பிரபலமான இடுகைகள்

ஸ்டாலின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்டாலின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

இயங்கிக் கொண்டே இருப்பவர்...

இவர் எப்படி இப்படி இயங்குகிறார், இவர் எப்படி. இப்படி உழைக்கிறார், இவர் எப்படி இப்படி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் என பிரமிக்க வைக்கிற தலைவர் ஒருவர் உண்டென்றால், அவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தான்.

முதல் நாள் கன்னியாகுமரியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்தி வரும். மறுநாள் திருவள்ளூரில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்ற செய்தி வரும். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நாள் என சுற்றுப் பயணங்கள்.

இந்த சுற்றுப்பயணங்களுக்கு இடையில் ஒரு நாள் சென்னை என்றால், தனது தொகுதியான கொளத்தூரில் இருப்பார். மாலை அறிவாலயத்தில் கழகப் பணி. சட்டமன்றம் நடைபெற்றால், அதில் கலந்து கொண்டு மக்கள் பிரச்சினைகளை எடுத்து வைத்து வாதாடுவார்.

இப்படி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் இயங்கிக் கொண்டிருக்கிறவர் அவர்.

ஆனால் இந்த செய்திகள் மக்களை சென்றடைகிறதா என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. காரணம் அவர் மாவட்டங்களில் கலந்து கொள்கிற நிகழ்ச்சிகள், அந்தந்த மாவட்ட செய்திதாள்களில் இடம் பெறும். மற்ற மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை.

முரசொலியில் இந்த செய்திகள் வரும். ஆனால் அதை கழகத் தோழர்கள் மாத்திரமே படிப்பார்கள் . தொலைக்காட்சிகள் பரபரப்பு செய்திகளின்  பின் ஓடுவதால் , குறிப்பிட்ட நேரமே இந்த செய்திகள் இடம் பெறும்.

தளபதி அவர்கள் முகநூலில் இணைந்த பிறகு, இந்தக் குறை சற்று நீங்கியது. தளபதி அவர்கள் கலந்து கொள்கிற நிகழ்வுகள், நாட்டு நடப்பு குறித்த அவரது கருத்துக்களை தெரிந்துக் கொள்ள ஏதுவானது.

இப்போது அதில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார் தளபதி அவர்கள். 'M.K. Stalin’ என்கிற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

செயலி பதிவிறக்கம் குறித்த சுட்டிகள் :-

Android - http://bit.ly/1LDtuem
iOS - http://bit.ly/1F94HtB
Windows - http://bit.ly/1Ju2yNm

அவர் செய்திகளை அறிவதற்கு மாத்திரம் இல்லாமல், நாட்டின் பிரச்சினைகள் குறித்தும், அவரது தொகுதி குறித்தும். நமது கருத்துக்களை  தெரிவிக்கவும் இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் தளபதி.

திமுகவை சேர்ந்தவர்கள் மாத்திரம் அல்ல, மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களும் இதில் அவரை தொடர்ந்தால் அவர் குறித்த கண்ணோட்டம் மாறும்.

அரசியல் மீது வெறுப்பு கொண்டவர்களும் இந்த செயலி மூலம் அவரது இடையறதா பணி குறித்து அறிந்தால், அவர்களுக்கு அரசியல் குறித்த பார்வை மாறும்.

# இயங்கிக் கொண்டே இருப்பவரை தொடர்வோமே, நாமும் இயங்குவோமே !       

ஞாயிறு, 1 மார்ச், 2015

கர்வமாய் சொல்கிறேன்,"இவர் எங்கள் தலைவர் !"

ஒரு நிமிடம் எனக்கு ஒன்றும் புரியவில்லை. தான் எழுப்ப இருந்த, நாட்டை உலுக்கும் மிக முக்கிய பிரச்சினையை ஒரு இளைய (ஜூனியர்) எம்.எல்.ஏ-விடம் ஒப்படைக்கும் தலைவர்.

முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு அலைபேசியில் சொல்லியபடி தளபதி அவர்களை சந்தித்தேன். சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள திமுக அலுவலகம்.

தளபதி அவர்கள், தனது பைலில் இருந்து  ஒரு ஆங்கில நாளிதழை எடுத்துத் தருகிறார்கள். தாதுமணல் குறித்த விபரங்கள்.

இரண்டு நாட்களாக இந்த முக்கிய பிரச்சினை குறித்து அரசின் விளக்கத்தை பெற தளபதி  முயன்றார்கள். ஆனால் சபாநாயகர் அனுமதிக்கவில்லை.

"சங்கர், இன்றும் சபாநாயகர் இதற்கு அனுமதி அளிக்க மாட்டார். ஆளுநர் உரை மீதான விவாதத்தில் நீங்கள் பேசும் போது, தாதுமணல் குறித்து வினா எழுப்புங்கள்" என்றார்கள் தளபதி அவர்கள்.

என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். இதே அவையில் தான், தன் அமைச்சர்களை கூட பேச விடாமல், ஒரு ரூபாய் அறிவிப்பை கூட தானே வெளியிட்ட ஒரு முதலமைச்சரும் இருந்தார்.

அவையில் தாதுமணல் பிரச்சினை  குறித்து பேசினேன். அமைச்சர், முதல்வர் என என்னோடு மல்லுக்கட்ட, தளபதி எனக்கு துணையாக வாதிட்டார்கள்.

தளபதி எழுந்ததால், முதல்வர் ஓ.பி.எஸ் வியர்க்க விறுவிறுக்க ஒரு நீண்ட அறிக்கையை படித்து சமாளித்தார்.

அவை முடிந்து வெளியே,"சங்கர், கரெக்டா பிடிச்சிங்க" என்று பாராட்டினார் தளபதி .

மறுநாள் முன்னாள் அமைச்சர் கோசி.மணி அவர்களது பெயரன் திருமாவளவன் திருமணத்தை தலைமை ஏற்று நடத்த கும்பகோணம் சென்று விட்டார்.

வெள்ளிக்கிழமை , புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாதுமணல் பிரச்சினையில் விவாதம். கலந்துக் கொண்டேன். 

திங்கட்கிழமை மீண்டும் அவை. தொலைக்காட்சி விவாதத்தில் மக்கள் கருத்து அரசுக்கு எதிராக இருந்ததை கழக கொறடா அண்ணன் சக்கரபாணி அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.

"தளபதி அவர்களிடம் சொல்லிட்டியா?" என்று கேட்டார். இல்லை என்றேன். "போய் சொல்லு" என்றார்.

மூத்த எம்.எல்.ஏக்கள் சூழ தளபதி அமர்ந்திருந்தார்கள். தயங்கியபடியே ஆரம்பித்தேன்,"புதிய தலைமுறை தொலைக்காட்சியில்". இடைமறித்தார்கள் தளபதி.

"ஆமாம் சங்கர், திருச்சியில நானும் பார்த்தேன். நல்லா வாதம் வச்சீங்க. அதிமுக சார்பாக பேசியவர் பதில் சொல்ல தடுமாறினார்". தளபதி அவர்களது பாராட்டில் வானத்தைத் தொட்டேன்.

"நான் முதல் அத்தியாயத்தை எழுதினேன், இரண்டாம் அத்தியாயத்தை தம்பி கருணாநிதி எழுதுவார்" என்ற அண்ணாவை கேள்விப்பட்டிருக்கிறேன்.

மாநாடுகளிலும், சட்டசபையிலும் தனது தம்பிமார்களை பேசவிட்டு, கேட்டு ரசித்து, பாராட்டும் தலைவர் கலைஞரை பார்த்திருக்கிறேன்.

தளபதி அவர்களிடம் உணர்ந்தேன்.

# கர்வமாய் சொல்கிறேன்,"இவர் எங்கள் தலைவர் !"

_எஸ்.எஸ்.சிவசங்கர்.

சனி, 10 ஜனவரி, 2015

காலம் தான் காத்திருக்கிறது, இந்தத் தலைவனுக்காக !

தளபதி மு.க.ஸ்டாலின் என்றால் இன்று நாடறியும். அது தலைவர் கலைஞரின் மகனாக அறியப்பட்ட நேரம். ஆனால் அவர் அப்படி நடந்துக் கொள்ளவில்லை. கழகத்தின் தொண்டனாகவே நடந்து கொண்டார். பள்ளிப் பிராயத்திலேயே கழக ஈடுபாடு.

                       

பேரறிஞர் அண்ணாவை அழைத்து கழகப் பிரச்சார நாடகம் நடத்த நாள் கேட்டு, நடத்துகிறார். பேராசியர் அன்பழகன் அவர்களை அழைத்து வந்து, தன் வயதை ஒத்த  மாணவர்களை ஒருங்கிணைத்து “இளைஞர் திமுக” என்ற அமைப்பை துவங்குகிறார்.

இந்தப் புகைப்படம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தப் புகைப்படம். பதினைந்து வயது இளைஞராக காட்சியளிக்கும் தளபதி. அப்போது இந்த அணி பெரும் உருவெடுக்கும், இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் என்று எண்ணியிருக்க வாய்ப்பு இல்லை.

பெரும் திட்டம் தீட்டும் வயதும் அல்ல அது. மற்ற பிள்ளைகள் விளையாட்டில் நாட்டம் கொள்ளும் நேரத்தில், இவர் கொள்கையில் நாட்டம் கொண்டார். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, 1980-ல், இளைஞரணி ஒரு  அமைப்பாக உருவெடுத்தது, அவரது உழைப்பால்.

மற்ற தலைவர்கள் வீட்டுப் பிள்ளை போல எதுவும் இவருக்கு எளிதாக வாய்த்திடவில்லை, கடும் உழைப்பு இருந்தும். அதற்காக அவர் கிஞ்சித்தும் துவள்வதும் இல்லை. தன் உழைப்பை நிறுத்துவதுமில்லை.

1975-ல் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்து, சித்ரவரை செய்து அவரது தியாக உணர்விற்கு சான்றிதழ் கொடுத்தது இந்திரா அரசு.

1989-ல் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர், அவரது உழைப்பிற்கு அதுவே தாமதம் தான். 1996-ல் கழகம் ஆட்சி அமைத்த போது, அமைச்சர் ஆவார் என்று நாடே ஆவலாக பார்த்தபோது, தலைவர் கலைஞர் தவிர்த்தார், தன் மகன் என்பதால்.

ஆனாலும் அசரவில்லை தளபதி அவர்கள். சென்னை மேயரானார். சிங்கார சென்னையாக செதுக்கினார். அவர் கட்டிய மேம்பாலங்கள் தான், இன்றும் சென்னை சீராக இயங்க காரணம். தன் முத்திரையை பதித்து, 2001-ல் கழகம் ஆட்சியை இழந்த போதும், மீண்டும் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காழ்ப்புணர்ச்சியால் ஜெயலலிதா, இவருக்காக ஒரு சட்டத்தையே கொண்டு வந்து மேயர் பதவியை பறித்தார். ஆனாலும் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக தன் பணி தொடர்ந்தார். இன்னொருபுறம் கழகத்தின் இளைஞரணி செயலாளராக பணியாற்றியவர், துணை பொதுச் செயலாளரானார்.

எல்லாமே படிப்படியான வளர்ச்சி, உயர்வு. ஆனாலும் அவர் உழைப்புக்கானவை அல்ல. தலைவரின் மகன் என்பதால் தூக்கி விடப்பட்டார் என விமர்சனம் வந்து விடக்கூடாது என்பதனாலேயே தாமதம். கடந்த கழகத் தேர்தலில், பொருளாளர் ஆனார். இந்தப் பொதுக்குழுவில் பதவி உயர்வு பெறுவாரா என பத்திரிக்கைகள் பட்டிமன்றங்கள் நடத்தின.

இந்தியாவின் மற்ற தலைவர்களின் மகன்கள் முதல்வராகி விட்டனர் என எழுதிப் பார்த்தார்கள். வதந்தீ’களுக்கு இடம் கொடுக்காமல் முற்றுப்புள்ளி வைத்தார் தள்பதி. இரண்டாவது முறையாக மீண்டும் பொருளாளர் பொறுப்பு. தலைவர் கலைஞர் முத்திரை பதித்த அதே பொறுப்பு. இவரும் முத்திரை பதித்தார்.

தலைவர் கலைஞரே சொன்னது போல, தளபதி என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு. தனக்கான காலத்திற்காக இவர் காத்திருக்கவில்லை, உழைத்துக் கொண்டே இருக்கிறார்.


# காலம் தான் காத்திருக்கிறது, இந்தத் தலைவனுக்காக !

                  

திங்கள், 17 நவம்பர், 2014

போன் வந்தப்ப நம்பர பாத்தீங்களா ?

“வணக்கம். நான் மு.க.ஸ்டாலின் பேசறேன்”
“வணக்கம். நான் கலைஞர் பேசறேன்”


.
.
“நீங்க கருணாநிதி தானே?”
“ஆமாங்க”
“ஆலத்தூர் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தானே?”
“ஆமாங்க”
.
.
“நான் அறிவாலயத்திலிருந்து ஸ்டாலின் பேசறேன்”
“ஏங்க, ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் அவரு, பெரம்பலூர் வந்து என்னைப் பாத்துட்டு போனாரு. நீங்க யாருங்க?”
“ஸ்டாலின் தான் பேசறேங்க”
“நான் அவருக்கே தலைவர் கலைஞர்ங்க”
(இவர் பெயர் கருணாநிதி என்பதால், நாங்கள் பெயர் சொல்லி அழைக்க தயங்கி, அவரை “கலைஞர்” என்று அழைப்போம். அதில் அவர் கலைஞராகவே ஆகிவிட்டார்)
“உங்களுக்கு நான் எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியல”
“திமுக-காரனுக்கு யாரும் புரிய வைக்க வேண்டாங்க. நல்லா புரியும்”
“போன் வந்தப்ப நம்பர பாத்தீங்களா?”
“ஆமாம். Private Number-னு வந்தது”
(இப்போ தான் நம்ம ஆளுக்கு லேசா புரிய ஆரம்பிச்சுது, குரல் தளபதி மாதிரி தான் இருக்குன்னு)
“அய்யா, அய்யா நான் பிரைவேட் நம்பர்ன உடனே வெளிநாட்டு கால்னு நினைச்சேன்”
“எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன் அய்யா”
“ஆய்வுக்கு வந்தீங்களே. எப்படி இருந்தது?”
“உங்கள பார்த்ததும், உங்கக்கிட்ட பேசினதும் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் அய்யா. தெரியாம பேசிட்டேன் அய்யா”
“பரவாயில்ல. ஊருக்கு வரும் போது பார்க்கிறேன், தலைவராச்சே”
சிரிப்போடு முடித்திருக்கிறார் தளபதி அவர்கள்.

***********************************

பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் காட்டுராஜா ஒரு நிகழ்ச்சியில் இருந்திருக்கிறார். அதே போல் அழைப்பு
“வணக்கம். நான் ஸ்டாலின் பேசறேன்”
(நம்பமுடியாமல்) “யாருங்க?”
“சென்னையிலிருந்து மு.க.ஸ்டாலின் பேசறேன்”

*************************************

இப்படியே பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இருந்து கிளைக்கழக ஆய்வில் கலந்து கொண்ட நூற்று அய்ம்பதும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து இரண்டு நாட்கள் அலைபேசியில் அழைத்து பேசியிருக்கிறார் தளபதி அவர்கள். தளபதியோடு பேசிய மகிழ்ச்சியை எங்களோடு பகிர்ந்து கொண்டார்கள் தோழர்கள்.
.
மூன்றாம் நாள் எனக்கும் அழைப்பு
“சங்கர், எங்க இருக்கீங்க?”
“அரியலூர்லங்க அண்ணன்”
“ஊர்ல என்ன விசேஷம்?”
“நீங்க எல்லோருக்கும் பேசினது தாங்க அண்ணா விசேஷம். எல்லோருக்கும் மகிழ்ச்சி, நீங்க அழைச்சு பேசியது”

************************************

அண்ணன் ஆ.ராசா தளபதியை சந்தித்திருக்கிறார்கள்.
“உங்க ஊர்காரங்க அவ்வளவு ஈசியா நம்ப மாட்டேங்கிறாங்க. நான் பேசறேன்னு உறுதிபடுத்திக்கிட்டு தான் பேசறாங்க” சிரிப்போடு தளபதி சொல்லி இருக்கிறார்கள்.

**********************************

ஆலத்தூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கருணாநிதியும், காட்டுராஜாவும் தளபதியை சந்தித்தார்கள்.

“அய்யா, தெரியாம நடந்துடுச்சி. இவங்க குடும்பமே கழகக் குடுமபம். இவர் பெயர் தலைவர் பெயர் (கருணாநிதி). இவர் தம்பி பெயர் பேராசிரியர் பெயர் (அன்பழகன்). அடுத்த தம்பி பெயர் உங்கள் பெயர் (ஸ்டாலின்). இவர் தம்பிகள், நண்பர்கள் வெளி நாட்டில இருக்காங்க. அங்கிருந்து அழைக்கும் போது சமயத்தில் “பிரைவேட் நம்பர்”னு வரும். யாரோ விளையாடறாங்கன்னு நினைச்சு பேசிட்டாரு”
.
“பரவாயில்ல. இது சகஜம் தான்” என்ற தளபதி அவர்கள் அருகில் இருந்த அமைப்பு செயலாளர் அண்ணன் ஆர்.எஸ்.பாரதி அவர்களிடம் இவரைக் காட்டி “இவரு தான் ஃபோன்ல எங்கிட்ட சண்டை போட்டவர்” என்று சிரிக்க, பயத்தோடு போனவர்கள் மகிழ்வோடு திரும்பினார்கள்.

# தொண்டர்களின் தோழன் !

திங்கள், 21 அக்டோபர், 2013

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட சுற்றுப்பயணம் - தளபதி கடிதம்

நாம ஒரு நிலைத்தகவல் யோசித்து வைத்திருக்கும் போது, அத வேறு ஒருவர் பதிவு செய்தா எப்படி இருக்கும். அப்படி தளபதி அவர்கள் கலந்து கொண்ட அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட இளைஞர் பயிற்சி பாசறை மற்றும் அரியலூரில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்புப் பொதுக்கூட்டம் குறித்து கட்டுரை தயார் செய்ய யோசித்திருந்தேன்.

நேற்று காலை சென்னை பதிப்பு முரசொலியில் அப்படியே கடிதமாக வந்திருந்தது. ஆம், தளபதி அவர்கள் உங்களில் ஒருவன் என்று தொடர்ந்து எழுதி வரும் கடித வரிசையில் " நமது பயணமும் தொடர வேண்டும்" என்ற தலைப்பில் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட சுற்றுப்பயணம் குறித்து எழுதியிருக்கிறார்கள்.

அதைத் தாண்டி மிகுதியாக சொல்ல ஒன்றுமில்லை என்னும் அளவிற்கு நுணுக்கமாக நிகழ்ச்சி குறித்து விவரித்திருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய செய்தி, அவரது உழைப்பு.



ஞாயிறு, 20 அக்டோபர், 2013

சுழலும் சூரியன் - நேரடி அனுபவம்

5-ம் தேதி மாலையே தளபதி அவர்கள் சென்னையிலிருந்து கிளம்பி பெரம்பலூர் வந்து தங்கி விடுவதாக திட்டமிடப் பட்டிருந்தது. பெரியார் திடலில் ஒரு நிகழ்வில் பங்கேற்க வேண்டிய நிலையில், அதை முடித்து இரவு 10.30 மலைக்கோட்டை விரைவு ரயிலில் எழும்புரிலிருந்து கிளம்பினார்கள்.

விடியற்காலை 3 மணிக்கு வரவேண்டிய ரயில் வழக்கம் போல் தாமதமாக வந்தது. 

                          DSC08280.JPG

அரியலூர் ரயில் நிலையத்தில் கழகத் தோழர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு 4 மணிக்கு அரியலூரிலிருந்து புறப்பட்டு, பெரம்பலூர் அண்ணன் ராசா அவர்கள் அலுவலகத்தை அடைந்தார்கள். அப்போது 4.45 ஆகியிருக்கும்.

காலை பணிகள் முடித்து, உணவருந்தி, காலை 08.30 மணிக்கு காரில் ஏறிவிட்டார். வழி நெடுக வரவேற்பை ஏற்றுக் கொண்டு மலையாளப்பட்டியை அடையும் போது 09.45.

                         

 அங்கு கழகக் கொடியேற்றி விட்டு மேடைக்கு வந்த போது மணி 10.00. நண்பகல் 12.30 வரை நாற்காலியை விட்டு எழுந்திரிக்காமல் நிகழ்வை கவனித்தார் தளபதி. ( அதற்குள் நான் 4 தடவை எழுந்து மேடையிலேயே உலாத்திவிட்டேன்).

இரண்டு கி.மீ தள்ளியிருந்த தங்கும் இடத்திற்கு சென்று உணவருந்தி விட்டு அங்கு கழக கொடியை ஏற்றி வைத்து விட்டு சரியாக இரண்டு மணிக்கு மேடைக்கு வந்து விட்டார். மாலை 4.30 வரை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கலந்து கொண்ட 750 இளைஞரணி தோழர்களுக்கும் நினைவு பரிசு வழங்கினார், 50 தொண்டரணி தோழர்களுக்கும் வழங்கினார். 
                                  

மணி 5.45, மலையாளப்பட்டியிலிருந்து கிளம்பினார்.வழிநெடுக சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள் வரவேற்பை கையசைத்து ஏற்றுக் கொண்டு பெரம்பலூர் அண்ணன் ராசா அவர்கள் அலுவலகம் வந்த போது மணி 7.00. 

                               

குளித்து உடைமாற்றி கிளம்பும் போது மணி 07.30. வழியில் வரவேற்புகளை ஏற்று அரியலூர் மேடை ஏறிய போது 08.15. 

                                                                 
                                                               
                                                                             
                              

தளபதி அவர்கள் பேச ஆரம்பித்தப்போது மணி 08.45. ஒரு மணி நேரம் பேசினார்கள். அரியலூரிலிருந்து கிளம்பும் போது மணி 09.55. கார் பயணம். வழியில் உணவருந்தி சென்னை சென்றடைய எப்படியும் நள்ளிரவு 02.30 ஆகியிருக்கும். 

15 நாள் அலைச்சலில் அசந்து நான் தாமதமாக எழுந்து, கூட்டம் குறித்த செய்திக்காக நாளிதழ்களை டீ'யோடு புரட்டியப் போது மணி காலை 9.00. மொபைல் அழைத்தது. 

"என்ன சிவசங்கர், களைப்பு நீங்கி எழுந்தாச்சா ? கூட்டம் சிறப்பு" அழைத்தவர் தளபதி தான், வேறு யார் !

# கூட்டிக் கழிச்சு பாருங்க, கணக்கு சரியா வரும்.... உழைப்புன்னா தளபதி தான்.

புதன், 11 செப்டம்பர், 2013

தளபதி வழிப்பயணம் - சுற்றுப்பயணம் ஆனது....


09.09.2013 அன்று தளபதி அவர்கள் தலைமையில் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி அவர்கள் இல்லத் திருமணம், கும்பகோணத்தில். திருமணம் முடிந்து திருச்சி சென்று விமானத்தில் செல்வதாக இருந்ததை கார் பயணமாக சென்னை செல்வதாக முடிவு மாறியது. குடந்தையிலிருந்து மதனத்தூர் கொள்ளிடம் பாலம் வழியாக தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், விருத்தாசலம் வழியாக உளுந்தூர்பேட்டையில் நெடுஞ்சாலை அடைவது என திட்டம் இறுதியானது.

தளபதி அவர்கள் தற்போது கார் பயணத்தையே அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். மக்களோடு தொடர்புடையவராக இருப்பதற்கும், செல்கின்ற வழியில் இருக்கும் ஊர்களின் நிலை அறியவும் இது உதவுகிறது. அதனால் தான் கார் பயணத்தை விரும்புவதாக நினைக்கிறேன்.


தளபதி திருமணம் முடித்து தா.பழூர் வருகை தந்த போது, ஒன்றிய திமுக அலுவலகம் முன்பு கழகத் தோழர்கள் திரண்டு வரவேற்றோம். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அண்ணன் சுபா.சந்திரசேகர் அவர்கள் கழகத் தோழர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவதை தெரிவிக்க தளபதி அவர்கள் உடனே இறங்கி அலுவலகத்தின் உள் வந்தார்கள், உடன் தளபதி அவர்களின் துணைவியார் அண்ணியார் அவர்களும் வந்தார்கள்.

கழகத் தோழர்கள் வரிசையாக வந்து இளைஞர் அணி வளர்ச்சி நிதி வழங்கி சால்வை, துண்டு வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். புகைப்படம் எடுத்த மூன்று பேரில் ஒருவரிடம் தளபதி அவர்கள், " உங்க கேமராவில் பிளாஷ் செயல்படவில்லை. புகைப்படம் எடுத்தவர்களுக்கு கொடுக்கலைன்னா ஏமாந்துவிடுவார்கள்" என்றார். தளபதியின் அலர்ட்னெஸை கண்ட புகைப்பட தோழர் அயர்ந்து போனார்.

புகைப்படம் எடுத்துக் கொண்ட ஒரு தோழர் வெளியே செல்லாமல் உள்ளேயே சுற்றி வருவதை தளபதி அவர்கள் கவனித்து விட்டார்கள. "ஏன், மீண்டும் புகைப்படம் எடுக்கனுமா ?" எனக் கேட்க ஒன்றிய செயலாளர் க.சொ.க.கண்ணன் " அண்ணா, அவர் எங்கள் ஒன்றியத்தை சேர்ந்த கழகத் தோழர். தலைமைக் கழகப் பேச்சாளர் இளஞ்செழியன். தலைவர் கலைஞரின் 90வது பிறந்தநாளை ஒட்டி 90 கவிதைகள் எழுதி ஒரு நூலாக தயார் செய்திருக்கிறார். அதை நீங்கள் வெளியிட்டால் எங்களுக்கு பெருமை" என சொன்னார்.

தளபதி அவர்கள் உடன் ஒப்புக் கொண்டு, "தாய் தமிழ் 90" என்ற கவிதை நூலை, வாங்கிக் கொண்டு "யார் வாங்குவது" எனக் கேட்க, ஒன்றிய செயலாளர் என்னைக் காட்டினார். தளபதி அவர்கள் வழங்க பெற்றுக் கொண்டேன். நூலாசிரியர் இளஞ்செழியனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அவருக்கு இது வாழ்நாள் சாதனையல்லவா....

Photo: இன்று (9-9-13) தா.பழூர் ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் கலைஞரின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு தலைமை கழக பேச்சாளர் இரா.இளஞ்செழியன் அவர்கள் எழுதிய ”தாய் தமிழ்” எனும் கவிதை நூலினை வருங்கால தமிழகம் தளபதி அவர்கள் வெளியிட்டார்கள்.மாவட்ட கழக செயலாளர் அண்ணன் எஸ்.எஸ்.சிவசங்கர்,மாநில இளைஞரணி துணை செயலாளர் சுபா.சந்திரசேகர்,குடந்தை சட்ட மன்ற உறுப்பினர் க.அன்பழகன்,ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் தனசேகர்,மற்றும் கழக முன்னோடிகள் உள்ளனர்..

தளபதி அவர்களிடத்தில் ஒன்றிய செயலாளர் மினிட் நோட்டில் கையொப்பம் பெற கொடுக்க, கட்சி அலுவலகம் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்று தளபதி அவர்கள் கேட்டார்கள். மறைந்த சட்டமன்ற உறுப்பினர் க.சொ.கணேசன் 
அவர்களால் கட்டப்பட்டு 92ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட புகைப்படத்தை காட்ட


 தளபதி அவர்கள் மகிழ்ந்தார்கள். "தலைவர் அவர்களால் திறக்கப்பட்ட அலுவகத்தை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைந்தேன். பணிகள் சிறப்பாக உள்ளது, தொடரட்டும்" என எழுதி கையெழுத்து இட்டார்கள்.

            

ஜெயங்கொண்டத்தில் நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்று பயணம் தொடர்ந்தார்கள். அலைபேசியில் அழைத்த ஒசெ க.சொ.க.கண்ணன் "தனியாக தேதி பெற்று இருந்தால் கூட எங்களுக்கு இவ்வளவு சிறப்பு கிடைத்திருக்காது. தளபதி எங்களை பெருமைப்படுத்தி விட்டார்" என அகமகிழ்ந்தார்.

ஆண்டிமடத்தில் ஒன்றிய செயலாளர் தர்மதுரை அவர்கள் தலைமையில் கழகத் தோழர்கள் வரவேற்பளித்தனர். அங்கு கழக சட்டத்திருத்தக் குழு உறுப்பினர் எஸ்.சிவசுப்ரமணியன் (எனது தந்தையார்) காரில் இருந்து இறங்கி நடக்க சிரமப் படுவதை கண்ட தளபதி அவர்கள் காரில் இருந்து இறங்கி தானே அருகே சென்று வேட்டியினை பெற்றுக் கொண்டார். "உடல் நலமாக இருக்கிறதா ? நீங்கள் ஏன் வெயிலில் காத்திருக்கிறீர்கள்" எனக் கேட்டு காரில் அமர சொல்லிவிட்டு பிறகு தனது காருக்கு திரும்பினார். அவர் எளிமையை கண்டு, மூத்த கழகத்தவரை மதிக்கின்ற பாங்கு கண்டு பொதுமக்கள் பிரமித்து பார்த்தனர். 

Photo


தளபதி சென்னை நோக்கி கிளம்பினார்கள். தளபதி அவர்களுக்கு இது தினம் மேற்கொள்ளும் பயணத்தில் ஒன்று, வழக்கமான நிகழ்வு. ஆனால் எங்கள் மாவட்டத்துக் கழகத் தோழர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத நிகழ்வு.

# நம்பிக்கையான எதிர்காலம் !

ஞாயிறு, 3 மார்ச், 2013

நல்லா சொல்லுவோம், குடும்பக் கட்சி

மேடையில் ஏறுவதற்குள் உடம்பில் இருந்த நீரெல்லாம் வியர்வையாக வெளி வந்து விட்டதோ என சந்தேகமாகிவிட்டது. தளபதி அவர்கள் பிறந்தநாள் விழாவில் தான்....

ராயப்பேட்டை வழக்கம் போல் விழாக்கோலம் பூண்டிருந்தது. YMCA வழக்கம்போல் 8.30க்கு நிரம்பிவிட்டது. வழக்கம்போல் கழகத் தோழர்கள் மாவட்டம் வாரியாக திரண்டிருந்தனர், இளைஞரணி தோழர்கள் இன்னொருபுறம்.

10 மணிக்கு தளபதி அவர்கள் வந்தவுடன் திடல், மின்சாரம் வந்த கிராமம் போல் பிரகாசமானது. அப்போதே வரிசை களை கட்டியிருந்தது. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அண்ணன் துரைசாமி அவர்களுடன் வரிசையில் இணைந்து மெல்ல நகர்ந்தோம்.

மேடைக்கு இரண்டு புறமும் படி அமைத்திருந்தார்கள். நாங்கள் சென்ற பக்கத்தில் திடீரென நிறுத்திவிட்டார்கள். இது இறங்கும் வழி என அறிவித்துவிட்டார்கள். கிட்டதட்ட மேடையில் ஏறும் நிலை அப்போது.

இறங்கலாம் என்றால் பின்னால் நிற்பவர்கள் எங்களை முன்னோக்கி தள்ளிக் கொண்டிருந்தார்கள். இந்த தள்ளுமுள்ளு பயணத்தில் அண்ணன் தாமோ.அன்பரசன் அவர்களும் மாட்டிக்கொண்டிருந்தார்.

மேடையை ஒழுங்கு செய்து கொண்டிருந்த சகோதரர் TRB.ராஜா வணக்கம் வைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதற்குள் பின்புறத்திலிருந்து வந்த அலையில், மேடையில் கிட்டத்தட்ட போய் விழுந்தோம். விழவில்லை, விழுந்தமாதிரி.

இப்போது இருபுறமும் ஏறிய கூட்டத்தால் மேடை மக்கள் கடல் ஆகியிருந்தது. மேடை திணற ஆரம்பித்தது. பாதுகாப்பு கருதி தொண்டர் அணியினர் தளபதி அவர்களை மேடைக்கு பின்புறம் இருந்த அறைக்கு அழைத்து சென்று விட்டு, மேடையை ஒழுங்கு படுத்தத் துவங்கினர்.

இந்த நேரத்தில் பின்புறம் நின்ற ஒரு குழுவிலிருந்து வாழ்த்து முழக்கம், " தளபதி வாழ்க". திடீரென ஒரு குரல் " ஸ்டாலின் வாழ்க". அந்தக் குழுவிலிருந்த இருவர் கிசுகிசுத்துக் கொண்டனர், " பெயரை சொல்லலாமா ?" . ஆனால் அந்த நபர் தொடர்ந்து பெயர் சொல்லி வாழ்த்திக் கொண்டிருந்தார்.

இதுதான் வழக்கமானவற்றிலிருந்து வித்தியாசமான நிகழ்ச்சி, பெயர் சொல்லி முழக்கம் எழுப்புவது. ( பெயர் சொல்வது தவறில்லை, ஆனால் வழக்கமில்லை. அவர்களை யாரும் தடுக்கவும் இல்லை )

அந்தக் குழு முழுவதும் இளைஞர்கள். அரசியல் வாடை இல்லாதவர்களாக இருந்தார்கள். ஏதோ IT நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். தளபதி மேல் கொண்ட ஈர்ப்பால் வாழ்த்த வந்திருக்கிறார்கள். புதியத் தலைமுறையின் வருகை.

மீண்டும் தளபதி மேடைக்கு வந்தார்கள், வாழ்த்துக்களை பெறத் துவங்கினார்கள். மறுபடியும் வரிசைப் படுத்தினார்கள். கூட்டம் தானாக நகர்த்தி சென்றது. தளபதியை நெருங்கும் போது உடை கசங்கி, தலைகலைந்து களைப்படைந்து விட்டோம்.

கழக முண்ணனியினர், அண்ணியார் சூழ தளபதி நின்று கொண்டிருந்தார்கள். தேர்தல் நிதி கொடுத்துவிட்டு வணங்கினேன். அவ்வளவு நெருக்கடியிலும் தளபதி அவர்கள் வணங்கிவிட்டு கேட்டார் " அப்பா எப்படி இருக்காங்க ?"

களைப்பு முழுதும் நீங்கி புத்துணர்வு பெற்றேன்.

# நல்லா சொல்லுவோம் " குடும்பக் கட்சி , குடும்ப உணர்வுக் கொண்டக் கட்சி " !

சனி, 1 டிசம்பர், 2012

தளபதியின் தலைமைப் பண்பு


தனக்கு தளகர்த்தர்களாக இருக்கின்றவர்களின் உழைப்பை அங்கீகரிப்பது, பாராட்டுவது தலைமைப் பண்பு. அதனையும் மற்றோர் அறிய பாராட்டுவது உயரியப் பண்பு..

பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் வரிசையில் தளபதி அவர்கள் தனது தலைமைப் பண்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மறைமலை நகரில், சமீபத்தில் நடந்த மாநில இளைஞரணி கூட்டம் முடிந்து காரில் ஏறிய தளபதி அவர்கள், முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் அவர்களிடத்திலும், எம்.பி சுகவனம் அவர்களிட்த்திலும், “ மாநில துணை அமைப்பாளர்களான உங்களுக்கு நன்றி கூற தவறிவிட்டேன் ”  என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு அவர்கள் உங்களோடு இணைந்துப் பணியாற்றுகிற எங்களுக்கு நீங்கள் நன்றி சொல்வதா ? உங்களுக்கு கிடைக்கிற பாராட்டே எங்களுக்குமானது “, என பதிலளித்திருக்கின்றனர்.

ஆனால் மறுநாள் முரசொலியில் நன்றி! நன்றி!! நன்றி காட்டுவேன் !!! என்ற தலைப்பில் ஒரு நன்றி கடிதம் எழுதிவிட்டு தான், மன நிம்மதி அடைந்திருக்கிறார் தளபதி .  

இளைஞர் அணியின் மாநிலத் துணைச் செயலாளர்களான நண்பரகள் மா.சுப்ரமணியன், இ.ஜி.சுகவனம், சேலம் இராஜேந்திரன், சுப.த.சம்பத், அசன் முகமது ஜின்னா, இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் இந்தக் கருத்தரங்கம் வெற்றி பெற பலநாட்கள் மறைமலைநகரில் இருந்து இரவுப் பகலாக மேற்பார்வையிட்டனர்.

மாநிலத் துணைச் செயலாளர்களில் ஒருவரான சுபா.சந்திரசேகர் அவர்கள் அமைதியோடும், அடக்கத்தோடும், ஆரவாரமின்றி ஓடியாடிப் பணியாற்றக்கூடியவர்.

இந்தக் கருத்தரங்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், அவரது தந்தையும், ஜெயங்கொண்டசோழபுரம் பேருராட்சி முன்னாள் தலைவராகவும், ஒன்றிய், பேரூர் அளவில் கழகப் பொறுப்புகள் வகித்தவருமான கவிஞர் அ.சுபா (எ) சுப்பையா அவர்கள் 15-11-2012 அன்று மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.

இந்நிலையில் அவர் கருத்தரங்கப் பணிக்கு வர இயலவில்லை; கருத்தரங்கப் பணி காரணமாக நானும் நேரில் சென்று விசாரிக்க இயலவில்லை என்ற ஏக்கத்தோடு, தொலைபேசி மூலம் சுபா.சந்திரசேகர் அவர்களிடம், அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் ஆறுதல் சொன்னதோடு, விரைவில் நேரில் வந்து விசாரிப்பதாகத் தெரிவித்தேன்.

சுபா.சந்திரசேகர் இளைஞர் அணியின் எந்த நிகழ்ச்சியானாலும் என்னோடு நிழலாக வரக்கூடியவர் பணியாற்றக்கூடியவர். ஆனால் அவரது தந்தை கவிஞர் சுபா மறைவெய்தியதையொட்டி மறைமலை நகர் நிகழ்ச்சியில் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை என்று கடிதத்தில் தளபதி அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

கடிதத்தில் கூறியிருந்தவாறு மறந்த கவிஞர் சுபா அவரகள் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற கடந்த 23.11.2012 அன்று காலை சென்னையிலிருந்து கிளம்பினார்கள் தளபதி.

இடையில் வீரபாண்டியர் மறைவுற்ற செய்தி கேட்டு நேராக சேலம் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அதனால் அன்று, தளபதி அவர்களால் வர இயலவில்லை.

இன்று சென்னையிலிருந்து காரில் ஜெயங்கொண்டம் வருகை தந்து கவிஞர் சுபா குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பிறகு இங்கிருந்து தஞ்சை சென்றார், நாளை நடைபெறவுள்ள மாநில இளைஞர் அணி நிகழ்ச்சியில் பங்கேற்க.

இந்த ஆறுதல் கூறும் நிகழ்ச்சிக்காக, இன்று அவர் காரில் பயணம் செய்த தூரம் 350 கி.மீ.

நன்றி சொல்லத் தவறியதற்கு வருந்தி, அதற்காக நன்றி கடிதம் எழுதி, வர இயலாமல் போன சுபா.சந்திரசேகர் அவர்களது பண்புகளை குறிப்பிட்டு, அவரது இல்ல துக்கத்தில் பங்கேற்க தனது சிரமத்தை பொருட்படுத்தாமல் வருகைப் புரிந்து ஆறுதல் கூறியிருக்கிறார் தளபதி.

# தளபதியின் தலைமைப் பண்பு, உயரியப் பண்பு !