ரொம்ப திட்டமிட்டு இருக்கிறதா, நான் நெனைச்சுகிட்டு தான் இருந்தேன்...
தேதி அறிவிச்சதில் இருந்தே, நேரிலும், அலைபேசியிலும் விசாரிப்புகள். "எப்ப மனு தாக்கல்?", "எந்தத் தொகுதிக்கு மனு தாக்கல்?".
கழகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்ததில் இருந்து தான் இந்தப் பிரச்சினை. நான் தெளிவாகத் தான் இருந்தேன். ஆனால் எல்லோருக்கும் குழப்பம், எந்தத் தொகுதி என்பதில். ஜெயங்கொண்டம் சொந்த ஊர் இருக்கும் தொகுதி. குன்னம், தற்போதையத் தொகுதி. அரியலூர், குடியிருக்கும் தொகுதி.
இரண்டுத் தேர்தலாகவே, எதிர்கட்சியினர் கிளப்பும் பிரச்சினை தான் இது, இப்போதும் கிளம்பியது. 2011 தேர்தலில், விண்ணப்பித்தது ஜெயங்கொண்டம் தொகுதிக்கு தான். ஆனால் அந்தத் தொகுதி கூட்டணி கட்சியான, பா.ம.கவிற்கு போனதால், நான் குன்னத்திற்கு இடப்பெயர்ச்சி செய்யப்பட்டேன். அது கூட்டணிக் கட்சி அரசியல்.
அதே சிந்தனையில் தான் "எந்தத் தொகுதி?" என்றக் கேள்வி. அதிலும் மூன்று தொகுதியில் இருக்கும் நிர்வாகிகளும் எனக்காக விருப்ப மனு செய்ய, புகைச்சல் கூடுதலானது. நான் எந்தத் தொகுதிக்கு மனு தாக்கல் செய்வேன் என்பது விவாதத்துக்குள்ளானது.
தலைமைக் கழகம் விருப்ப மனு தாக்கல் செய்ய தேதி அறிவித்தது. முதல் தேதியில் இருந்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தொடர்ந்து தெருமுனைப் பிரச்சாரம், பொதுக் கூட்டம் எனப் பணிகள். தை மாதம் என்பதால் கல்யாண முகூர்த்தங்கள். இதனால் சென்னை சென்று, விருப்ப மனு கொடுக்க நாள் அமையவில்லை. 9ம் தேதி தான் எந்த வேலையும் இல்லாத நிலை.
கல்லூரி காலத்தில் இருந்து இன்றும் நெருக்கமாக இருக்கும், மாம்ஸ் சங்கரின் தாயார் இறந்துவிட்டார். ஆற்காடு சென்று அஞ்சலி செலுத்தி சென்னை சென்றேன். 9ம் தேதி தளபதி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றேன். விருப்ப மனு தாக்கல் செய்ய அண்ணா அறிவாலயம் சென்றேன். அது வரை யாரிடமும் சொல்லவில்லை , முக்கியமாக வாழ்விணையரிடமும். காரணம் அன்றைய தினம்.
9ம் தேதி செவ்வாய்க்கிழமை. செவ்வாய், வெறுவாய் என்பது பொதுவானக் கணக்கு. அதிலும் அன்று அம்மாவசைக்கு அடுத்த நாளான பாட்டிமுகம். பாட்டிமத்தில் புதிதாக ஏதும் துவங்க மாட்டார்கள். அதனால், 9ம் தேதி அனைத்து விதத்திலும் ஆகாத நாள். அன்று நான் விருப்பமனு கொடுக்கிறேன் என்றால் யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதனால் தான் யாரிடமும் சொல்லவில்லை.
அறிவாலயத்தில் நுழையும் போதே பார்த்துக் கொண்டேன், யாரும் தெரிந்த முகம் இல்லை. மனு கொடுக்கும் இடத்தில் அய்யா தஞ்சை கூத்தரசன் மனு அளித்துக் கொண்டிருந்தார். அவர் அகலும் வரைக் காத்திருந்தேன். உடன் வந்தவர்களை விலகியிருக்க சொல்லிவிட்டு மனு கொடுக்க சென்றேன். காரணம், "இவர்கள் தேர்தலைப் பார்த்துக் கொள்வார்களா?" என்றக் கேள்வியை மற்றவர்கள் எழுப்புவார்கள்.
விருப்ப மனு, குன்னம் தொகுதிக்கு தான்.
மனு பெறும் வரிசையில், எஸ்.ஏ.எம்.உசேன், ஆ.சதாசிவம், பூச்சி முருகன், கு.க.செல்வம், துறைமுகம் காஜா, சேகர் உள்ளிட்டவர்கள் இருந்தார்கள். நடிகர் சங்கத்தை துளைத்து எடுத்த அண்ணன் பூச்சி முருகன் மனுவைப் பெற்றுக் கொண்டார். அப்போது ஒரு குரல்,"மாவட்டம் அண்ணே". முதுகில் ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தேன், கொளகைப் பரப்புத் துணை செயலாளர் அண்ணன் ஈரோடு இறைவன்.
புகைப்படம் எடுப்பவரிடம், எடுக்க வேண்டாம் என்று நான் சொல்லும் போதே, க்ளிக், க்ளிக், க்ளிக். இப்போது வீடியோ கேமராவும் திரும்பியது. சமாளித்து விலகினேன்.
வெளியில் வந்த போது, அறிவாலயத் தொண்டரணித் தோழர்கள் அருகில் வந்தனர். " தெய்வமே இன்னைக்கும் தனியாவா?" என்றனர். அவர்கள் என்னை தெய்வமே என்று தான் அழைப்பார்கள், நானும் அவர்களை அப்படித் தான் அழைப்பேன். நான் ,"தொகுதிக்கு போனா மக்கள் இருக்காங்க, நிகழ்ச்சிக்குப் போனா கட்சிக்காரங்க இருக்காங்க, இங்க வந்தா நீங்க இருக்கீங்க" என சமாளித்தேன்.
"பாட்டிமத்தில் வந்ததால், யாரிடமும் சொல்லாமல் வந்தேன்" என்றேன். அப்போது நண்பர் சொன்னார்,"யாரிடமும் சொல்லாம வந்தீங்க, ஆனா கடவுளே கூட வந்து நிக்கிறாரு". "கடவுளா?" என்றுக் கேட்டேன். "இதோ இறைவன்" என்றார்.
காரில் ஏறி அரியலூர் பொதுக் கூட்டத்திற்கு கிளம்பினேன். சிறப்புரை, கம்பம் செல்வேந்திரன் என்பதால் விரைந்தேன். அலைபேசி ஒலித்தது,"அண்ணா, நீங்க மனு கொடுத்தது 01.30 மணி கலைஞர் செய்திகள்ல ஓடுது". அலைபேசி தொடர்ந்து ஒலித்தது. யாருக்கும் தெரியாமல் மனு கொடுக்க வந்தால், இப்போது உலகத்திற்கே தெரிந்து விட்டது.
# பிளான் பண்ணி செய்யனும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக