஷயங்களை கவனித்தேன். மழை பெயத சிறிது நேரத்தில், நீர் வடியும் அளவு வடிகால் வசதி. பள்ளி வாகனம் நின்றால், மற்ற வாகனங்கள் இடைஞ்சல் செய்யாமல் நிறுத்தி விடுகிறார்கள். நம் நாட்டில் இது செயல்படுத்தப் பட வேண்டும்" என்றார்.
"சிங்கப்பூருக்கும், செந்துறைக்கும் சுப்ரமணியன் வணிகப் பாலம் அமைத்திருக்கிறார். பலருக்கு வேலை அளிக்க, வளர வேண்டும்", என்று வாழ்த்தினார். ஒரு அரசியல் வகுப்பில் கலந்துக் கொண்ட உணர்வு. நல்ல கருத்துகளை பரப்பும் பயனுள்ள வகையில் அமைந்தது விழா.
சுப்ரமணியன், அவரது வாழ்விணையர் கீதா, மகன் இனியவன் எல்லோரையும் வரவேற்று சிறப்பித்தனர். பகுத்தறிவுக் குடும்பம்.
# பகுத்தறிவுப் பொங்கல் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக