மாவட்டக் கழகக் கூட்டம் நடக்கும் போது சில இணையதளத் தோழர்கள் அலைபேசியை எடுத்துக் கொண்டு அவசரமாக வெளியே செல்வதும், மகிழ்ச்சியாக வந்து அமர்வதுமாக இருந்தனர். 10.02.2016 அன்று. கூட்டம் முடிந்த பிறகு தான் செய்தி தெரிந்தது, "சென்னை வலைதள பயிற்சி கருத்தரங்கிற்கான அழைப்பு". தளபதி கலந்து கொள்கிறார்கள் என்பதால் தான் அந்த அளவற்ற மகிழ்ச்சி.
அடடா, பொறுப்பில் இருப்பதால் நமக்கு வாய்ப்பில்லையே என்ற வருத்தம். இருப்பினும் மற்றப் பணிகள் தொடர்ந்தன. 16ந்தேதி சட்டமன்றக் கூட்டம். 15ந்தேதி கிளம்பும் போது, இணையதளத் தோழர்களும் சென்னை கிளம்புவதாகத் தகவல் தெரிவித்தனர். அவர்களுக்கு அண்ணா அறிவாலயத்தில் காலை கருத்தரங்கம்.
சட்டமன்றக் கூட்டம் வந்து விட்டு, தளபதி அவர்கள் கருத்தரங்கில் கலந்துக் கொள்ள அறிவாலயம் செல்லும் போது உடன் சென்று, தளபதி அவர்கள் உரையை மட்டுமாவது கேட்பது என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
சென்னைக்கு கார் விரைந்துக் கொண்டு இருந்தது. சகோதரர் கார்த்திக் அழைத்தார். "அண்ணன் சென்னை கிளம்பிட்டீங்களா?". "ஆமாம், கிளம்பிட்டேன் கார்த்திக்". "உங்களுக்கு சுனில் பேசுவார்" என்றார். சிறிது நேரத்தில் சுனில் அழைத்தார்,"அண்ணா, கருத்தரங்கில் நீங்க பேசனும்". ஒரு நிமிடம் திகைத்தேன். சமாளித்து, "சட்டமன்றக் கூட்டம் கலந்து கொண்டு விட்டு வந்து விடுகிறேன்" என்றேன். கலந்து கொள்ள ஆசைப்பட்டவனுக்கு, உரையாற்றவே வாய்ப்பு கிடைத்த திகைப்பு.
சட்டமன்றம் சென்றோம். இடைக்கால நிதிநிலை அறிக்கை. சட்டமன்ற திமுக அலுவலகத்தில் இருந்து பேரவைக்கு கிளம்பினோம். நடக்கும் போது, தளபதி அவர்கள் பார்த்தார்கள், அருகில் சென்றேன். "நான் கோபாலபுரம் போய், தலைவரை பார்த்து விட்டு வருவேன். நீங்க முன்னாடி போய் பேசிடுங்க",என்றார். எவ்வளவு பணிகள் இருந்தாலும், கூர்மையாக அடுத்தடுத்து திட்டமிடும் தலைமைப் பண்பு.
அவையில் ஓ.பி.எஸ் இடைக்காலப் பட்ஜெட்டை தாக்கல் செய்ய எழுந்தார். செயலிழந்த அரசை கண்டித்தும், அரசு ஊழியர்கள் போராட்டத்தை கண்டித்தும் அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் கண்டன அறிக்கைப் படித்து விட்டு வெளிநடப்பு. தளபதி தலைமையில் கழக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தோம்.
நான் அறிவாலயம் கிளம்பினேன். கூட்டத்தில் இருந்த தோழர்களிடம் நிலவரம் கேட்டேன். "தொழில்நுட்ப வல்லுநர்கள் வகுப்பு எடுத்தனர். அடுத்து இணையத்தில் செயல்படும் கழக நிர்வாகி பேச இருப்பதாக அறிவித்துள்ளனர். யார் வர்றாங்கன்னு தெரியல",என்றார். நானும் ஆவலோடு விரைந்தேன்.
அதற்குள் சுனில் அழைத்து விட்டார். கலைஞர் அரங்கம். திருமணக் கூடம் நிறைந்திருந்தது. 1100 பேர் பங்கேற்றிருப்பதாக சொன்னார்கள். இளையப் பட்டாளம். ஒரு கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த உணர்வு.
அழைத்து சென்று, மேடைக்கு எதிரில் முதல் வரிசையில், சென்னை முன்னாள் மேயர் அண்ணன் மா.சு அவர்கள் அருகில் அமர்த்தினார்கள். அவரும் நானும் மட்டும் தான் முதல் வரிசையில். ஒன்றிய செயலாளராக, மாவட்ட செயலாளராக பலக் கூட்டங்களில் அறிவாலயத்தில் பங்கேற்றிருக்கிறேன். வாய்ப்பிருந்தாலும் முதல் வரிசையில் அமர மாட்டேன். அது என் இயல்பு.
ஆனால் இன்று முதல் வரிசை. சில இணையத் தோழர்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டிருந்தனர். அடுத்து நான் அழைக்கப்பட்டேன். "லைக்குக்காக எழுதாதீர்கள். காலைவணக்கங்களை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள். சில மாற்றுக் கட்சிக்காரர்களை போல், அடுத்தவர் மனம் புண்படும்படி எழுதாதீர்கள்" என்று டிப்ஸ் கொடுத்தேன்.
என்னை கவர்ந்த பதிவர்கள் அண்ணன் அப்துல்லா, அபிஅப்பா, ஜெயின் கூபி ஆகியோர் போல் பதிவிடும் முறைகளை சொன்னேன். அடுத்து அண்ணன் மா.சு பேசினார். அவர்,"முகநூல் நிறுவனர் மார்க் பார்வைக்கு தளபதியின் முகநூல் பக்கம் கொண்டு செல்லப்பட்டது. அவர் சென்னை வரும் போது தளபதி அவர்களை சந்திப்பதாக சொல்லி உள்ளார்"என்ற செய்தியை சொல்ல ஏக அப்ளாஸ்.
தளபதி வருகை தந்தார்கள். சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த பாடாலூர் விஜயிடம் நேரே சென்று நலம் விசாரித்து விட்டே இருக்கையில் அமர்ந்தார்கள். கடைசி இருக்கையில் இருந்த என்னை, பக்கத்து இருக்கையில் அமர சொன்னார். அரியலூர் மேடைகளில் அருகே அமர்ந்திருக்கிறேன். ஆனால் அறிவாலயத்தில், மாநில அளவிலான நிகழ்வில் அருகமரும் அரிய வாய்ப்பு.
அதிமுக மேடையை நினைத்துப் பார்த்தேன். இவரல்லவா தலைவர்.
தளபதி உரை. இணையத்தில் கழகத்துக்கு சிப்பாய்களாக பணியாற்றும் இணையதள தோழர்களை பாராட்டினார். மிசா காலத்தில் எழுத்துரிமைக்கு எழுந்த நெருக்கடியை நினைவு கூர்ந்தார். தேர்தல் பணிக்கு தயார் செய்து உற்சாகமூட்டினார். வந்திருந்த தோழர்கள் தளபதியின் உற்சாக உரையின் ஊக்கத்தோடு கிளம்பினர்.
மறைந்த இணைய வீரர் அண்ணன் சபேசன் அவர்களை நினைவு கூர்ந்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இணையத் தோழர்களையும் கழகம் மதிப்பதற்கான அடையாளம்.
வந்திருந்த தோழர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார் தளபதி. சும்மாவே செல்ஃபி எடுக்கும் இணைய நண்பர்கள், தளபதி கிடைத்தால் விடுவார்களா. கல்லூரி நண்பரோடு எடுத்துக் கொள்வது போல் இடித்து, நெருக்கி நின்று கிளிக்'கித் தள்ளினர். முகம் சுளிக்காமல், புன்முறுவலோடு நின்றிருந்தார் தளபதி.
எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பிற்கு தளபதி அவர்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
நீண்ட நிலைத்தகவல்களாக இடுகிறேன் என்று பல நண்பர்கள் கிண்டல் செய்தாலும், அது தான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. அதற்கு உற்சாகப்படுத்திய முகநூல் நண்பர்களுக்கும், இந்த தொழில்நுட்பத்தை வழங்கிய மார்க்குக்கும் நன்றி !
# இணைய பயணத்தில் இனிய மைல்கல் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக