எனக்கு நண்பர்கள் எல்லோரையும் பிறந்தநாளில் வாழ்த்தித் தான் பழக்கம். இன்று ஜெயலலிதா அவர்களுடைய பிறந்தநாள். அவர் எனக்கு நண்பர் கிடையாது. ஆனாலும் தமிழகத்தின் முதல்வர். நடுநிலை நணபர்கள் வாழ்த்தும் போது, நானும் வாழ்த்துவது தானே மரபு. வாழ்த்துகிறன்.
தான் மாறிவிட்டதாக ஆரம்பத்தில் காட்டிக் கொண்டாலும், சமச்சீர் கல்வியை தடை செய்து, திருவள்ளுவர் படம் மீது ஸ்டிக்கர் ஒட்டி, தான் பழைய ஜெயலலிதா தான் என வெளிப்படுத்தினாரே, அது தான் ஜெயலலிதா. அதற்காக வாழ்த்துகிறேன்.
மக்கள் கருத்து பற்றி கவலை கொள்ளாமல், புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சேட்டு வீட்டு கல்யாணத்திற்கு வாடகைக்கு விடுவது என பரபரத்தாரே, அதுதான் ஒரிஜினல் ஜெயலலிதா . அதற்காக பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.
கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தாலும், கட்சியில் இருக்கும் அடிமைகளை பால்குடம் தூக்க வைத்து, மொட்டை போட வைத்து , மண்சோறு சாப்பிட வைத்து, அலகு குத்த வைத்து எம்.ஜி.ஆர் கால அனுதாபத்திற்கு அயராமல் முயற்சித்தாரே, அதற்காக வாழ்த்துகிறேன்.
சட்டமன்றத்தில் அரைமணி நேரம் உட்கார்ந்து, தலைமை செயலகத்திற்கு மாதம் ஒரு முறை வந்து, கட்சி தலைமையகத்திற்கு வருடம் ஒரு முறை வந்தாலும், வழியெங்கும் கட்அவுட் வைக்க செய்து, பாதையை டிஜிட்டல் பேனரால் மூட செய்து, அதகளத்தால் அதிர செய்யும் அம்மாவை வாழ்த்துகிறேன்.
அம்மா உணவகம், அம்மா மினரல் வாட்டர், அம்மா மருந்தகம் என துவங்கி இப்போது சென்னை முதியோருக்கு இலவச பஸ்பாஸ், வீட்டுக்கு மினரல் வாட்டர் என சென்னைக்கான திட்டங்களை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த தமிழகத்தை மயக்க நினைக்கும் உங்கள் "நிரவாகத் திறமை"க்காக வாழ்த்துகிறேன்.
செம்பரம்பாக்கம் ஏரி தானாகவே திறந்து கொண்டது, ஓடைகள் எல்லாம் நிரம்பிக் கொண்டது, வானம் பத்து மாரி பொழிந்து சென்னையை அழித்தது என ஊடகங்களை கதற வைத்து, பத்திரிக்கைகளை அழ வைத்த திறமைக்காகவே வணங்குகிறேன், வாழ்த்துகிறேன்.
நாடாளுமன்ற தேர்தலில், தேர்தல் ஆணையம், காவல் துறை என வித்தியாசக் கூட்டணி அமைத்தவர் சட்டமன்ற தேர்தலில்
மக்கள் நலக் கூட்டணி, பாஜக கூட்டணி, முதல்வர் வேட்பாளர் என அரசியல் சித்து விளையாட்டில் அசர வைக்கும் செல்வி ஜெயலலிதாவை வாழ்த்துகிறேன்.
ஆட்சித் துவக்கதில் திருவள்ளுவர் மீது ஒட்ட ஆரம்பித்த ஸ்டிக்கரை வெள்ள நிவாரணத்திலும் ஒட்டி, மணமக்கள் நெற்றியிலும் கட்டி, இப்போது பச்சையாகக் குத்தி பதற வைக்கும் உங்கள் நெஞ்சுரத்திற்காக வாழ்த்துகிறேன்.
பேருந்து கட்டணம் ஏற்றி, மின்கட்டணம் ஏற்றி, பால் விலை ஏற்றி, வெள்ள காலத்தில் சிறப்பான நிர்வாகம் செய்து மக்களை காப்பாற்றி, மக்கள் மனம் குளிர செய்துள்ள தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆயிரம் ஆண்டு காலம் வாழ்க !
# ஜெயலலிதா நாமம் வாழ்க !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக