பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

அரசியல்வாதி எல்லாம் அயோக்கியன் அல்ல

அரசியல்வாதிகள் என்றால் வெறுப்பு கொள்வோருக்காக ஒரு தகவல்.

மீண்டும் உஞ்சினி, செதலவாடி, வீராக்கன், நாகல்குழி கிராமங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற போகிறோம் என நோட்டீஸ் கொடுத்தார்கள் நெடுஞ்சாலை துறையினர். நான் மீண்டும்  எதிர்ப்பு தெரிவித்தேன்.

செய்தியை புதிதாக படிப்பவர்களுக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக்.

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் உள்ள கிராமங்கள் தான் மேலே குறிப்பிட்டவை. உஞ்சினியில் இருந்து செதலவாடி, வீராக்கன், நாகல்குழி வழியாக ஒரு சாலை வாரியங்காவல் கிராமத்தை அடைகிறது. இது கிராம சாலை. காலையில் ஒரு நடை, மாலையில் ஒரு நடை ஒரு பேருந்து இந்த சாலையில் செல்கிறது. மற்றபடி இரு சக்கரவாகனங்களே அதிகம் புழங்கும்.

வருவாய் துறை திடீரென  களமிறங்கியது. சர்வே செய்யப்பட்டது. ஒவ்வொரு வீடாக குறியிட்டார்கள். குறியிட்ட வரை இடிக்க வேண்டும் என அறிவித்தார்கள். அப்புறம் தான் பிரச்சினையை சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் என் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள்.

அதிகாரிகளை தொடர்பு கொண்டோம். சரியான பதிலளிக்க தடுமாறினார்கள். புகார் வந்திருக்கிறது, அதன் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்பதே பதிலாக வந்தது. நான் குறிப்பிட்ட கிராமங்களுக்கு சென்றேன். அப்போது தான் பிரச்சினையின் ஆழம் தெரிந்தது.

அந்த சாலையை அகலப்படுத்தும் திட்டம் ஏதும் நெடுஞ்சாலை துறை வசம் இல்லை.

வீராக்கன் கிராமத்தை சேர்ந்த ஒருவர் சென்னை தலைமை செயலகத்தில் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்று விட்டார். அதற்கு பிறகு சமூக சேவையில் ஆர்வம் கொண்டார். இந்த சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என புகார் எழுதினார்.

புகார் மீது நடவடிக்கை இல்லை, வழக்கம் போல். தாசில்தாரில் துவங்கி, கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் வரை புகார் படையெடுத்தார். கடைசியாக ஒரு அரசாணையை குறிப்பிட்டு, நீங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், கோர்ட்டுக்கு போவேன் என்று கடிதம் எழுதிவிட்டார்.

அந்தப் புகாருக்காவே இந்த நடவடிக்கை. சாலையில் இருந்து 50 மீட்டர் உள்ளடங்கி இருக்கும் குடிசையை குறியிட்டிருந்தார்கள், சாலைக்கு அவ்வளவு இடம் தேவையில்லை. சாலை ஓரம் இருக்கும் மின்கம்பங்களை தாண்டி உள்ளே இருக்கும் வீடுகளை இடிக்க குறியிட்டிருந்தார்கள். சாலையின் இருபுறமும் மழைநீர் ஓடும் பள்ளத்தை தாண்டி இருக்கும் வேலிகளை அகற்ற வேண்டும் என்றார்கள். எதுவும் நியாயமில்லை.

மக்கள் வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான். "சாலை துவக்கத்தில் இருந்து இறுதி வரை சாலை அகலப்படுத்த தேவையான இடத்தை, சீரான ஒரே அளவில் எடுத்துக் கொள்ளட்டும். அல்லது இன்னொரு வழி இருக்கிறது. வருவாய்த்துறை குறியிட்டிருந்தது 1992 சர்வே. இதற்கு முன் 1965 சர்வே ஒன்று இருக்கிறது. அந்த சர்வேபடி இடித்துக் கொள்ளட்டும்".

26.01.2016. வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை என உஞ்சினி கிராமத்தில் குவிந்தனர். நாங்களும் சென்றோம். குறியிட்ட வீடுகளை இடிக்க ஆயத்தமாயினர். அதிகாரிகளிடம் பேசினேன். "தேவையான இடத்தை சொல்லுங்கள். நானே பேசி அகற்றி கொடுக்கிறேன். தேவையில்லாத பகுதியில் இடிப்பதை ஒப்புக் கொள்ள முடியாது".

நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அந்தப் பணியை ஒத்திவைத்து சென்றனர் அதிகாரிகள்.

சில வீடுகள் முற்றிலும் இடிக்கும் நிலை, சில வீடுகளை இடித்தால் குடியிருக்க முடியாத நிலை ஏற்படும். இரண்டு பஸ்கள் ஒரே நேரத்தில் போனாலும் , அந்த இடம் தேவைப்படாது. வீடுகளை இழப்போருக்கு மாற்று இடம் கொடுக்கவும் நடவடிக்கை இல்லை. 1965 சர்வே படி பார்த்தால் அந்த சாலையே கிடையாது. அதெல்லாம் அரசாங்க புறம்போக்காகத் தான் இருந்திருக்கும். சும்மா இருந்ததால், சாலை அமைக்கும் போது நெடுஞ்சாலைத்துறை கணக்கில் சேர்த்திருக்கிறார்கள். இல்லாவிட்டால், வீடற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டிய இடம் தான் அது.

இந்த பிரச்சினையின் ஆழம் புரியாமல், சில பிரகஸ்பதிகள், ஒரு சட்டமன்ற உறுப்பினரே ஆக்கிரமிப்பு அகற்றுவதை தடுக்கலாமா என பிதற்ற ஆரம்பித்தனர். ஆளுங்கட்சி இது குறித்து சிறிதும் கவலை கொள்ளவில்லை.

மீண்டும் நேற்று (25..02.2016), பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. காலையிலேயே வீராக்கன் கிராமத்தில் காவல்துறையின் அதிரடிப்படை குவிக்கப்பட்டது. இரவில் இருந்தே எனக்கு அழைப்பு, அவசியம் வாருங்கள். காலையில் நானும் சென்றேன்.

அந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர், நான் செல்வது கடமை. ஆனால் உள்ளாட்சியில் அந்தப் பகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த திமுக தோழர்களும் என்னோடு குவிந்தனர். ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி, பொதுக்குழு செல்வராஜ் என நூற்றுக்கும் மேற்பட்டோர்.

அப்போது ஒரு நபர்,"இதுக்கு ஏன் அரசியல்வாதி வரணும்? புறம்போக்கில் இருந்தால் இடிக்கட்டுமே" என்று பொத்தாம் பொதுவாகப் பேசினார். எட்டி அந்த ஆளின் துண்டைப் பிடித்தேன்,"மக்கள் கூப்பிட்டு வந்திருக்கன். எத இடிக்கனுமோ, அத அதிகாரிகிட்ட சொல்லு. என்ன கேக்காத. தப்பா இடிச்சா, உன்னால காப்பத்த முடியுமா?" என்றேன். என் கோபம் உணர்ந்து, ஊர்காரர்கள் அந்த ஆளை தள்ளி துரத்தினர். பிறகு தான் தெரிந்தது, அவர் அதிமுககாரர்.

ஒரு காலத்தில் எல்லாம் புறம்போக்கே. காடு திருத்தி அனுபவித்தவர்களின் வாரிசுகள் இன்று பட்டா இடம் என சொந்தமாகக் கொண்டு ஆள்கிறார்கள், அவ்வளவு தான். எவன் தலையில் தூக்கிக் கொண்டு வந்தது இந்த சொத்தெல்லாம். அடுத்தவன் கஷ்டத்தில், ஆனந்தப்பட இப்படியும் சில ஜீவன்கள்.

வருவாய்த்துறையினரும் நெடுஞ்சாலைத்துறையினரும் வந்தனர். கடந்த முறை வைத்த வாதத்தையே வலியுறுத்தினோம். வீட்டுக்காரர்களுக்கு தெரிவித்து சர்வே மீண்டும் செய்யவேண்டும் என்று வலியுறுத்தினோம். பேச்சுவார்த்தைக்கு பிறகு, வேலி, மரங்கள், வீட்டின் முன்புறம் நீட்டப்பட்டிருக்கும் அமைப்புகள் ஆகியவற்றை அகற்ற ஒப்புக் கொண்டோம்.  அத்தியாவசியமான இடங்களில் வீடுகளின் பகுதியை ஒரிரு நாட்களில் அகற்றவும் மக்கள் இசைவளித்தனர்.

அரசியல்வாதிகள் நாங்கள் உடன் இருந்திருக்காவிட்டால் நிலைமையே வேறாகியிருக்கும். அந்த அப்பாவி ஏழை மக்களின் வீடுகள் தேவையற்ற முறையில் இடிக்கப்பட்டு நடுரோட்டில் நின்றிருப்பர். அந்த மக்களால் காவல்துறையை எதிர்க்கும் துணிவில்லை.

காலை 09.30 முதல் மாலை 06.00 வரை, ஆக்கிரமிப்பு அகற்றிய ஜேசிபி இயந்திரத்தின் பின்னாலேயே, தெருதெருவாக மொட்டை வெயிலில் சுற்றி வந்தோம் நாங்கள். எங்களை கடைசி வரை இருக்க வேண்டும் என மக்கள் அன்புக் கட்டளை இட்டு விட்டார்கள். நாங்களும் மக்களோடு இருந்தோம்.

ஜெயலலிதா பிறந்தநாள் போர்டு ஒன்று சாலைக்கு இடைஞ்சலாக நின்று கொண்டிருந்தது. போர்டில் இருந்த ஜெ'வைத் தவிர,  அதிமுகவினர் கண்ணிலேயேபடவில்லை. பாமக தோழர்கள் வீராக்கன் கிராமத்தில் அதிகாரிகளுக்கு எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

ஒரு அறிவாளி துபாயில் உட்கார்ந்துக் கொண்டு இது தேர்தல் கால அரசியல் என்று சொல்லி இருக்கிறார். தேர்தல் வர இரண்டு  வருடம் இருக்கும் போதே சன்னாசிநல்லூர் மணல் குவாரி பிரச்சினையில் போராடினோம். ஊர் மக்கள் 500 பேரோடு சேர்த்து, எங்கள் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது. நான் தான் முதல் குற்றவாளி அந்த வழக்கில். தேர்தல் வர மூன்று வருடம் இருக்கும் போதே முந்திரிக்கு நிவாரணம் கோரி போராடினோம். அப்போது வேறு  யாரும் களத்திற்கு வரவில்லை.

இதைவிடக் கொடுமை இந்தப் பிரச்சினையில் பாதிக்கப்படும் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் நான்கு வீட்டினர் கூட திமுகவினராக இருக்கமாட்டார்கள். என்னை இதில் நாடியவரே பாமக தோழர் சேட்டு தான். இன்றும் அவர் பாமக தான். அவர் ஆளுங்கட்சி உட்பட அனைத்துக் கட்சியினர் உதவியையும் நாடி இருக்கிறார். ஆனால், ஜனவரி 26ல் களத்தில் நின்றது நாங்கள் தான். தொடர்ந்து நிற்கிறோம், நிற்போம்.

இந்த அறிவாளிகளின் விமர்சனம் எல்லாம் பொருட்டே இல்லை.

காலை வீராக்கனில் பேச்சுவார்த்தை முடிந்து அதிகாரிகளோடு மேற்கே நடந்த போது, நிறுத்தி "கிழக்கே வருவீங்கள்ல தம்பி"என்றுக் கேட்டாரே அந்த அம்மாவின் கண்களில் இருந்த பரிதவிப்பு,

நாகல்குழி முடித்து மீண்டும் வீராக்கன் கிராமத்தை தாண்டும் போது கொடி கட்டிய வாகனத்தைத் தேடி, உள்ளே யாரிருக்கிறார் என்பதை கூட அறியாமல் வணங்கிய 80 வயது பெரியவரின் நன்றி,

உஞ்சினி கிராமத்தில் கடைசியாக பணி முடித்து கிளம்பும் போது வணங்கி அனுப்பினார்களே, அவர்களது அன்பு, இவை போதும்.

அந்தப் பாமரர்களின் ஆனந்தக் கண்ணீரின் ஈரம் போதும். உங்கள் வறட்டு வாதம் தூசு, அந்த உணர்வுக்கு முன்.

# அரசியல்வாதி எல்லோரும் அயோக்கியன் அல்ல ! .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக