பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 11 அக்டோபர், 2013

பொதுக் கூட்டம் போட்டுப் பார்....

மிகுந்த மகிழ்ச்சி.

வீட்டக் கட்டிப் பார், கல்யாணத்தப் பண்ணிப் பார். இது தெரிஞ்ச சேதி தான். அதிலும் இரண்டையும் சேர்த்து ஒரே நேரத்தில் மேற்கொள்வது எவ்வளவு டென்ஷன்னு அனுபவிச்சா தான் தெரியும்.

அது போல ஒரே நேரத்தில் தளபதி அவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம், இளைஞர் அணி பயிற்சிப் பாசறை. பொதுக் கூட்டம் அரியலூரில், பாசறை பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டி கிராமத்தில்.

                                                                                                                                                                                                        இடைப்பட்ட தூரம் 70 கி.மீ. ஒரு பயணம் போய் வந்தாலே 140 கி.மீ. அரைநாள் போய் விடும். 16-ந் தேதி முதல் விசிட் துவங்கியது. இது வரை ஏழு முறை பயணம். மற்ற நாட்களில் நிதி திரட்டும் பயணம்.

ஒரு நாள் அரியலூர் மாவட்டக் கழக கூட்டம், ஒரு நாள் இளைஞர் அணி கூட்டம், மாணவர் அணி கூட்டம். அடுத்து இதே போல பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டங்கள்.


                                                                                                                                                                                                                                      20 நாட்களுக்கு முன்பு தளபதி அவர்கள் தேதி உறுதி செய்யப்பட்டது. அன்று ரன்னிங் ரேஸ் ஆரம்பித்தது, ரிலே ரேஸும் கூட. இன்று தான் வெற்றிகரமாக முடிந்தது. அது தான் மிகுந்த மகிழ்ச்சி.

16-ந் தேதி சென்ற போது, மலையாளப்பட்டியில் 3 இடங்களை பார்வையிட்டோம். அதில் ஒரு இடம் அனைவரும் விரும்பும் வகையில் அமைந்தது. அது முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிளைக் கழக செயலாளர் ஈஸ்வரன் அவர்கள் இடம்.

பச்சை மலையின் அடிவாரம். மூன்று புறம் மலைகள் சூழ வயல் வெளி. அந்த இடத்தை தேர்வு செய்தவுடன் அவர் வயல்வெளியை சுத்தம் செய்து ரோலர் ஓட்டி சமன் செய்தார்.

பந்தல் போடும் பணி துவங்கியது. அன்பகம் கலை அவர்கள் வந்து பார்வையிட்டு சென்றார். அண்ணன் ஆ.ராசா அவர்கள் மூன்று நாள் தங்கி பணியை செம்மைப் படுத்தினார்.

அவர் மூன்று நாள் பெரம்பலூரில் தங்கிப் பணியாற்றியது நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியது. அதே போல நிகழ்ச்சியும் மெருகேறியது. 

 பயிற்சி பாசறைக் கூட்டம் கட்டுக்கோப்புடனும், எழுச்சியோடும் நடைபெற்றது. அரியலூரில் நிதியளிப்பு பொதுக் கூட்டம் பெருத்த வெற்றியாக அமைந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ் நாளில் மறவாது. தளபதி அவர்களுக்கும்.

 

# மிகுந்த மகிழ்ச்சி....

வெள்ளி, 4 அக்டோபர், 2013

அவர் நடக்கறதையே ஒரு பி.எச்.டி செய்யலாம்....

என்ன தான் ரஜினி ரசிகனாக இருந்தாலும் கமல் நடிப்பை ரசிப்பது போல், எம்.ஜி.ஆரின் துள்ளல் நடிப்பின் ரசிகனான நான் சிவாஜியை ஒதுக்க முடியவில்லை. சற்றே மிகை நடிப்பு என்ற திரை விமர்சகர்களின் வாதத்தை ஒப்புக் கொண்டாலும், அதிலும் ஒரு சுவை இருக்கத் தான் செய்கிறது.

அதிலும் சிவாஜியின் நடிப்பு, உடல் மொழி, முகபாவம், கண்ணசைவு, புருவ சுளிப்பு எல்லாமே வேறொருவரால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இதை எல்லாம் தாண்டி சிவாஜியின் நடை இருக்கிறதே.....

வசனம் பேசும் போது நடப்பது சரி. சில பாடல்களில் அவர் நடப்பதை வைத்தே முடித்திருப்பார்கள். அதில் அவர் காட்டும் வித்தியாசங்கள், அடடா. அதில் இன்பமான பாடலுக்கு ஒரு நடை, சோகப்பாடலுக்கு ஒரு நடை.

“வசந்தமாளிகை” திரைப்படத்தில், தன் காதலிக்காக தான் வடிவமைத்த வசந்தமாளிகையை சுற்றி தன் காதலியிடம் சுற்றிக் காட்டுவார். அப்போது ஒரு நடை நடப்பார், அதை பார்க்க வேண்டும்.

                   

நடக்கும் போது படி ஏறி ஒரு இடைவெளி விட்டு நிற்பார். அப்போது உடலில் ஒரு அசைவும் இல்லாமல் வலது கை மட்டும் ஆடிக் கொண்டிருக்கும். அப்படியே வலது காலில் ஒரு ஜெர்க் கொடுத்து விட்டு திரும்ப நடக்க ஆரம்பிப்பார்.

இந்தக் காட்சிகள் புதுமுக நடிகர்களுக்கு ஒரு பாடத்திட்டமாகவே வைக்கலாம். தொடர்ந்து பேசிக் கொண்டே நடப்பார். நடக்கும் போதே ஒரு மெல்லிய “யூ டர்ன்” அடிப்பார். கைகளை மேலும் கீழுமாக கொண்டு சென்று பேசியவாறே இரண்டு கைகளையும் தட்டுவார். நாட்டியம் தான். மியூட் போட்டு விட்டு ரசிக்கலாம்.

கண்ணாடி மாளிகையை சுற்றிப் பார்த்து விட்டு வாணீஸ்ரீ திரும்ப ஓடி வருவார். அப்போது கேமரா சைடில் இருக்க சிவாஜி காத்திருப்பார். பின்புறம் கையை கட்டிக் கொண்டு இடது காலை லேசாக மடக்கி நிற்பார். சிம்ப்ளி சூப்பர். அப்புறம் தான் “மயக்கம் என்ன” பாடல் துவங்கும்.

இந்தப் பாடலில் நடன அசைவுகளே இருக்காது. நடையிலும், அசைவிலுமே அசத்துவார். பாடல் முடியும் தருவாயில் சிறு நடன அசைவு காட்டுவார். அப்படியே “இரண்டு மனம் வேண்டும்” பாடலில் தளர்ந்த நடை போட்டு சோக ரசம் பிழிவார்.

அவரது நடை காட்சிகளை மாத்திரம் எடுத்துக் கொண்டு ஒரு பி.எச்.டி செய்யலாம். சிவாஜிக்கு பிறந்தநாள்.

# பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார், அவர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் !

என்னாச்சி.....

“டொம்” ஹாலில் இருந்து சத்தம் கேட்டது....

“என்னப்பா சத்தம் ?”

“வரேன்பா”

பெரிய மகன் தன் தம்பியுடன் வந்தார்.

“என்னப்பா சத்தம் ?”

“என்னாச்சி

நாம புட்பால் விளையாண்டோமா...

ம். நீ பால அடிச்சல்ல...

ஓ, நான் திருப்பி ஓங்கி அடிச்சனா ?

மேல போச்சில்ல...

அப்ப டியூப் லைட்ல பட்டு சத்தம் வந்துச்சா ?

அங்க அடிபட்டுருக்கும்

டியூப் நகர்ந்திருக்கும்

அது ஒன்னும் பிரச்சின இருக்காது...

கொஞ்சம் திருகினா எரியும்...”

# நடுவுல கொஞ்சம் என்னக் காணோம்.....


                                               

செவ்வாய், 1 அக்டோபர், 2013

சட்டசபையில் உட்கார்ந்து பெஞ்ச தட்டிகிட்டு ...

சைதை இடைத் தேர்தலில் பொய்வழக்கில் கைதாகி ( விபரத்திற்கு முந்தைய ஸ்டேடஸ்), நீதிபதி முன் நிறுத்தப்பட்ட போது, அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் காவல் துறையினர் திணறினர். பொய் வழக்கு என உணர்ந்தாலும், 15 நாட்கள் ரிமாண்ட் அறிவிக்கப்பட்டது.

வெளியில் வந்த போது, அருகே வந்த இன்ஸ்பெக்டர் “இந்த கேஸ் நிக்காது. கவலைப்படாதீங்க” என்றார். சென்னை மத்திய சிறையில் 3 நாட்கள், வேலூர் சிறையில் 4 நாட்கள் இருந்து, ஜாமீன் கிடைத்து சென்னையில் ஒரு மாதம் கண்டிஷன் பெயிலில் கையெழுத்துப் போட்டது தனிக் கதை.

வழக்கு விசரணைக்கு வந்தது. சைதாப்பேட்டை கோர்ட். குற்றம்சாட்டப்பட்ட நாங்கள் அய்ந்து பேரும் ஒழுங்காக ஆஜராகிக் கொண்டிருந்தோம். புகார் கொடுத்த இன்பத்தமிழன் அமைச்சராகி பிஸியான காரணத்தினால், நீதிமன்றத்திற்கு வராமல் தொடர்ந்து வாய்தா கேட்க, ஒரு கட்டத்தில் நீதிபதி கோபமாகிவிட்டார்.


                     


“ ஏன் புகார்தாரர் வரவில்லை ?” எனக் கேட்க, காவலர் “அவர் அமைச்சராகி தொகுதிக்கும் சென்னைக்கும் பிஸியாக பயணிக்கிறார், பார்க்க முடியவில்லை” என சொல்ல. “டி.வீ பார்ப்பீங்களா ?, செய்தி பாருங்க. சட்டசபையில் உட்கார்ந்து பெஞ்ச தட்டிகிட்டு இருப்பாரு. போய் சொல்லிடுங்க. அடுத்த முறை வரலன்னா வாரண்ட் போடப்படும்” அப்படின்னார்.

அடுத்த வாய்தாவிற்கு ஆஜரானார் இன்பத்தமிழன். போலீசார் கைது செய்த போது அவர் சம்பவ இட்த்தில் இல்லாததால், அவரால் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. புகாருக்கும் அவரது சாட்சியத்திற்கும் ஏக வித்தியாசம். விட்டத்தை பார்ப்பதும், தரையை பார்ப்பதுமாக நின்று ஒப்பேற்றிவிட்டு கிளம்பினார்.

வழக்கில் நிருபித்து தண்டனை வாங்கித் தர முடியாத என்ற எண்ணம் வந்ததால், வழக்கில் திருத்தம் மேற்கொண்டு புதிதாக ஒரு செக்சன் சேர்த்தனர். கைது செய்த போது, இன்ஸ்பெக்டரை நாங்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு.

எங்களை கைது செய்து அழைத்து வந்தவர்கள் போலீசார். இன்ஸ்பெக்டர் கட்டிடத்திற்கு வெளியே நின்றிருந்தார். மீடியாவை சேர்ந்தவர்கள் கேமராவோடு நின்றிருந்தனர். அப்படி இன்ஸ்பெக்டரை தாக்கியிருந்தால் கேமரா கண்களுக்கு மாட்டியிருக்கும்.

அதற்கு பிறகு அரசு தரப்பில் கொடுத்த புதிய திருத்தத்தை நீதிபதி ஏற்றுக் கொள்ளாததால், உயர் நீதிமன்றத்திற்கு அரசே ஒரு அப்பீல் சென்றுள்ளது. இப்போதும் வழக்கை சந்திக்க நாங்கள் ரெடி. ஆனால் அரசு முட்டுக்கட்டை போட்டு வைத்துள்ளது. வழக்கமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் இந்த வேலையை செய்வார்கள்.

வழக்கு முடியாததால், இரண்டு தேர்தலாக அபிடவிட்டில் இந்த வழக்கின் விவரம் இடம் பெற்று வருகிறது. நம்மாளுங்க இத வச்சி என்னை கிரிமினலா பட்டியலிடுவாங்க.

அதனால் அம்மா அவர்களுக்கு ஒரு கோரிக்கை. இந்த வழக்கை சீக்கிரம் முடிக்க நீங்க தான் உதவனும். நீங்க சொத்துக் குவிப்பு வழக்கில் கேட்பது போல், நான் கேட்கும் நபர்களை நீதிபதியாகவும், அரசு வழக்கறிஞராகவும் நியமித்தால் இந்த வழக்கை முடித்துக் கொள்வேன்.

# கருணை மிகு....

சனி, 28 செப்டம்பர், 2013

அதிரடிப் படை வீரர்கள் எங்களை சுற்றி நின்றனர்....

அது 2001-2006 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக் காலம். சைதாப்பேட்டை இடைத்தேர்தல். அண்ணன் மா.சுப்ரமணியன் கழக வேட்பாளர். அரியலூர் மாவட்டத்திற்கு 135-ஆ வார்டு ஒதுக்கப்பட்டு தேர்தல் பணியாற்றினோம்.

அந்த வார்டிற்கு அ.தி.மு.க சார்பில் தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன். அப்போது அவர் துணை மேயர். அதிகாரத்தின் உச்சியில் இருந்த நேரம். அந்தப் பகுதியின் புகழ் பெற்ற தாதா ஃபங்க் குமார். 

இருவர் சார்பாகவும் எங்களுக்கு மிரட்டல் விடப்பட்டது. அதை மீறி பணியாற்றிக் கொண்டிருந்தோம். எங்கள் மீது ஒரு கண்ணாகவே இருந்தார்கள். வாக்குப் பதிவிற்கு இரண்டு நாள் முன்பு, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் ஓட்டு கேட்டுக் கொண்டிருந்தோம். 

திடீரென கராத்தே தலைமையில் போலீசார் எங்களை சுற்றி வளைத்தனர். ஓட்டுக்கு பணம் கொடுத்தோம் என்று காரணம் சொன்னார்கள். போலீசார் என்னை சோதனையிட்டனர். என் சட்டைப் பையில் அறுநூற்று சொச்சம் ரூபாய் தான் இருந்தது. 

என்னோடு சைதை பகுதி 135 –வது வட்டத்தை சேர்ந்த சேர்ந்த கழக நிர்வாகிகள் ரவிராஜ், நாகா, ரமேஷ், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லூயி கதிரவன் கைது செய்யப்பட்டு சைதை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டோம்.

எங்கள் மீது புகார் யார் கொடுப்பது என விவாதிக்கப்பட்டு அப்போதைய ஸ்ரீவில்லிப்புத்தூர் எம்.எல்.ஏ இன்பத்தமிழன் அழைக்கப்பட்டார். அவர் கொடுத்த நாற்பதினாயிரம் ரூபாய் எங்களிடத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாக வழக்கு பதிவானது.

செய்தி கேள்விப்பட்டு, தலைவர் கலைஞர் சைதை கழகத் தேர்தல் அலுவலகத்திற்கு வந்திருப்பதாக தகவல் வந்தது. காவல் நிலையத்திலிருந்து வெகு அருகில் அலுவலகம். உடனே எங்களை இடம் மாற்றுவதற்கான நடவடிக்கை துவங்கியது.

             

சிறிது நேரத்தில் அதிரடிப் படை வீரர்கள் வந்தனர். எங்கள் அய்ந்து பேரையும் கிளப்பினர். காவல் நிலையத்தின் உள்ளேயே எங்களை சுற்றி சுவர் வைத்தது போல் நின்றனர், தீவிரவாதிகளைப் போல. அப்படியே யார் கண்ணிலும் படதாவாறு வெளியில் அழைத்து வந்தனர். சினிமாவில் பார்க்கும் காட்சிகள் எங்களை சுற்றி நிஜத்தில் நடந்துக் கொண்டிருந்தது. 

எங்களை அதிரடிப்படையினரின் வாகனத்தில் ஏற்றினர். அப்போது ஒரு கார் காவல் நிலைய வளாகத்தினுள் நுழைந்தது. காரில் இருப்பவர்கள் கண்ணில் படாமல் எங்களை கொண்ட வாகனம் வெளியேறியது. பிறகு சொன்னார்கள், காரில் வந்தவர் தளபதி அவர்கள், எங்களைப் பார்ப்பதற்கு. அவருக்கு பயந்தே அந்த அவசரம்.

எங்களை கொண்டு சென்ற அதிரடிப்படை வாகனத்திற்கு முன்னும் பின்னும் அதிமுக வாகனங்கள் இன்பத்தமிழன் தலைமையில், தெலுங்கு பட வில்லன் குழுவை போல், ஓ என குரல் எழுப்பிக் கொண்டு. (இதற்கு பரிசு தான் ஒரு மாதத்தில் இன்பத்தமிழன் அமைச்சர்). 


தொடரும்....

புதன், 25 செப்டம்பர், 2013

குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுவோமே....

மணீஷ். ஆறாம் வகுப்பு படிக்கும் பையன். பள்ளியில் நல்ல பிள்ளை என்ற பேர் பெறுபவன். எல்லாப் பாடங்களிலும் 90-95 மதிப்பெண் எடுப்பவன். வீட்டிலும் அன்பு பிள்ளை.

கடந்த மாதத்தில் நடைபெற்ற கனிம சுரங்க பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் பேசி முதல் பரிசு பெற்றான். அதே போல விளையாட்டிலும் ஆர்வமானவன். வருகின்ற அக்டோபர் மாதத்தில் நடைபெற இருக்கின்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க தேர்ச்சி பெற்றவன்.

எனக்கு நெருக்கமான கழகத் தோழர் ரமேஷின் மகன். பள்ளி விட்டால் தந்தையோடு கிரவுண்டில் தான் பார்க்கலாம். விடியற்காலை எழுந்து படித்து விட்டு, எக்ஸர்சைஸ் செய்து விட்டு பள்ளி கிளம்பினால், மாலை வந்து ஒர்க் அவுட். அப்படி சுறுசுறுப்பானவன். 

                             

கடந்த தேர்வில் ஹிந்தியில் எதிர்பார்த்ததை விட 10 மார்க் குறைவு. அனைத்து பாடத்திலும் நல்ல மதிப்பெண் எடுக்கக்கூடியவன் இப்படி செய்து விட்டானே என அம்மா கண்டித்திருக்கிறார்.

கடந்த வாரம் வியாழக்கிழமை, காலை தந்தை ரமேஷ் கோவிலுக்கு சென்று விட்டார். தாய் மகனை படிக்க சொல்லி விட்டு வயலுக்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தால் வீடு உட்பக்கம் பூட்டியிருக்கிறது.

உள்ளே பார்த்தால் குழந்தை தூக்கில் தொங்குகிறான். ஊரே கூடிவிட்டது. இந்த பிள்ளை அமைதியான பிள்ளையாயிற்றே என அனைவரும் துக்கத்தில். செய்தி கிடைத்து போகும் போது போஸ்ட்மார்ட்டத்திற்காக குழந்தையின் உடலை அரியலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டனர்.

மார்ச்சுவரியில் வைத்து பார்த்தேன். கண்ணாடி, ஒட்ட டிரிம் செய்யப்பட்ட முடி, பேண்ட், ஷர்டில் அடக்கமாக தூங்குபவனை போல் படுத்திருந்தான். இது போன்ற பல மரணங்களை பார்த்திருக்கக் கூடியவர் தான், ஆனால் டாக்டர் வானொலி அவர்களுக்கே வருத்தம் தாங்க முடியவில்லை. முன்னாள் ச.ம.உ அய்யா ஆறுமுகம் இரண்டு மணி நேரம் மருத்துவமனையிலேயே உட்கார்ந்துவிட்டார், வருத்தம் தாளாமல்.

ரமேஷை தான் எப்படி தேற்றுவது என்று தெரியவில்லை. ஒரே மகன் மணீஷ். பிரிந்துவிட்டான். தன் சொல்லால் மகன் மரித்தானோ என மனைவி அரளி விதை குடித்து உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில்....

போஸ்ட்மார்ட்டத்திற்காக மருத்துவமனையில் காத்திருந்த  நேரத்தில் பார்த்தோரெல்லாம் அவன் பெருமையே பேசினர். எல்லோர் உள்ளங்களிலும் குடி கொண்டவன், இன்று உலகில் குடியில்லை.

# குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுவோமே....


செவ்வாய், 24 செப்டம்பர், 2013

சிமெண்ட் ஆலைகளும் மாறி வரும் தொழில் நுடபமும்....

இன்று ஒரு வேலையாக அரியலூர் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் சிமெண்ட் ஆலைக்கு சென்றிருந்தேன். மிக சமீபத்தில், நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலைக்கு ஆய்வுக் குழுவில் சென்றிருந்த நினைவு வந்தது.

                            

தன்னிச்சையாக இரண்டு ஆலைகள் குறித்த ஒப்பீட்டுக் காட்சி மனதில் ஓடியது. plant மற்றும் machineries குறித்த ஒப்பீட்டை ஒதுக்கி அலுவலகம் குறித்து மாத்திரம் இங்கே சொல்ல விழைகிறேன்.

அரசு ஆலையில் தலைமை நிர்வாகி அறை தனியாக. மற்றப் பிரிவுகளுக்கு தனித்தனி அறை. இண்டர்காமில் பேசிக் கொள்ளலாம், அல்லது ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு வந்து பேச வேண்டும். எல்லா அறைகளிலும் அறை முழுதும் பீரோ மற்றும் மேசை. மேசை நிறைய ஃபைல்கள், கத்தை கத்தையாக பேப்பர்கள். அரிதாக கணினி.

                            

தனியார் ஆலையின் அலுவலகத்தினுள் நுழைந்தால் ஐ.டி அலுவலகத்திற்கு வந்த உணர்வு. மிக பிரம்மாண்டமான ஹாலில் இடுப்பளவு மறைக்கப்பட்ட கியுபிக்கிள்ஸ், அதில் ஒவ்வொருவரும் லேப்டாப்புடன். எங்கும் பேப்பர் கண்ணில் படவில்லை.

இரண்டு. மூன்று அறைகள் நிர்வாகிகளுக்கு, அவை பாதியளவு கண்ணாடியாலான சுவர் கொண்டவை. அதில் ஒரு அறை தலைமை நிர்வாகி அறை. அங்கிருந்து அலுவலகம் முழுதையும் கண்காணிக்கலாம்.

ஹாலின் கடைசியில் கண்ணாடியால் தடுக்கப்பட்ட பெரியளவு அறையில் ஹாலிவுட் படத்தில் வருவது போல பெரிய, பெரிய மானிட்டர்கள். அதனை மூன்று பேர் கண்காணித்துக் கொண்டிருந்தனர். ஆலையின் மொத்த நடவடிக்கையும் இங்கிருந்து கண்காணிக்கப்படுகிறது, கட்டுப்படுத்தப்படுகிறது.

சுரங்கத்தில் இருந்து வருகிற சுண்ணாம்புக்கல் தரம் அறிவதிலிருந்து, கலவை விகிதாச்சாரம் சரி செய்வதிலிருந்து ஒவ்வொரு நடவடிக்கையும் அலுவலகத்தில் இருந்தே நடக்கிறது. அரசு ஆலையில் இது அத்தனையும் பிளாண்டில் நடைபெறும்.

அடுத்து முழு சுவரும் கண்ணாடியாலான ஒரு கண்ணாடி கான்ப்ரன்ஸ் அறை. அதில் கிட்டத்தட்ட 20 பேர் கொண்ட கூட்டம் நடந்துக் கொண்டிருந்தது. அது தினம் நடக்கும் கூட்டமாம், முதல் நாள் நடவடிக்கைகளை ஆய்ந்து மறுநாள் நடவடிக்கைகளை திட்டமிடும் கூட்டம். இது போன்ற கூட்டம் அரசு ஆலையில் மாதம் ஒரு முறை நடைபெறும் என நினைக்கிறேன்.


                               

நவீனப்படுத்தப்பட்டதால் அரசு ஆலையை விட 50% குறைவான மனித சக்தியை கொண்டு தனியார் ஆலைகள் இயக்கப்படுகின்றன. அந்த வேலைகளும் காண்டிராக்டாக விடப்படுகிறது. இது ஒரு புறம் வேலைவாய்ப்பு இழப்பு, இன்னொரு புறம் நிறுவனத்திற்கு லாபம்.

இத்தனை நவீன வசதிகளோடும், எளிய நடைமுறைகளோடும் தனியார் ஆலைகள் லாபகரமாக இயங்குகின்றன. அரசு ஆலைகள் சிவப்பு நாடாக்களில் கட்டப்பட்டு தள்ளாடுகின்றன. (ஆனால் எங்கள் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை ஆறு ஆண்டுகளுக்கு மேலாக லாபத்திலேயே இயங்குகிறது, ஆனால் அரசின் ஆலங்குளம் ஆலை நட்டம்)

# அரசு துறைகளிலும் நவீனமயம் தேவை, மெல்ல மெல்லவாவது....