பிரபலமான இடுகைகள்

திங்கள், 29 பிப்ரவரி, 2016

செம்பருத்தி IPS

கொளப்பாடி கிராமத்தில் படிப்பகக் கட்டிடம் திறந்து வைத்தார் செம்பருத்தி. படிப்பகம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது.

செம்பருத்தி. பலருக்கு நினைவிருக்கும், புதியவர்களுக்கு தெரியாது.

சிங்கப்பூர் சென்ற போது, அங்கு இருந்தவர்களும் செம்பருத்தி குறித்து விசாரித்தார்கள். எனது பதிவை படிப்பவர்கள் செம்பருத்தி குறித்து விசாரிப்பார்கள். அதற்கு காரணமான பதிவை மீண்டும் பகிர்கிறேன்.
*****************

2013 ஆகஸ்ட்.

கொளப்பாடி கிராமத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்து காரில் ஏறினோம்...

"சார்" ஒரு சிறு குரல்.

திரும்பிப் பார்த்தால், கார் கதவு ஓரம் ஒரு சிறு பெண், பள்ளி யூனிஃபார்மோடு. சுற்றிலும் வயதில் மூத்தவர்கள், இளைஞர்கள். 

" என்னம்மா ?" என்றேன். " லைப்ரரியை திறக்கமாட்டேங்கறாங்க சார்". காரை விட்டு இறங்கி விட்டேன்.

" ஏன் திறக்கலை, என்ன காரணம்னு தெரியுமா ?" "அது தெரியலிங்க சார்" சுற்றிலும் நின்ற பெரியவர்களிடம் கேட்டேன் "என்ன காரணம் தெரியுமா ?". அவர்களுக்கு லைப்ரரி என்று ஒன்று இருப்பதே தெரியுமா என்ற அளவுக்கு எக்ஸ்பிரஷன்.

சிறுமியிடமே திரும்பினேன், "சாவி யாருகிட்டமா இருக்கு ?" "அது யாரோ வெளியூர் ஆள் கிட்ட இருக்குதாம் சார்" "எந்தக் கட்டிடத்தில் இருக்கு" "ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு பின்னாடி இருக்கு சார்" "சரிம்மா, நான் விசாரிச்சி திறக்க ஏற்பாடு பண்றேம்மா"

காரில் ஏறினேன். "எங்கம்மா படிக்கிற ?" "பக்கத்தில வெண்மணி கிராமத்தில படிக்கிறேன் சார்" "எத்தனாவதும்மா?" "எட்டாவது சார்" "பேர் என்னம்மா ?"

"செம்பருத்தி சார்"

அடுத்த தெருவிற்கு சென்று, கொடியேற்றி வைத்து விட்டு கார் ஏற வருகையில் மீண்டும் செம்பருத்தி, தோழிகளோடு. சாக்லேட் கொடுத்தார். "எதுக்கும்மா ?" "நாளைக்கு எனக்கு பிறந்தநாள் சார்" "மகிழ்ச்சிம்மா, நல்லா படி" வாழ்த்தினேன். "சார் லைப்ரரிய மறந்துடாதீங்க”

இன்று ஊராட்சி மன்றத் தலைவரை தொடர்பு கொண்டு விசாரித்ததில், நூலகத்திற்கு தனிக் கட்டிடம் இல்லை என்பது தெரிய வந்தது, வேறு கட்டிடத்தில் இயங்குகிறது.

நூலகக் கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்க உள்ளேன்...

# கொளப்பாடியின் அறிவுக் கண் திறக்கும் “செம்பருத்தி” !
****************

அங்கு இருந்த நூலகம், பகுதி நேர நூலகம் என்பதால்  ஒதுக்கிய நிதி திரும்பி வந்தது. மீண்டும் அதற்கு புதிய தலைப்பு "படிப்பகம்" என்று வைத்து அடுத்த நிதி ஆண்டில் நிதி ஒதுக்கினேன்.

கட்டிடம் கட்டப்படும் போதே செம்பருத்தியை தொடர்பு கொள்ளச் சொன்னேன். கட்டி முடித்த உடன் திறப்பு விழாவிற்கு செம்பருத்தியை அழைக்கச் சொன்னேன். இன்று திறப்பு விழா.

வரவேற்பு பதாகையில் செம்பருத்தி புகைப்படம்.  கல்வெட்டில் செம்பருத்தி பெயர் திறப்பாளர். செம்பருத்தி ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். நாங்கள் எல்லோரும் உரையாற்றிய பிறகு, செம்பருத்தி இறுதியில், "நூலகம் கேட்ட காரணத்தை விளக்கி, நன்றி தெரிவித்து" சிறப்புரையாற்றினார். இன்று செம்பருத்தி தான் வி.ஐ.பி.

பின்னாளில் கல்விக்கு உதவுவதற்கு அலைபேசி எண் கேட்ட உடன் எழுதிக் கொடுத்தார், "செம்பருத்தி IPS ". நூலகம் கேட்ட போது இருந்த அதே உறுதி. நிச்சயம் ஆவார். உதவிடுவேன்.

# சல்யூட் செம்பருத்தி IPS !                                              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக