பிரபலமான இடுகைகள்

புதன், 17 பிப்ரவரி, 2016

நல்லவர் களம் புகுவார்

அரசியல் பேசுவோம் (தொடர்ச்சி)

தமிழ்தாய் வாழ்த்தோடு நிகழ்ச்சியை துவங்கினார் திரு. "முதலில் அறிமுகப்படுத்திக் கொள்வோம். நான் சிவசங்கர். குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தேன்" என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இறுக்கம் தளர்ந்து அமர்ந்தார்கள்.

அவர்களும் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். கல்லூரியில் பணியாற்றுபவர்கள், மாணவர்கள், சட்டம் பயிலும் பெண், சுய தொழில் செய்பவர், டிரைவர், போட்டோ ஸ்டுடியோ வைத்திருப்பவர் என பல தரப்பினரும் வந்திருந்தனர். 12.00 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி 1.30 ஐ தாண்டியும் நீண்டது.

உரையாற்றாமல், கலந்துரையாடல் நிகழ்ச்சியாக கொண்டு சென்றோம்.

"அரசியல் பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க?" என்று நான் கேட்டது தான் தாமதம். வரிசையாக மைக் பிடித்தனர். கொள்ளையடிக்கிறது, ஊழல் செய்யறது, பதவிக்கு அலையறது என ஒவ்வொருவரும் ஒரு டெபனிஷன் கொடுத்தார்கள். இளைய தலைமுறைக்கு அரசியல் மீதான வெறுப்பு வெளிப்பட்டது.

ஒரு இளைஞரை கேட்டேன்,"உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?". "விக்ரம்". "வேறு நடிகர் படத்துக்கு போகனும்னு நினைக்கிற உங்க நண்பர்களை, விக்ரம் படத்துக்கு அழைத்து செல்ல எப்படி பேசுவீங்க?". "கருத்துள்ள படமா இருக்கும், நடிப்பு நல்லா இருக்கும்னு சொல்லி கூப்பிடுவேன்"என்றார்.

"இது தான் அரசியல். உங்களுக்கு சரி என்று தோன்றுவதை நோக்கி மற்றவர்களை இழுத்து செல்வது தான் அரசியல். அரசியல்னா பெருசா ஏதோன்னு நினைக்காதீங்க. அப்பாகிட்ட வேல ஆகனும்னா அம்மா மூலம் கன்வீன்ஸ் செய்யறதே அரசியல் தான். சமூகத்தில் நல்லது நடக்கனும்னா, அதற்கு மற்றவர்களை தயார் படுத்துங்க. அது தான் அரசியல்", என்றேன்.

இப்போது சிலர் பார்வையில் வித்தியாசம் தெரிந்தது. முழுதும் அவநம்பிக்கையாய் சிலர் வந்திருந்தார்கள். சிலர் என்ன தான் நடக்கிறது என பார்க்க வந்திருப்பார்கள் போலும். சிலர் தயாரிப்போடு வந்திருந்தார்கள். டிவி நிகழ்ச்சிகள் போல், கேள்வி கணையால் துளைத்தார்கள்.

"அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் தனியார் சிமெண்ட் ஆலைகளில் ஏன் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதில்லை?, ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டம் என்ன ஆனது? நிலத்தடி நீரை பாதிக்கும் யுகலிப்டஸ் மரத்தை ஏன் தடை செய்யக் கூடாது?" என்பது போன்ற உள்ளூர் பிரச்சினைகள் இடம் பிடித்தது.

"கூடங்குளம் பிரச்சினையில் ஏன் மத்திய அரசு இப்படி நடந்து கொள்கிறது, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு இல்லையா?, மீத்தேன் திட்டத்தை தடுக்க முடியாதா, மதுவிலக்கை அமல்படுத்த ஏன் அரசு தயங்குகிறது?, ஸ்டிக்கர் அரசியலை நிறுத்த முடியாதா?, தமிழகத்திற்கு இலவசங்கள் தேவையா? என தமிழகப் பிரச்சினையை பட்டியல் இட்டார்கள்.

இன்றைய இளைஞர்களுக்கு சமூகத்தின் மீது அக்கறை இல்லை என்பது தவறான கருத்து என வெளிப்படுகிறது. காது கொடுக்க ஆள் இருந்தால், கருத்து சொல்ல தயாராக இருக்கிறார்கள். களமும் இறங்குவார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது. வாழ்வின் சுமை அமுக்குவதால் பலர் நேரம் ஒதுக்க இயலாமல் இருக்கிறார்கள்.

நிகழ்ச்சியை நடத்திய திரு, துவக்கி வைத்து விட்டு கடைசி வரிசையில் உட்கார்ந்தவர் நன்றி சொல்ல தான் எழுந்தார். நிகழ்ச்சியின் வெற்றியே நோக்காய் இருந்தார்.

"ஊழலை ஒழிக்க முடியாதா?"
"உள்ளாட்சித் தேர்தல் போது, நிற்கிற அத்தனை வேட்பாளர்களும் செலவு செய்கிறார்கள். சிறு கிராமத்திலேயே கோடிக் கணக்கில் செலவாகிறது. செலவு செய்தவர்கள் அதை மீட்க ஊழல் செய்கிறார்கள். உங்களை சுற்றி உள்ளவர்களிடம், நல்லவர்களை தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். அங்கிருந்து துவங்குங்கள். மாற்றத்தை நம்மிடம் இருந்தே துவங்குங்கள். நீங்களும் அரசியல்வாதி தான். நல்ல அரசியல் செய்யுங்கள்" என்று முடித்தேன்.

# நல்லவர் பலர் களம் புகுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது !

திங்கள், 15 பிப்ரவரி, 2016

அரசியல் பேசுவோம்

அவ்வப்போது அலைபேசுவார் திரு. அவரது முழுப்பெயரான திருஞானசம்பந்தம் என்பதை விளிப்பது சிரமம் என்பதால் 'திரு' நண்பர்கள் வட்டாரத்தில். சொல்ல வரும் விஷயத்தை நிதானமாக, மென்மையாக சொல்வார். சற்று கூடுதல் நேரம் பேசுவார் என்பதால் அவர் போன் எடுக்க மற்றவர்கள் அலறுவார்கள்.

பொறியியல் படித்தவர். மெக்கானிக்கல் படித்திருந்தாலும், அய்.டி துறையில் பணிபுரிபவர். முதலில் விப்ரோவில் பணிபுரிந்தவர், இப்போது சிட்டி பேங்கில் பணி புரிகிறார். சென்னை அலுவலகத்தில், மானிட்டர் முன்னால் உட்கார்ந்திருந்தாலும், இவர் மனம் சோழங்குறிச்சி தெருக்களிலேயே இருக்கும். சோழன்குறிச்சி, இவரது சொந்த ஊர்.

கவிதை எழுதுவார். கவிஞர் மனது இளகியது என்பதற்கேற்ப தன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்யக் கூடியவர். அலுவலகத்தில் ஒரு நாள் வார ஓய்வு கிடைத்தால், சோழங்குறிச்சியில் நிற்பார். கலைந்த தலை, சிவந்தகண்கள் என வாரம் முழுதும் உழைத்த சோர்வோடு சுற்றி வருவார்.

திடீர் என அழைப்பார். "சார், இன்றைய நிலைத்தகவல்கள் நெகிழ வைத்து விட்டது", என அது பற்றி விவாதிப்பார்.  சில புதியவர்களை அழைத்து வந்து அறிமுகப்படுத்தி பேச வைப்பார். அதற்கு முன்,"சார், உங்களைப் பற்றி சொன்னேன். அவர்கள் நம்பவில்லை. தெரிந்துக் கொள்ளட்டும் என அழைத்து வருகிறேன்" என அறிவிப்பு கொடுப்பார்.

இவரது உறவினர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் தான். ஆனால் 2011 தேர்தலில் 49ஓ-விற்கு ஓட்டு போட்டவர். "உங்கள் முகநூல் நிலைத்தகவல்கள் பார்த்து தான் உங்களைப் பற்றி உணர்ந்து கொண்டேன். அதனால் தான் சந்திக்கிறேன்", என்றார். சில மாதங்களாக,"சார், அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு இளைஞர் சந்திப்பு நடத்த விரும்புகிறேன்" என்றார்.

"நடத்துங்கள். நல்ல விஷயம் தானே", என்றேன். "நீங்க கலந்துக்கனும்",என்றார். "நான் வந்தா அரசியல் நிகழ்ச்சி ஆயிடுமே"என்றேன். "சட்டமன்ற உறுப்பினரா கலந்துக்குங்க. அரசியல் ஆகாது" என்றார். இன்று சோழங்குறிச்சி கிராமத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.

உடையார்பாளையம் பேரூராட்சியில் இருந்து 5 கி.மீ உள்ளடங்கிய அழகிய கிராமம், சோழங்குறிச்சி. ஒரு புளியந்தோப்பில் எளிமையாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை சென்று கலந்து கொண்டேன். ஒரு நல்ல நிகழ்ச்சியாக அமைந்தது.

பக்கத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் பணிபுரியும் பொறியியல் படித்தவர்களும், மற்றொரு கல்லூரியில் படிப்பவர்களும் கலந்து கொண்டனர். இரண்டு இளம் பெண்கள் கலந்து கொண்டது நிகழ்ச்சியின் வெற்றியை காட்டியது.

திருவும் அவரது நண்பர்களும் ஒரு வாரம் உழைத்து ஏற்பாடு செய்திருந்தனர். 300 அழைப்பிதழ்கள் கொடுத்து, 140 பேரை எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால் வந்தவர்கள் 48 பேர். இதல்லாமல் மூத்தவர்கள் கொஞ்சம் பேர் பார்வையாளர்களாக வந்திருந்தார்கள், அழைக்காமலே.

நிகழ்ச்சி தலைப்பு "அரசியல் பேசுவோம்". எதிர்பாராத, எதிர்பார்த்த கேள்விகள் கணயாய் தொடுக்கப்பட்டன. சமாளித்து பதிலளித்தேன். உள்ளூர் அரசியலை விட இந்திய அரசியல் கூடுதலாக விவாதிக்கப்பட்டது.

# அரசியல் பேசினோம், அலசினோம் !

(தொடரும்)

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

மக்களோடு இருத்தல்


"வாழ்த்துக்கள் ஷங்கர். இவ்வளவு நெருக்கடியிலும் ஜெயிச்சிட்டீங்க", என்று வாழ்த்தினார் டாக்டர் மாசிலாமணி.  ஜெயங்கொண்டம் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.  அடுத்து, "எவ்வளவு செலவாச்சி?" என்றுக் கேட்டார்.

2001 உள்ளாட்சித் தேர்தல் முடிவுற்ற நேரம். மாவட்ட ஊராட்சி உறுப்பினராக இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப் பெற்றிருந்தேன். அதிமுக ஆட்சி அமைந்திருந்ததால், 12 இடங்களில் நான் மட்டுமே கரை சேர்ந்திருந்தேன்.

" பூத் செலவுக்கு 35,000 ரூபாய் ஆச்சுங்க சார். அப்புறம், பைக்குக்கு பெட்ரோல் செலவு மட்டும் தான் சார். ஆனா, எதிர் வேட்பாளர் அஞ்சு லட்சத்துக்கு மேல செலவு செஞ்சிருப்பாரு"என்றேன் பெருமையாக.

"போன அஞ்சு வருஷத்தில, உங்க அர்மடா ஜீப் எவ்வளவு கிலோ மீட்டர் ஓடியிருக்கும் ?", என்றுக் கேட்டார் டாக்டர். "ரெண்டரை லட்சம் சார்", என்றேன். "அப்போ எவ்வளவு சுத்தி இருப்பீங்க, எத்தனை கல்யாணம், துக்கத்துல கலந்துகிட்டு இருப்பீங்க, அதன் பலன் தான் இந்த வெற்றி. தேர்தலப்ப திடீர்னு செலவு பண்ணா ஜெயிச்சிட முடியாது", என்றார் டாக்டர். இது தான் அரசியல் பாலப்படம்.

கடந்த ஒரு மாதமாக தினம் நான்கைந்து இறப்பிற்கு செல்லும் நிலை.

நிலைத்தகவல் மூலமாக அறிந்து கொண்டவர்களும், அலைபேசுபவர்களிடம் துக்கத்தில் இருக்கிறேன் என்று சொல்லும் போதும், ஒரு கேள்வி தான் திரும்ப, திரும்ப வருகிறது. "எம்.எல்.ஏவுக்கு வேற வேலையே இல்லையா?. துக்கத்துக்கு போறதும், கல்யாணத்துக்கு போறதும் தானா வேலை?".

ஆமாம், அது தான் முக்கிய வேலை. தேர்தல் வெற்றிக்காக அல்ல, மக்கள் வாழ்நிலையை அறிய. அது எப்படி இது உதவும் என்று தோன்றலாம். அதில் தான் இருக்குது சூட்சுமம்.

ஒரு திருமணத்திற்கு சென்றால், 200லிருந்து 1000ம் பேரை சந்திக்கலாம். ஒரு இறப்பு நிகழ்ச்சிக்கு சென்றால், 50லிருந்து 500 பேரை சந்திக்கலாம். அவர்களில் 10 பேர் அருகில் வந்து நலம் விசாரிப்பார்கள். இரண்டு பேர் ஊர் சம்பந்தமான பொதுக் கோரிக்கை வைப்பார்கள்.

ஒரு மக்கள் பிரதிநிதியை எல்லா மக்களும் தேடி வந்து கோரிக்கை வைக்க இயலாது. இது போன்ற நிகழ்ச்சிகளில் பார்க்கும் போது தான் கூறுவார்கள். தேடி வந்து கோரிக்கை வைக்கிறவர்களில், 90 சதவீதம் சொந்த பிரச்சினையாகத் தான் இருக்கும். மீதி 10 சதவீதம் தான் பொதுப் பிரச்சினையாக இருக்கும். சில சமயம் வம்பும் வந்து சேரும்.

ஒரு எம்.எல்.ஏ கிராமத்திற்கு சென்று மக்களை சந்தித்தாலும், அதிகம் பேர் திரள்வது சிரமம். இதைத் தாண்டி மக்கள் பிரதிநிதி மீது நம்பிக்கை இருந்தால் வருவார்கள். அடுத்து, இது போன்ற நிகழ்வுகளில் கூடி இருக்கும் போது தான், பலப் பிரச்சினைகள் விவாதிக்கப்படும். அது உலக அரசியல் முதல் உள்ளூர் பிரச்சினைகள் வரை இருக்கும். மக்கள் மன நிலை வெளிப்படும்.

இதை விட முக்கியம், நம்மை மதித்து வந்தார் என்ற எண்ணம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. துக்க நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, இழப்பின் வலிக்கு அது ஒரு ஆறுதலாக அமைகிறது. அவர்களில் ஒருவராக உணர்கிறார்கள்.

திருமணம், புதுமனைப் புகுவிழா, மஞ்சள் நீராட்டு விழா, காதணி விழா என 12.02.2016 ன்று 21 நிகழ்வுகள். 560 கிலோமீட்டர் சுற்றுப்பயணம். பயண அசதியை, நிகழ்ச்சி வீட்டாரின் மகிழ்ச்சி முகம் போக்குகிறது.

# மக்களோடு இருத்தலே மகத்தானப் பணி !

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

பிளான் பண்ணி செய்யனும்

ரொம்ப திட்டமிட்டு இருக்கிறதா, நான் நெனைச்சுகிட்டு தான் இருந்தேன்...

தேதி அறிவிச்சதில் இருந்தே, நேரிலும், அலைபேசியிலும் விசாரிப்புகள். "எப்ப மனு தாக்கல்?", "எந்தத் தொகுதிக்கு மனு தாக்கல்?".

கழகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்ததில் இருந்து தான் இந்தப் பிரச்சினை. நான் தெளிவாகத் தான் இருந்தேன். ஆனால் எல்லோருக்கும் குழப்பம், எந்தத் தொகுதி என்பதில். ஜெயங்கொண்டம் சொந்த ஊர் இருக்கும் தொகுதி. குன்னம், தற்போதையத் தொகுதி. அரியலூர், குடியிருக்கும் தொகுதி.

இரண்டுத் தேர்தலாகவே, எதிர்கட்சியினர் கிளப்பும் பிரச்சினை தான் இது, இப்போதும் கிளம்பியது. 2011 தேர்தலில், விண்ணப்பித்தது ஜெயங்கொண்டம் தொகுதிக்கு தான். ஆனால் அந்தத் தொகுதி கூட்டணி கட்சியான, பா.ம.கவிற்கு போனதால், நான் குன்னத்திற்கு இடப்பெயர்ச்சி செய்யப்பட்டேன். அது கூட்டணிக் கட்சி அரசியல்.

அதே சிந்தனையில் தான் "எந்தத் தொகுதி?" என்றக் கேள்வி. அதிலும் மூன்று தொகுதியில் இருக்கும் நிர்வாகிகளும் எனக்காக விருப்ப மனு செய்ய, புகைச்சல் கூடுதலானது. நான் எந்தத் தொகுதிக்கு மனு தாக்கல் செய்வேன் என்பது விவாதத்துக்குள்ளானது.

தலைமைக் கழகம் விருப்ப மனு தாக்கல் செய்ய தேதி அறிவித்தது. முதல் தேதியில் இருந்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தொடர்ந்து தெருமுனைப் பிரச்சாரம், பொதுக் கூட்டம் எனப் பணிகள். தை மாதம் என்பதால் கல்யாண முகூர்த்தங்கள். இதனால் சென்னை சென்று, விருப்ப மனு கொடுக்க நாள் அமையவில்லை. 9ம் தேதி தான் எந்த வேலையும் இல்லாத நிலை.

கல்லூரி காலத்தில் இருந்து இன்றும் நெருக்கமாக இருக்கும், மாம்ஸ் சங்கரின் தாயார் இறந்துவிட்டார். ஆற்காடு சென்று அஞ்சலி செலுத்தி சென்னை சென்றேன்.  9ம் தேதி தளபதி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றேன். விருப்ப மனு தாக்கல் செய்ய அண்ணா அறிவாலயம் சென்றேன். அது வரை யாரிடமும் சொல்லவில்லை , முக்கியமாக வாழ்விணையரிடமும். காரணம் அன்றைய தினம்.

9ம் தேதி செவ்வாய்க்கிழமை. செவ்வாய், வெறுவாய் என்பது பொதுவானக் கணக்கு. அதிலும் அன்று அம்மாவசைக்கு அடுத்த நாளான பாட்டிமுகம். பாட்டிமத்தில் புதிதாக ஏதும் துவங்க மாட்டார்கள்.  அதனால், 9ம் தேதி அனைத்து விதத்திலும் ஆகாத நாள். அன்று நான் விருப்பமனு கொடுக்கிறேன் என்றால் யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதனால் தான் யாரிடமும் சொல்லவில்லை.

அறிவாலயத்தில் நுழையும் போதே பார்த்துக் கொண்டேன், யாரும் தெரிந்த முகம் இல்லை. மனு கொடுக்கும் இடத்தில் அய்யா தஞ்சை கூத்தரசன் மனு அளித்துக் கொண்டிருந்தார். அவர் அகலும் வரைக் காத்திருந்தேன். உடன் வந்தவர்களை விலகியிருக்க சொல்லிவிட்டு மனு கொடுக்க சென்றேன். காரணம், "இவர்கள் தேர்தலைப் பார்த்துக் கொள்வார்களா?" என்றக் கேள்வியை மற்றவர்கள் எழுப்புவார்கள்.

விருப்ப மனு, குன்னம் தொகுதிக்கு தான்.

மனு பெறும் வரிசையில், எஸ்.ஏ.எம்.உசேன், ஆ.சதாசிவம், பூச்சி முருகன், கு.க.செல்வம், துறைமுகம் காஜா, சேகர் உள்ளிட்டவர்கள் இருந்தார்கள். நடிகர் சங்கத்தை துளைத்து எடுத்த அண்ணன் பூச்சி முருகன் மனுவைப் பெற்றுக் கொண்டார். அப்போது ஒரு குரல்,"மாவட்டம் அண்ணே". முதுகில் ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தேன், கொளகைப் பரப்புத் துணை செயலாளர் அண்ணன் ஈரோடு இறைவன். 

புகைப்படம் எடுப்பவரிடம், எடுக்க வேண்டாம் என்று நான் சொல்லும் போதே, க்ளிக், க்ளிக், க்ளிக். இப்போது வீடியோ கேமராவும் திரும்பியது. சமாளித்து விலகினேன்.

வெளியில் வந்த போது, அறிவாலயத் தொண்டரணித் தோழர்கள் அருகில் வந்தனர். " தெய்வமே இன்னைக்கும் தனியாவா?" என்றனர். அவர்கள் என்னை தெய்வமே என்று தான் அழைப்பார்கள், நானும் அவர்களை அப்படித் தான் அழைப்பேன். நான் ,"தொகுதிக்கு போனா மக்கள் இருக்காங்க, நிகழ்ச்சிக்குப் போனா கட்சிக்காரங்க இருக்காங்க, இங்க வந்தா நீங்க இருக்கீங்க" என சமாளித்தேன்.

"பாட்டிமத்தில் வந்ததால், யாரிடமும் சொல்லாமல் வந்தேன்" என்றேன். அப்போது நண்பர் சொன்னார்,"யாரிடமும் சொல்லாம வந்தீங்க, ஆனா கடவுளே கூட வந்து நிக்கிறாரு". "கடவுளா?" என்றுக் கேட்டேன். "இதோ இறைவன்" என்றார்.

காரில் ஏறி அரியலூர் பொதுக் கூட்டத்திற்கு கிளம்பினேன். சிறப்புரை, கம்பம் செல்வேந்திரன் என்பதால் விரைந்தேன். அலைபேசி ஒலித்தது,"அண்ணா, நீங்க மனு கொடுத்தது 01.30 மணி கலைஞர் செய்திகள்ல ஓடுது". அலைபேசி தொடர்ந்து ஒலித்தது. யாருக்கும் தெரியாமல் மனு கொடுக்க வந்தால், இப்போது உலகத்திற்கே தெரிந்து விட்டது.

# பிளான் பண்ணி செய்யனும் !

புதன், 10 பிப்ரவரி, 2016

கலைஞரின் தமிழ், முத்தம் - முற்றம்

சில அழைப்புகளை மறுத்தால், சில இழப்புகள் நேரிடும். கடந்த வாரம் அழைப்பை மறுக்காததால், வரலாற்றை பிடித்தேன்.

இணைய நண்பர் சகோதரர் விஜய் ஸ்டாலின். திருமண தேதி முடிவான உடனே புக் செய்தார் என்னை.

விஜய்யை பல முறை கழக நிகழ்வுகளில் சந்தித்து நெருங்கிய உறவாகிப் போனோம். தன் தந்தையாரோடு வந்து திருமண அழைப்பிதழ் கொடுத்தார். மூச்சும் பேச்சும் கழகம் தான் விஜய்க்கு. அன்றும் அப்படி தான்,  அழைப்பிதழ் வழங்கி, கழகப் பேச்சு தான். வருவதாக உறுதியளித்தேன்.

திருமணத்தன்று தான் உஞ்சினி ஆக்கிரமிப்பு அகற்றல் பிரச்சினை. அது முடித்து தாமதமாகத் தான் செல்ல நேரிட்டது, திருமணத்திற்கு. திருவாரூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜா காத்திருந்தார். மன்னை ராஜகார்த்திக் தொடர்பிலேயே இருந்தார்.

சிறிது சுற்றி, மன்னார்குடி அடைந்தோம். கார்த்திக்காக காத்திருந்தோம். வந்தார் கார்த்தி. அவர் காரை பின் தொடர்ந்தோம். முகம் பார்த்த இளையராஜா கேட்டார்,"அண்ணா சாப்பிடலயா?". "சாப்பிட்டுவிட்டோம் என சொல்ல வேண்டும்", என சொல்லி வந்த நானே சாப்பிடவில்லை என்று உளறி விட்டேன்.

சாப்பிட இறங்கினால், நேரமாகி விடும் என்பதால் சாப்பிடாமலே பறந்து வந்திருந்தோம். விஜய் இல்லம் சென்றோம். மணமக்கள், மணமகள் இல்லம் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். மணமக்களை வாழ்த்தி விடைபெற்றோம். ராஜகார்த்தி இல்லத்திற்கு அழைத்தார்.

மகிழ்வாய் சென்றோம். கார்த்தியின் தாயார், தட்டை மேசை மீது வைத்தார். நான் இளைஞரணித் தோழர்களோடு அளவளாவிக் கொண்டிருந்தேன். கார்த்தி,"அப்பா வந்துடுவாங்க" என்றார். சற்று நேரம் கழித்து,"சாப்பிட்டுடலாம் அண்ணா" என்றார் கார்த்தி. கார்த்தி அம்மா இப்போது தட்டில், வறுத்த மீனை அடுக்கிக் கொண்டிருந்தார்.

"என்ன?" என்று கேட்டேன். "உங்களுக்கு தான் சாப்பாடு",என்றார் கார்த்தி. மறுக்கமுடியாமல் அமர்ந்தேன். சாப்பாட்டோடு அன்பை கலந்து பரிமாறினார் கார்த்தி அம்மா. சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். கார்த்தி அப்பா வந்தார். அவரும் சேர்ந்து உபசரித்தார்.

சாப்பிட்டு முடித்து அமர்ந்தேன். அது அந்த வீட்டின் ஹால். பெரிய அளவிலான ஹால். கார்த்தி அப்பா சொன்னார்,  "அந்த காலத்தில் இது பழைய சுற்றுக்கட்டு வீடு.  இங்கு தான் முற்றம் இருந்தது. இது தான் மையம்". அவர் காட்டிய இடத்தைப் பார்த்தேன்.

"இந்த இடத்திற்கு  ஒரு சிறப்பு இருக்கிறது. ஒரு முக்கியப் பிரமுகர் இங்கு வந்திருந்தார். அவரிடம் என் பெரியப்பா "இந்த முத்தத்தில் தான் நான் பொறந்தேனாம்" என சொன்னார். அவர் ,"எல்லோரும் முத்தத்தில் ஆரம்பித்து தான்யா பிறப்பார்கள். நீ மட்டும் தானா",என கேட்க, அந்த இடமே சிரிப்பால் நிறைந்தது.

அவரது பெரியப்பா, 'தஞ்சை பெரியார்' என்றழைக்கப்பட்ட மன்னை நாராயணசாமி. அந்த முக்கிய பிரமுகர், தலைவர் கலைஞர்.

#  கலைஞரின் தமிழ் முத்தம் !

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

அண்ணா போல் வாழ வேண்டும்

இரவு பத்து மணி. அறைக் கதவு மூடப்படுகிறது. அறைக்கு வெளியே ஒரு பையனை நிறுத்தியிருந்தார் மெய்யப்பன். அவன், அறைக்கு உள்ளே இருந்தவருக்கு ஏதேனும் தேவைப்பட்டால் உதவுவதற்காக நிறுத்தப்பட்டவன். ஆனால் காலையில் தான் அறைக் கதவு திறந்தது.

ஆனால் உள்ளே இருந்தவர் இரவே சொல்லி இருந்தார்,"எனக்கு ஒரு செம்பில் தண்ணீர், டம்ளர், வெற்றிலை, பாக்கு, புகையிலை ஆகியவற்றை கொண்டு வாருங்கள். பாயும், உட்கார்ந்து எழுதத்  தரையில் வைத்து எழுதும் மேசையும் கொடுத்து விடுங்கள். நீங்கள் யாரும் எனக்காகக் காத்திருக்க வேண்டாம்.

இந்தக் கதையை எழுதி முடித்து விட்டுக் காலையில் உங்களுக்கு சொல்லி அனுப்புகிறேன். நான் காலையில் கொஞ்சம் லேட்டாகத் தான் எழுந்திருப்பேன். அப்பொழுது என்னை வந்து சந்தித்தால் போதும்" என்று சொன்னார். அதே போலவே யாருக்கும் தொந்தரவு இல்லை, திரைக்கதை தயாராக இருந்தது.

அவர் ஒரு திரைக்கதை வசனகர்த்தா தான். ஆனால் வித்தியாசமான, யதார்த்தமான மனிதர். அதனால் தான் சிறிதும் பந்தா பண்ணாமல், தனியே அமர்ந்து எழுதினார். தான் சொன்னது போலவே, ஓர் இரவில் ஒரு கதையை எழுதிக் கொடுத்தார்.

சுமார் 500 பக்கம் ஓர் அடித்தல், திருத்தல் இல்லாமல் 'ஓர் இரவு' கதையை சினிமாவுக்கு வேண்டிய முறையில் எழுதி முடித்து விட்டார். ஒரே இரவில், 500 பக்கத் திரைக்கதையை எழுதி முடிக்கும் திறமை அவர் ஒருவருக்கே என திரையுலகமே வியந்து பாராட்டியது.

அவர் தான் அண்ணா. அவர் ஒரு மாமேதை. அவரைப் பற்றி பல செய்திகள் அறிந்திருப்போம். ஆனால், ஒரு இரவில் ஒரு திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதிய அதிசய மனிதர் என்ற செய்தி இன்றைய திரையுலகினருக்கு அதிர்ச்சித் தரக் கூடியது.

வெளிநாடு அல்லது உள்நாட்டில் மாதக் கணக்கில் அறை போட்டு, கூட்டம் கூட்டி விவாதித்து கதை தயார் செய்கிற காலம் இது. அதனால் அண்ணா குறித்த செய்தி அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிக்கிறது செய்தி.

அரசியல் ரீதியாக, அண்ணாவைப் பாராட்டப் பல செய்திகள் உண்டு. இலக்கிய ரீதியாக வியக்க பலத் தகவல்கள் உண்டு. எளிமைக்கு இலக்கணமே அவர் தான். இப்படி நம்மை வியக்க வைக்கிற ஆளுமையாக வாழ்ந்து காட்டிவிட்டவர் அண்ணா.

அவர் தம் 47வது நினைவு நாள். அவர் நினைவுகளோடு வாழ்வோர் இயற்கையாய் உயர்வார்கள்.

# அண்ணா போல் வாழ வேண்டும் !

வியாழன், 4 பிப்ரவரி, 2016

அன்பர்களின் அதகளம்

வாழ்கையின் நெருக்கடியான தருணங்களை இலகுவாக்க சில மனிதர்கள் இருப்பதால் தான் தொடர்ந்து பயணிக்க இயலுகிறது. அப்படி எனக்கு பலர் உண்டு. அதில் ஒருவர் குமரன். காலையில் முறுக்கான குமரனாக இருப்பவர், மாலை ஆக, ஆக குமழன் ஆகிவிடுவார்.

அவர் வேறு அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர். ஆனாலும் என் நலன் விரும்பி. உலக அரசியல் ஆரம்பித்து உள்ளூர் அரசியல் வரை பேசக் கூடியவர். எல்லோரையும் விமர்சிப்பார், தனது தலைமையையும். பொது விஷயங்களுக்காக ஆலோசனைகள் வழங்குவார். இத்தனையும் அலைபேசியில் அழைத்து.

ஆனால் இத்தனையும் நண்பகல் வரை தான். அதற்கு மேல் என்றால்,"அண்ழே, குமழன் பேசழேன். நல்லாழுக்கீங்களா?" என்பதையே நாலு தடவை கேட்பார். அப்புறம் தான் அதகளம் ஆரம்பிக்கும். இரவுக்குள் நான்கு, அய்ந்து முறை அலைபேசியில் அழைத்து விடுவார்.

அலைபேசியை எடுக்காவிட்டால் தொடர்ந்து மூன்று, நான்கு முறை அழைப்பார். அலைபேசியை எடுத்தாலும் சமாளிக்க முடியாது, எடுக்காவிட்டாலும் சமாளிக்க முடியாது. வேறு யாராவது அலைபேசியை எடுத்து பதில் சொன்னாலும்,"அண்ழன் கிட்ட குடுக்கறியா இல்லியா?" என்று படுத்தி விடுவார்.

ஒரு நாள் நிலைமை சமாளிக்க முடியாமல் போய் விட்டது. இரவு நேரம் தான். இன்று ஒரு தீர்வு காண்வது என முடிவெடுத்தேன். அலைபேசியை எடுத்தேன். "எம்.எல்.ஏ அண்ழே, குமழன் பேசறேன்" என்றார். "எம்.எல்.ஏ இல்ல. இப்ப வெறும் அண்ணன் தான். சொல்லுண்ணே" என்றேன்.

ஒரு நிமிடம் தடுமாறியவர் "ஏன்ழே?" என்றுக் கேட்டார். "எம்.எல்.ஏ பதவிய ராஜினாமா பண்ணிட்டேன்ணே" என்று சொல்லி அலைப்பேசியை வைத்துவிட்டேன். அய்ந்து நிமிடம் கழித்து மீண்டும் அலைபேசி அலறியது. நண்பரிடம் கொடுத்து பேசச் சொன்னேன். "எம்.எல்.ஏ அண்ழன் ராஜினாமா பண்ணிட்டாரா?".

"ஆமாம். யாரோ குமரனாம், அவரு தான் காரணம். அவரு  போனை பேசி சமாளிக்க  முடியாமலேயே ராஜினாமா செஞ்சுட்டாரு" என்று சொல்லி வைத்து விட்டார்.

அன்னைக்கு இறங்குன போதை தான் குமழனுக்கு.

இன்னொரு அண்ணன். இவரும் மாற்றுக்கட்சி அன்பர் தான். இவரு அலைபேசியை எடுக்கலனா, தொடர்ந்து பத்து முறை அடிப்பார். இவருகிட்ட "ழ" பிரச்சினை கிடையாது. ஆனால் அவர் சொல்கிற வேலை முடியாவிட்டால், அவ்வளவு தான். தொலைந்தோம்.

சமீபத்தில் பொதுக்கூட்ட மேடையில் இருந்தேன். அண்ணன் தொடர்ந்து பத்து முறை அடித்தார். மேடையை விட்டு இறங்கி அழைத்துக் கேட்டேன். உறவினர் இறந்துவிட்ட தகவலை சொன்னார். காலையில் வருவதாக சொன்னேன். காலை 06.05க்கு அழைத்து விட்டார். நடைப்பயிற்சியில் இருந்ததால் எடுக்கவில்லை. நடை முடிவதற்குள் பத்து முறை அழைத்திருந்தார்.

இரண்டு திருமணங்களில் கலந்து கொண்டு, மூன்று துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் நம்ம அண்ணன் வீட்டுக்கு செல்ல முடியும் என்ற நிலை. ஆனால் அதற்குள் அண்ணன் நூறு முறை அழைத்து விட்டார். எனக்கோ மூன்றாவது முறை தொடர்ந்து அழைத்தாலே அலர்ஜி.

பொதுக்கூட்ட மேடையில் இருந்தாலோ, மக்களோடு இருந்தாலோ, எழுத்துப் பணியில் இருந்தாலோ பிறகு அழைப்பது என் வழக்கம்.  மூன்று முறை அழைத்தாலே லேசாக பிபி ஏறும். நூறு முறை என்றால் கணக்கு பார்த்துக்கணும்.

ஒரு வழியாக மாலை அண்ணன் வீட்டிற்கு சென்றோம். மறைந்தவர் உடலுக்கு மாலை வைத்த பிறகு தான் எனக்கு பிபி குறைந்தது. அமர்ந்தோம். அண்ணன் காதோடு ரகசியமாக சொன்னேன்,"எப்புடிண்ணே இவ்வளவு நாள் உங்களை சமாளிச்சாரு, செத்துப் போனவரு? அதுக்கு பாராட்டாகத் தான் இந்த மாலையை போட்டேன்".

அண்ணன் வெடித்து சிரித்துவிட்டார்.

# இப்படி தான் பாஸ் சமாளிக்கிறோம் !